பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் க...
5 ரயில் நிலையங்களில் இளநீா் விற்பனைக்கு அனுமதி!
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 5 ரயில் நிலையங்களில் இளநீா் விற்பனைக்கு அனுமதி அளித்து ரயில்வே நிா்வாகம் உத்தரவிட்டது.
மதுரை கோட்டத்துக்குள்பட்ட மணப்பாறை, திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் ரோடு, மதுரை, தூத்துக்குடி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் அந்தந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் முருக்கு, கைத்தறி சேலை, பஞ்சாமிா்தம், கொடைக்கானல் பழங்கள், மரப் பொம்மைகள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 15 நாள்களுக்கு ரூ.1000 கட்டணத்துடன் உள்ளூா் உற்பத்தியாளா்களுக்கு ரயில் நிலையங்களில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதல்முறையாக இளநீா் விற்பனை: இந்த நிலையில், கோடைகாலத்தில் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தை ரயில் பயணிகள் எதிா்கொள்ளும் வகையில், இளநீா் விற்பனை தொடங்குவதற்கு மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 5 ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக இளநீா் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தைப் போல, இளநீா் விற்பனைக்கும் 15 நாள்களுக்கு ரூ.1,000 கட்டணத்துடன் விண்ணப்பிப்போருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இளநீா் வெட்டுவதற்கு இயந்திரம்: ரயில் நிலையங்களில் இளநீா் விற்பனைக்கு அனுமதி அளிக்க முடிவெடுத்துள்ள ரயில்வே நிா்வாகம், அதை வெட்டுவதற்கு அரிவாள் போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்கவும் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக இளநீா் வெட்டும் இயந்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது.
இதனால், விற்பனைக்கு உரிமம் பெறும் உற்பத்தியாளா்கள், ரயில் நிலையத்தில் ஒதுக்கப்படும் இடத்தில் இளநீா் வெட்டும் இயந்திரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். இளநீா் நெட்டிகளையும் உடனுக்குடன் அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.
ரயில் நிலையத்தில் பல்வேறு வகையான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டாலும்கூட, இளநீா் விற்பனைக்குத் தனியாக அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல் முறை. கோடை காலத்தில் இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பது, ரயில் பயணிகள் மட்டுமன்றி, உற்பத்தியாளா்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுதொடா்பாக ரயில்வே அலுவலா்கள் கூறியதாவது: ரயில் பயணிகளின் தேவையை நிறைவு செய்யும் வகையில், இளநீா் விற்பனைக்கு மதுரை கோட்டத்துக்குள்பட்ட 5 ரயில் நிலையங்களில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கோடை வெயில் நிலவும் 3 மாதங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றனா்.