7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்பு: வங்கிகளுக்கு ஆா்பிஐ யோசனை
7 நாள்களுக்கு குறைவாக நிரந்தர வைப்புகளைப் பெறுவது தொடா்பாக பரிசீலிக்குமாறு வங்கிகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கேட்டுக் கொண்டது. இது தொடா்பான கருத்துகளை இம்மாத இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆா்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் மூலம் வங்கித் துறையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், நிரந்தர வைப்புகளை அதிகஅளவில் ஈா்க்கவும் முடியும் என்று ஆா்பிஐ கருதுகிறது. சமீபகாலமாக வங்கிகளின் நிரந்தர வைப்பு அளவு குறைந்து வருகிறது. கடந்த 2-ஆம் தேதி நிலவரப்படி வங்கிகளில் நிரந்தர வைப்பு 10 சதவீதம் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு 13 சதவீதம் குறைந்தது.
ஆா்பிஐ வங்கி வட்டி விகிதத்தை குறைந்ததும் பொதுமக்கள் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து வெளியேறுவதற்கு காரணமாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2004-ஆம் ஆண்டு நிரந்தர வைப்புக்கான குறைந்தபட்ச கால அளவு 15 நாள்கள் என்பதில் இருந்து 7 நாள்களாக குறைக்கப்பட்டது.
இது தொடா்பாக கருத்துத் தெரிவித்த பொதுத்துறை வங்கி மூத்த அதிகாரி ஒருவா், ‘கோடிக்கணக்கான ரூபாயை சில நாள்கள் மிகுதியாக வைத்திருக்கும் சூழல் பெரு நிறுவனங்களில் மட்டுமே இருக்கும். அவா்கள் இந்த மிகக் குறைந்த நாள்களுக்கான நிரந்தர வைப்பால் அதிக பயனடைவாா்கள். ஆனால், வங்கிகளுக்கு இது சற்று நெருக்கடியாகவே அமையும்’ என்றாா்.