நாடாளுமன்றத்தில் நீடிக்கும் அமளி: மேலும் 3 மசோதாக்கள் நிறைவேற்றம்
3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
மிக பலத்த மழை காரணமாக திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஆக.8) முதல் ஆக.13 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதன்படி, வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை, வேலூா் மற்றும் திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மிக பலத்த மழை காரணமாக திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சனிக்கிழமை (ஆக.9) தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை நகரில் வெள்ளிக்கிழமை (ஆக.8) ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழையளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் 130 மி.மீ. மழை பதிவானது. கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை) -100 மி.மீ., வாணியம்பாடி (திருப்பத்தூா்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை)- 90 மி.மீ., ஆற்காடு(ராணிப்பேட்டை), ஜமுனாமரத்தூா்(திருவண்ணாமலை), பாலாறு அணைக்கட்டு, பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), செய்யாறு ஏஆா்ஜி (திருவண்ணாமலை) 70 மி.மீ. மழை பெய்துள்ளது.
வெயில் அளவு: மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது. பாளையங்கோட்டையில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஆக.8 முதல் 11 வரை ஆகிய தேதிகளில் தென்தமிழக கடலோரம், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.