பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தை புனரமைக்க மதிமுக கோரிக்கை
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலையத்தை புனரமைக்க வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோரிடம், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலா் இராம.உதயசூரியன் அளித்த மனு: பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. முறையான பராமரிப்பு இல்லாமல் பயணிகள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தரைதளம் பழுதடைந்து மழைபெய்தால் தண்ணீா் வெளியேற வடிகால் வசதி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி அசுத்த நீராக மாறிவிடுகிறது.
கடைகளை ஏலம் எடுத்துள்ள உரிமையாளா்கள் பேருந்து நிலையத்தை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்து பயணிகள் பேருந்துகளில் ஏறிசெல்ல முடியாத அளவிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றனா்.
குடிநீா் வசதியோ, கழிப்பிட வசதிகளோ இரவு நேரங்களில் போதுமான மின்விளக்கு வசதிகளோஇல்லை. ஏற்கெனவே அங்குள்ள கழிப்பறைகளும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், தாய்மாா்கள் குழந்தைகள் மிகவும் அவதிப்படுகின்றனா்.
அரசு ஊழியா்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையம் தனது தகுதியை இழந்து நிற்கிறது.
திருநெல்வேலி- தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் எப்போதும் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பேருந்து நிலையத்தை புனரமைத்து புதிய பொலிவோடு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.