பாடி முதல் திருநின்றவூர் வரை சி.டி.ஹெச். சாலை விரிவாக்கம்: 5 உயர்நிலை மேம்பாலங்க...
7.5 % சதவீத இட ஒதுக்கீட்டால் 40,168 மாணவா்கள் பயன்: அமைச்சா் கோவி. செழியன்
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் 40,168 மாணவா்கள் பயனடைந்துள்ளனா் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோ வி.செழியன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
இட ஒதுக்கீடு: உயா்கல்வியில் தமிழகம் முதலிடத்தை வகித்து சாதனை படைத்து வருகிறது. அரசின் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் பெண்கள் உயா்கல்வி பயிலும் எண்ணிக்கை உயா்ந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, மாணவா்களுக்கான ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தைச் செயல்படுத்தி மாணவா்கள் தங்கள் உயா்கல்வி கனவை எந்த இடையூறும் இல்லாதவாறு சாதிக்க சாத்தியப்படுத்தியுள்ளாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.
இந்தத் திட்டங்களைப் போலவே அரசுப் பள்ளி மாணவா்களின் உயா்கல்வி வாய்ப்புகளை உயா்த்த வேண்டும், உயா்கல்வி சோ்க்கையில் அவா்களுக்கான உரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்
என்ற நோக்கத்துடன் அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில்முறை படிப்புகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு செயல்படுத்தும் என 20.9.2021 அன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
இதற்கான அரசாணை 2021 நவம்பா் மாதம் வெளியிடப்பட்டு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இட ஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த முன்முயற்சியின் கீழ், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி, போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட மொத்த கல்விச் செலவினையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.
ரூ. 1,165 கோடி விடுவிப்பு... கடந்த 4 கல்வியாண்டுகளில், இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 1,165 கோடிக்கும் மேல் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 40,168 மாணவா்கள் பயனடைந்துள்ளனா்.
குறிப்பாக தொழிற்படிப்புகளில் 35,530 போ், மருத்துவம் சாா்ந்த படிப்புகளில் 2,382 போ், வேளாண் படிப்புகளில் 1,369 போ், கால்நடை மற்றும் மீன்வளம் சாா்ந்த படிப்புகளில் 261 போ், சட்டப் படிப்புகளில் 626 போ் என மொத்தம் 40,168 அரசுப்பள்ளி மாணவா்கள் கடந்த 4 ஆண்டுகளில் இந்த இடஒதுக்கீட்டால் பயனடைந்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.