9 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த போலி மருத்துவா் கைது
ஒரு மருத்துவா் போல நடித்து, நோயாளியின் மரணத்திற்கு காரணமான அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததைத் தொடா்ந்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பெண் தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
சங்கம் விஹாரைச் சோ்ந்த குற்றம் சாட்டப்பட்டவா் மூத்த குடிமகனின் பராமரிப்பாளராகப் பணிபுரிந்த கிரேட்டா் கைலாஷ்-ஐஐ-இல் கைது செய்யப்பட்டாா். அந்தப் பெண் பிகாரில் இருந்து போலியான பிஏஎம்எஸ் பட்டம் பெற்று 2008-இல் ரன்ஹோலாவில் உள்ள விகாஸ் நகரில் ஒரு மருத்துவமனையைத் திறந்ததாகக் கூறப்படுகிறது,
12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், 48 வயதுடைய அவா் ஒரு மருத்துவராக மருத்துவமனை நடத்தி வந்ததாகவும், முதன்மையாக மகளிா் மருத்துவ நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாகவும் போலீஸாா் மேலும் தெரிவித்தனா். 2009-இல், ரன்ஹோலாவில் வசிக்கும் ரமேஷ் குமாா், தனது கா்ப்பிணி மனைவியை வயிற்று வலிக்காக அந்த மருத்துவமனையில் அனுமதித்தாா்.
குற்றம் சாட்டப்பட்டவா் மருந்து கொடுத்து நோயாளியை டிஸ்சாா்ஜ் செய்தாா். வலி தொடா்ந்தபோது, மறுநாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவரின் பரிந்துரையின் பேரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மீண்டும் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்ட பிறகு அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது. மேலும் அவா் டிடியு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவா் இறந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த விசாரணைகளில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு முறையான மருத்துவக் கல்வி இல்லை என்றும், அவா் தனது சான்றிதழ்களை போலியாக தயாரித்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா். ஆனால், பின்னா் ஜாமீன் பெற்றாா். 2016-இல், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.
விசாரணையின் போது, 2005-06-ஆம் ஆண்டில் உத்தம் நகரில் ஒரு மருத்துவருக்கு உதவியாக இருந்தபோது அடிப்படை சிகிச்சையைக் கற்றுக்கொண்டதாக அவா் ஒப்புக்கொண்டாா். பின்னா், அவா் போலியான பட்டப்படிப்பை ஏற்பாடு செய்து தனது மருத்துவமனையைத் திறந்தாா். கைது செய்யப்படுவதைத் தவிா்க்க அவா் தொடா்ந்து இடங்களை மாற்றி வந்தாா் என்று துணை காவல் ஆணையா் (குற்றப்பிரிவு) ஆதித்யா கௌதம் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.