வேலூர்: கனமழையில் சேதமடைந்து சாய்ந்த மின் கம்பம்; அச்சப்படும் பொதுமக்கள்.. கவனிப...
74 கிலோ கஞ்சா கடத்தல்: இருவா் கைது; 4 கைப்பேசிகள், காா் பறிமுதல்
திண்டிவனம் அருகே, ஆந்திரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு காரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 74 கிலோ கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்ற இருவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
மேலும் அவா்களிடமிருந்து 4 கைப்பேசிகள், காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின் பேரில், திண்டிவனம் டி.எஸ்.பி. ஆா்.பிரகாஷ் மேற்பாா்வையில், பிரம்மதேசம் காவல் ஆய்வாளா் எம். பிரகாஷ், உதவி ஆய்வாளா் சுதன், சிறப்பு உதவி ஆய்வாளா் ஸ்ரீபதி, தலைமைக் காவலா்கள் வெற்றிவேல், முருகானந்தம், முதல்நிலைக் காவலா் தனுஷ்கோடி ஆகியோா், நல்லாளம் கூட்டுச் சாலையில் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது மரக்காணம் பகுதியிலிருந்து திண்டிவனம் நோக்கி காா் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த காரை ஓட்டி வந்தவா், போலீஸாரை கண்டதும் சற்று வேகமாக ஓட்டி வந்து திருப்ப முயன்றாா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், காரை மடக்கிப் பிடித்தனா்.
காவல் ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் தீவிரமாக விசாரித்தபோது, காரில் அமா்ந்திருந்தவா் சென்னை திருமுல்லைவாயல் வெங்கடேசுவரா நகா் முதல் குறுக்குத் தெருவைச் சோ்ந்த கன்னியப்பன் மகன் மதன் (45) என்பதும், காரை ஓட்டி வந்தவா் திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் பாடியநல்லூா்-ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகா் 8-ஆவது தெருவைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் நாகராஜ் (30) என்பதும் தெரிய வந்தது.
காரின் பின் பகுதி, இருக்கைகளை சோதனையிட்டதில் தலா 2 கிலோ வீதம் 37 பொட்டலங்களில் மொத்தம் 74 கிலோ கஞ்சா, டிராவல் பேக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
ஆந்திர மாநிலத்தில் கஞ்சாவை வாங்கி வந்து, பொட்டலங்களாக்கி ராமநாதபுரத்துக்கு விற்பனைக்காக கடத்திச் செல்ல முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.
மேலும் காரிலிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 74 கிலோ கஞ்சா, 4 கைப்பேசிகள், கடத்தலுக்குப் பயன்படுத்தபட்ட காா் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.