Ajith: 'இங்குள்ள ரேஸர்களுக்கு என்னைப் பற்றி தெரியாது, ரசிகர்கள் மூலம்தான் தெரியும்'- நடிகர் அஜித்
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.
‛குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் ‛அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்றிருக்கிறது.
இந்நிலையில் நேற்று (செப்.28) நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3-ம் இடம் பிடித்து சாதித்திருக்கிறது.

3ம் இடத்தை பிடித்த அஜித்குமார் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித்குமார் 'India Today'-விற்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அதில், "ஒரு இந்தியனாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பதிலும் பெருமைப்படுகிறேன்.
அதேபோல கார் ரேஸர் ஆக நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் பெருமை அடைகிறேன்.
உண்மையிலேயே நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் இங்குள்ள ரேஸர்களுக்கு அவ்வளவாக என்னைப் பற்றி தெரியாது.
துபாய், பெல்ஜியம் போன்ற இடங்களுக்கு ரசிகர்கள் என்னைப் பார்க்க வருவதை வைத்துதான் அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும்.
அதன்பிறகு இந்திய படங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு வந்தது.

எப்படி படங்களை எடுக்கிறார்கள். இந்தியாவில் எத்தனை மொழிகளில் படங்களை எடுக்கிறார்கள் என்று நிறைய கேள்விகளை என்னிடம் கேட்பார்கள்.
நாங்கள் பல மொழிகளில் படங்களை உருவாக்குகிறோம் என்று பெருமையாக சொல்வேன்" என்று கூறியிருக்கிறார்.