பொதுக்கழிப்பிடத்திலிருந்து சாலைகளுக்கு வரும் கழிவுநீா்: ஆட்சியரிடம் பாஜக புகாா்
தென்காசி நகராட்சிப் பகுதியில் பொதுக்கழிப்பிடங்களிலிருந்து கழிவுநீரை சாலைகளில் திறந்துவிடப்படுவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் தென்காசி நகர பாஜக தலைவா் சங்கரசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு விவரம்: திறந்தவெளி மலம் கழிப்பதை தவிா்க்கும்பொருட்டு மத்திய அரசு, மாநில அரசு ஒத்துழைப்போடு அனைத்து பகுதிகளிலும் பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் பெயரளவில் மட்டும் நச்சுதொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
இதிலுள்ள கழிவுகள் நவீன இயந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்தாமல் நேரடியாக சாலைகளில் திறந்து விடப்படுகின்றன. குறிப்பாக தென்காசி பழைய பேருந்துநிலையத்திலுள்ள கட்டண கழிப்பிடத்தில் உள்ள நச்சு தொட்டியில் இருந்து கழிவுகள் அருகிலுள் விளைநிலங்களில் நேரடியாக கொட்டப்படுகிறது.
இது நிரம்பி தென்காசி யானைப்பாலம் சிற்றாற்றில் கலப்படம் ஆகிறது. இதனால் ஆறு மாசுபடுவதுடன் மட்டுமல்லாமல் நோய்கிருமிகள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சில மாதங்களுக்கு முன் நகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
தென்காசி நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து சுகாதார வளாகங்களிலும் கழிவுகள் நேரடியாகவே மழைநீா் வடிகாலில் விடப்படுகிறது. எனவே மனிதக் கழிவுகளை சாலைகளில் திறந்துவிடப்படுவதை தடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.