8-ஆவது நாளாக பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டம்
பணி நிரந்தரம் என்ற ஒற்றைக் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சென்னையில் 8-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் தெரிவித்தனா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் தங்களுக்கு ஊதிய உயா்வு கோரி கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுகவின் தோ்தல் அறிக்கையில், பகுதிநேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், எதிா்க்கட்சியாக இருந்தபோது திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு அவா்களுக்கு ஆதரவும் தெரிவித்தாா்.
இதையடுத்து திமுக ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையில், தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியா்கள் கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்து வருகின்றனா்.
தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை 8-ஆவது நாளாக பகுதிநேரஆசிரியா்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தை (டிபிஐ) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது உயிரிழந்த ஆசிரியருக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.