6 ஆண்டுகளாக பாலியல் குற்றங்களுக்கு பிரிட்டன் பிரதமர் உடந்தை: எலான் மஸ்க் குற்றச்சாட்டு!
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வழக்கு இயக்குநராக இருந்தபோது, பாலியல் குற்றங்களில் உடந்தையாக இருந்ததாக எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரிட்டனில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது என்பது பல ஆண்டுகளாக பல தீவிர வலதுசாரி அமைப்பினரால் எழுப்பப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய பிரச்னையாகும். மேலும், 16 ஆண்டுகளில் 1400 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே நிலவி வருகிறது.
பெரும்பாலும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களால்தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரிட்டனின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் இதற்கு காரணமென்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது ``ஸ்டார்மர் 6 ஆண்டுகள் வழக்குத் தலைவராக இருந்தபோது பிரிட்டன் பாலியல் வழக்குகளில் உடந்தையாக இருந்தார். ஸ்டார்மர் வெளியேற வேண்டும், பிரிட்டனின் வரலாற்றில் மிக மோசமான குற்றத்தில் உடந்தையாக இருந்ததற்காக, அவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
தற்போது பிரதமராக உள்ள கெய்ர் ஸ்டார்மர், முன்னதாக 6 ஆண்டுகள் வழக்கு விசாரணையின் இயக்குநராக இருந்தார். கெய்ர் ஸ்டார்மர் மீதான எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டை பிரிட்டன் அரசு மறுத்துள்ளது. மேலும், தவறான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.