தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி ஆயுதப் படை காவலா் உயிரிழப்பு
Adyar park: சுட்டிக்காட்டிய விகடன்; பயன்படுத்த முடியாத நிலையிலிருந்த பூங்காவை சீரமைக்கும் அதிகாரிகள்
சென்னை அடையாறு, இந்திரா நகரில் (வார்டு 170 , மண்டலம் 13 ,பகுதி 40 ) அமைந்துள்ளபெருநகர மாநகராட்சி பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு திடலில் இருக்கும் விளையாட்டு உபகரணங்கள் ஒன்று கூட பயன்படுத்தும் நிலையில் இல்லை. பழுதடைந்தும் குப்பை கூளங்களுடன் மிகவும் அசுத்தமாகவும் காணப்படுகிறது. அதே போல், பெரியவர்கள் பயன்படுத்தும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தில் அமைந்துள்ள பயிற்சி கருவிகள் பறவைகளின் எச்சங்களுடன், அழுக்கு படிந்து மோசமான நிலையில் உள்ளது. ஓய்வுக்காக அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கையில், பாதிக்கு மேல் மேற்கூரை இல்லாமல் இருப்பதால் பறவைகளின் எச்சம் அளவுக்கு அதிகமாக சிதறி காணப்படுவதால், அந்த இருக்கையில் உட்கார முடியாத அளவுக்கு அசுத்தமாக உள்ளது.
சில இருக்கைகள் நிழற்குடைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் நடைமேடையில் இருந்து இரண்டு அடி தள்ளி சற்று பள்ளத்தில் அமைந்துள்ளதால் வயதானவர்களோ முடியாதவர்களோ அங்கே இறங்கி அமருவதற்கு சிரமப்படுகிறார்கள்.

மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிப்பதால் யாராலும் இது போன்ற இருக்கைகளை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள அறைகளின் கதவுகள் கழற்றி வைக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது போன்ற பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி நமது விகடன் இணையதளத்தில் Adyar park: பயன்படுத்த முடியாத நிலையில் பெருநகர பூங்கா... நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி? என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தோம்.
கட்டுரை வெளியான சில தினங்களில் மாநகராட்சி அதிகாரிகளின் ஆய்விற்குப் பிறகு, பராமரிப்பு பணிகள் துவங்கியதை சில சமூக ஆர்வலர்கள் மூலம் அறிந்தோம் . தற்போது நாம் சுட்டிக்காட்டிய பெரும்பாலான குறைகளை மாநகராட்சி நிர்வாகம் நிவர்த்தி செய்துள்ளதை FOLLOW - UP விசிட் மூலம் காண முடிந்தது . அதன்படி பெரியவர்கள் பயன்படுத்தும் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடத்தில் அமைந்துள்ள பயிற்சி கருவிகள் பறவைகளின் எச்சங்களுடன், அழுக்கு படிந்து மோசமான நிலையில் உள்ளதை சுட்டிக்கட்டியிருந்தோம் . தற்போது , உடற்பயிற்சிக் கூடம் நிரந்தரமான கூடாரம் அமைக்கப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.
ஓய்வுக்காக அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கையில் பாதிக்கு மேல் மேற்கூரை இல்லாமல் இருப்பதால் பறவைகளின் எச்சம் அளவுக்கு அதிகமாக சிதறி காணப்படுவதால், அந்த இருக்கையில் உட்கார முடியாத அளவுக்கு அசுத்தமாக இருந்ததையும் இருக்கைகள் நடைமேடையில் இருந்து இரண்டு அடி தள்ளி சற்று பள்ளத்தில் அமைந்துள்ளதால் வயதானவர்களோ முடியாதவர்களோ அங்கே இறங்கி அமருவதற்கு சிரமப்படுவதையும் பதிவு செய்திருந்தோம். தற்போது அனைத்து சாய்வு இருக்கைகளும் கூடாரம் அமைக்கப்பட்டு சுட்டிக்காட்டிய பள்ளமும் இடைவெளியும் சமவெளியாக்கி நடைபாதையுடன் இணைக்கப்பட்டு வயதானவர்கள் எளிதில் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது .











சிறுவர் விளையாட்டு திடலில் இருக்கும் விளையாட்டு உபகரணங்கள் தற்போது ஓரளவிற்கு சுத்தம் செய்யப்பட்டிருக்கின்றன.
நடைப்பயிற்சியில் இருந்த சில மூத்த குடிமக்களிடம் பேசினோம். ``ரொம்ப காலமா இங்கு வாக்கிங் வருகிறோம். இங்குள்ள இருக்கைகளை அவ்வளவு சுலபமா எங்களால் பயன்படுத்த முடியாத மாதிரி இருந்தது. ரிப்போர்ட்டர்ஸ் யாரோ இது சம்பந்தமா எழுதியிருக்காங்க .. கடந்த மூணு மாசமா ஏதாவது ஒரு வேலை நடந்துக்கிட்டே இருக்கு" என்றனர்.