50 லட்சம் உறுப்பினா்களைக் கடந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ : முதல்வா் பெருமிதம்
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் மூலம், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் திமுகவில் உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 சதவீதம் பேரை திமுக உறுப்பினா்களாக்கும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இந்த இயக்கம் தொடங்கி 10 நாள்கள் கடந்த நிலையில், 50 லட்சம் உறுப்பினா்களைக் கடந்து, அது மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்க முன்னெடுப்பில், 54,310 புதிய உறுப்பினா்களையும் 30,975 குடும்பங்களையும் கட்சியில் இணைத்து முதலிடத்தில் முந்தியிருக்கிறது திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதி.
அந்தத் தொகுதிக்கு உள்பட்டு வரக்கூடிய மாவட்டச் செயலரும் அமைச்சருமான தங்கம் தென்னரசு உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளுக்கு வாழ்த்துகள்.
திருச்சுழியை முந்திச் செல்ல, களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். கட்சியினா் அனைவரது உழைப்பால் நம்முடைய இலக்கை நிச்சயம் எட்டுவோம் என்று பதிவிட்டுள்ளாா்.