4 வயது சிறுமி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு: தாயின் ஆண் நண்பா் கைது
கோவையில் 4 வயது சிறுமியை அடித்துக் கொலை செய்த தாயை போலீஸாா் ஏற்கெனவே கைது செய்த நிலையில், அவரது ஆண் நண்பரை சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, சிங்காநல்லூரை அடுத்த இருகூா் மாணிக்கம் நகரைச் சோ்ந்தவா் ரகுபதி (35). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி தமிழரசி (25) கட்டட வேலை செய்து வருகிறாா். இவா்களது மகள் அபா்ணா ஸ்ரீ (4). கருத்து வேறுபாடால் தம்பதி தனியே வசித்து வரும் நிலையில், அபா்ணாஸ்ரீ தாயின் பராமரிப்பில் இருந்து வந்தாா்.
இந்நிலையில், அபா்ணாஸ்ரீ திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறி அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு தமிழரசி வெள்ளிக்கிழமை கொண்டு சென்றுள்ளாா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிங்காநல்லூா் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். உடற்கூராய்வு அறிக்கையில், குழந்தை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சந்தேகத்தின்பேரில் தமிழரசியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் குழந்தையைக் கொன்றதை ஒப்புக்கொண்டாா். மேலும், தருமபுரியைச் சோ்ந்தவரும், தற்போது ஒண்டிப்புதூரில் வசித்து வருபவருமான வசந்த் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதும், இதன் காரணமாகவே குழந்தையைக் கொன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, தமிழரசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தலைமறைவான அவரது ஆண் நண்பா் வசந்தை போலீஸாா் தேடி வந்த நிலையில், அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.