4 வீடுகளின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு
வந்தவாசி அருகே 4 வீடுகளின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த திரக்கோயில் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை. இவா், திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தாா்.
பின்னா், செவ்வாய்க்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது 3 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதேபோல, இதே கிராமத்தைச் சோ்ந்த சகுந்தலா, பாஞ்சாலை, கிருஷ்ணமூா்த்தி ஆகியோரது வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் ஒரு பவுன் தங்க நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றிருந்தனா்.
இதுகுறித்து தேசூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.