தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!
Battle of the Sexes: பெண்கள் சம உரிமைக்காக ஆணுடன் போட்டிபோட்ட வீராங்கனை - பில்லி ஜீன் கிங்கின் கதை!
மனித பரிமாணத்தின் பகுதியாகவே சமூக கட்டமைப்பு உருவாகிறது. நாகரிகங்களின் தொடக்கம் முதல் இந்த கட்டமைப்பு பல்வேறு நிலைகளில், பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்குமான பொறுப்புகள் ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் வேறுபட்டிருந்தன.
அப்படி ஒரு கட்டத்தில் அடிமைகளும், சமூகத்தில் தாழ்ந்தவர்களும், உயர்ந்தவர்களும் உருவாகினர். இந்த நிலைமை இன்றும் உலகில் தொடர்கிறது. இப்படியாக உயர்வு–தாழ்வு கட்டமைக்கப்படுவதில் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். வரலாற்றின் ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி இன்றுவரை பெண்களுக்கு எதிரான கதைகள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் சொல்லப்பட்டு வருகின்றன.
இந்த நீண்டகால பயணத்தில், கடந்த நூற்றாண்டில் பெண்கள் அடைந்த முன்னேற்றம் கணிசமானது. ஆனால் இதற்காக பட்ட பாடுகள் சொல்லமுடியாதது. மேற்குலகிலும் பெண்களைப் பொருட்படுத்த வலியுறுத்தி நடந்த போராட்டங்களே எக்கச்சக்கம். ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கான இடத்தைப் பெற்றுக்கொடுக்க நாயகிகள் உருவாகினர்.
அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிய கதையே இது. விளையாட்டு இவரது களம். இவர் செய்தது பாலினங்களுக்கு இடையிலான போர் — Battle of the Sexes!
பில்லி ஜீன் கிங்
பில்லி ஜீன் கிங் 1943 நவம்பர் 22 அன்று பிறந்தவர். 11 வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கி, 15 வயதிலேயே தொடர்களை வென்று கோப்பைக்காரியாக விளங்கினார்.
22 வயதில் உலகின் நம்பர் ஒன் பெண் வீராங்கனை என்ற இடத்தைப் பிடித்தார். அமெரிக்க பெண்களின் அடையாளமாகக் கருதப்பட்டார். புகழின் உச்சியில் சுழன்றார்; அவர் மைதானத்துக்குள் வந்தாலே கமெண்டேட்டர்கள் புகழ்ச்சி மழைப்பொழிந்தனர். பண மழையும் பொழிந்தது. 1971ம் ஆண்டு ஒரே தொடரில் ஒரு லட்சம் டாலர்கள் சம்பாதித்தார். ஆனால், இவையெல்லாவற்றையும் தாண்டி பில்லி ஜீன் ஒன்றையே கோரினார்… அது, சமத்துவம்.

நம் சமூகத்தில் காண்பதை விட, மேற்கு நாடுகளில் ஆணாதிக்கத்தின் வடிவம் கொஞ்சம் வித்தியாசமானது. பெண்கள் படிக்கலாம், பணியாற்றலாம். ஆனால் உயர்பதவிகளில் அமர முடியாது; சமூகத்தில் முதன்மைக் குரலாக இருக்க முடியாது. பெண்களுக்கு மரியாதையான பாத்திரங்கள் கொடுக்கப்படும், ஆனால் அது ஆண்களின் கதைக்குள் மட்டுமே. உலகை நடத்துபவர்கள் ஆண்களாகவே இருந்தனர்.
டென்னிஸ் போட்டிகளில் ஆண்களுக்கு பரிசுத்தொகை அதிகமாக இருந்தது. இது இன்றும் அப்படித்தானே இருக்கிறது என நினைக்கலாம்... ஆனால் பில்லி ஜீன் கிங் விளையாடியபோது பெண்களின் போட்டிக்கும் ஆண்களின் போட்டிக்கு இணையாக டிக்கெட்டுகள் விற்றன. இருந்தபோதிலும், “ஆண்கள்தான் கூட்டத்தை இழுத்துவருகிறார்கள்”, “ஆண்களின் போட்டிதான் கடுமையானது, சுவாரஸ்யமானது” எனக் கூறி, பெண்களுக்கு சம அளவு பரிசுத்தொகை வழங்க மறுத்தனர்.
பில்லி ஜீன் ஆண்கள் வலுவானவர்கள், வேகமானவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஆண்களைவிட 8 மடங்கு குறைவாக பரிசுத்தொகை பெறுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. “தனியாக ஒரு டென்னிஸ் தொடரை நடத்திக்காட்டுவேன்” என்று சவால் விட்டார்.
1971ம் ஆண்டு வர்ஜீனியா ஸ்லிம்ஸ் சர்க்யூட் (Virginia Slims Circuit) என்ற தொடரை சம ஊதியம் கோரும் பெண்களுக்காக அவர் நடத்தினார். தோட்டாக்களோ, பீரங்கிகளோ இல்லாமல், டென்னிஸ் ராக்கெட்டும் பந்தும் கொண்டு மைதானத்தில் வெடித்தது அவரது புரட்சி.
அதன் விளைவாக, பில்லி ஜீன் கிங் மற்றும் அவருடன் விளையாட சம்மதித்த 8 பெண்கள் நாட்டிலேயே முதன்மையான யுனைடெட் ஸ்டேட்ஸ் லான் டென்னிஸ் சங்கத்திலிருந்து (USTA – United States Lawn Tennis Association) நீக்கப்பட்டனர். இந்த பெண்கள் “Original 9” என அழைக்கப்பட்டனர்.
அந்தக் காலத்தில் USTA பெண்கள் தொடருக்கு கொடுத்த பரிசுத்தொகை 1,500 டாலர்கள்; ஆண்கள் தொடருக்கோ 12,000 டாலர்கள். ஆனால் வர்ஜீனியா ஸ்லிம்ஸ் சர்க்யூட் போட்டிகளில் பெண்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை 7,500 டாலர்கள். இதுவே பில்லி ஜீன் கிங் அடைந்த முதல் வெற்றி.

Battle of the Sexes
55 வயதான பாபி ரிக்ஸ், ஆண்கள்தான் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டியவர்கள், எதிலும் சிறந்தவர்கள் என நம்பினார். அவர் ஒரு முன்னாள் சாம்பியன்; உலகிலேயே சிறந்த வீரராக இருந்தவர்.
சிங்கிள்ஸ், டபிள்ஸ், மிக்ஸ்ட் டபிள்ஸ் என எல்லா பிரிவுகளிலும் 3 முறை விம்பிள்டன் கோப்பையும், 6 முறை அமெரிக்க தேசிய சாம்பியன்ஷிப் கோப்பையும், ஃப்ரென்ச் ஓபன் உள்ளிட்ட பல பட்டங்களையும் வென்றிருக்கிறார்.
பொழுதுபோக்காக, சூதாட்டம் போல டென்னிஸ் விளையாடி வந்தார். பெண்கள் தனித்தொடர் நடத்துவதும், நியாயமான பரிசுத்தொகையும், சம மரியாதையும் கேட்பதும் நாடுமுழுவதும் பேச்சுப்பொருளாக இருந்தபோது, தன்னால் எந்த பெண்ணையும் வெல்ல முடியும் என அறிவித்தார்.
ஊடகங்களில், பெண்கள் படுக்கையறையிலும் சமையலறையிலும் மட்டுமே சிறப்பானவர்கள் எனக் கூறினார். எனினும், இவரது சவாலை பில்லி ஜீன் ஏற்கவில்லை.
பில்லி ஜீனை தோற்கடித்து, அப்போது நம்பர் ஒன் இடத்தில் இருந்த 30 வயது வீராங்கனை மார்கரெட் கோர்ட், பாபி ரிக்ஸின் சவாலை ஏற்றார்.
1973ம் ஆண்டு மே மாதத்தில் இருவருக்கும் இடையில் போட்டி நடந்தது. நாடுமுழுவதும் இருந்த பெண்கள் தங்கள் சார்பாக களமிறங்கியிருந்த மார்கரெட் தோற்கக் கூடாது என வேண்டினர். ஆனால் பாபி ரிக்ஸ் மிக எளிதாக 6–2, 6–1 என்ற கணக்கில் கோர்ட்டை வென்றார். அந்த நாள் “மதர்ஸ் டே மசாக்கர்” என அழைக்கப்படுகிறது.
தொடர்ந்து பாபி ரிக்ஸ், பெண்கள் பலவீனமானவர்கள், வீட்டுக்குள்ளே இருக்க வேண்டியவர்கள் என பல இடங்களில் பேசி வந்தார். இந்த நேரத்தில் பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பை (WTA) பில்லி ஜீன் கிங் தொடங்கினார். அதில் உலகம் முழுவதிலிருந்தும் 60 வீராங்கனைகள் கையெழுத்திட்டனர்.
மார்கரெட்டின் தோல்வி, ஒட்டுமொத்த பெண்களின் தோல்வியாகப் பிரசாரம் செய்யப்பட்டதால் பாபி ரிக்ஸின் சவாலை பில்லி ஏற்றார். அவர் ஒரிஜினல் 9-இன் தலைவராகக் கருதப்பட்டவர்; இப்போது கூட்டமைப்பின் நிறுவனர். பெண்களின் பிரதிநிதி என்பதால் 1 லட்சம் டாலர் பரிசுத்தொகைக்காக போட்டியை நடத்தத் திட்டமிட்டனர்.
Battle of the Sexes பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் முன்னணி ஒளிபரப்பாளரான ஏபிசி ஸ்போர்ட்ஸ் நேரலையில் ஒளிபரப்பியது. அரங்கம் நிரம்புமளவு 30,000 பேர் நேரில் பார்க்கத் திரண்டனர். சுமார் 9 கோடி பேர் தொலைக்காட்சியில் பார்த்தனர்; அன்றைய அமெரிக்க மக்கள்தொகையில் 40% பேர். அதுவரையிலான டென்னிஸ் வரலாற்றில் அதிகமானோர் பார்த்த போட்டி அதுதான்.
நாடு முழுவதிலும் இருந்து பெண்கள் பில்லி ஜீன் கிங்குக்கு ஆதரவளித்தனர். பில்லியின் வெற்றிதான் அவர்கள் சுதந்திரத்திற்கான, மரியாதைக்கான, உரிமைக்கான திறவுகோல். நாளைய கலாச்சாரத்தை வடிவமைக்கக்கூடிய ஒரு போட்டி. அப்போதைய அதிபர் நிக்சன், பில்லி ஜீனை அழைத்து “குட் லக்” சொன்னதாகக் கூறப்படுகிறது.
மைதானத்துக்குள் கிளியோபாட்ரா போல பல்லக்கில் நுழைந்தார் பில்லி. முதல் சர்வீஸிலேயே அரங்கத்தைத் தன்வசப்படுத்தினார். 55 வயதான பாபி ரிக்ஸ் — உலகின் தலைசிறந்த வீரராக இருந்தவர், மார்கரெட் கோர்ட்டை தோற்கடித்தவர் — மைதானத்தின் இடதும் வலமும் மூச்சு வாங்க ஓடினார். போட்டியை சுவாரஸ்யமாக்கி, பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டுவருமளவு சிறப்பாக ஆடினார்.
ஆனால் உரிமைக் குரல் எழுப்பும், ஒட்டுமொத்த பெண்களின் சம நீதிக்காக களத்தில் நின்ற பில்லி துடிப்பாக ஆடினார். எவ்வளவு களைப்பானாலும், அவரது தன்னம்பிக்கை குறையவில்லை. 5 சுற்றுகள் கொண்ட போட்டியில் 6–4, 6–3, 6–3 என முதல் மூன்று சுற்றிலேயே வெற்றியைத் தன்வசப்படுத்தினார். அன்று உலக பெண்கள் விளையாட்டின் உரிமைச் சின்னமாக மாறினார் பில்லி ஜீன் கிங்.
பாலினங்களுக்கு இடையிலான போர் உலகம் முழுவதும் பேச்சுப் பொருளானது. அதன்பிறகு பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பு (WTA) கவனம் பெற்றது. பெண்களுக்கான பரிசுத் தொகை அதிகரித்தது. பெண்கள் டென்னிஸுக்கான பார்வையாளர்களும் அதிகரித்தனர்.
1973-ல் அமெரிக்க ஓபன் போட்டியில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. We Have Come a Long Way: The Story of Women’s Tennis எனும் பாலின சமத்துவம் பற்றிய புத்தகத்தை 1988-ம் ஆண்டு வெளியிட்டார்.
Pressure is a Privilege: Lessons I’ve Learned from Life and the Battle of the Sexes எனும் பாலினங்களுக்கு இடையிலான போரைப் பற்றிய புத்தகத்தை 2008-ம் ஆண்டு வெளியிட்டார்.
All In: An Autobiography என்ற பெயரில் தனது வாழ்க்கைப் பயணத்தை விரிவான சுயசரிதையாக எழுதியுள்ளார். பில்லி ஜீன் பற்றியும் Battle of the Sexes பற்றியும் பல புத்தகங்கள் வெவ்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டுள்ளன.
பில்லி ஜீன் கிங் பெற்றுள்ள அங்கீகாரங்கள்
டென்னிஸ் வரலாற்றில் மிகச் சிறந்த வீராங்கனையாகக் கருதப்படும் பில்லி ஜீன் கிங், சிங்கிள்ஸ், டபிள்ஸ், மிக்ஸ்ட் பிரிவுகளில் ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், விம்பிள்டன், யூ.எஸ். ஓபன் ஆகிய தொடர்களில் மொத்தமாக 37 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
7 முறை ஃபெடரேஷன் கோப்பையை வென்றுள்ளார். தற்போது அது பில்லி ஜீன் கிங் கோப்பை என அழைக்கப்படுகிறது.
1972ம் ஆண்டு முதல் பெண்மணியாகSportsPerson of the Year விருதை பெற்றார். 1987ம் ஆண்டு டென்னிஸ் உலகில் மிகப் பெரிய கௌரவமான International Tennis Hall of Fame-ல் இடம் பிடித்தார்.
USTA தேசிய டென்னிஸ் மைதானத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. 2009ம் ஆண்டு பாராக் ஒபாமா அவருக்கு Presidential Medal of Freedom என்ற அமெரிக்க குடிமக்களுக்கான உயரிய விருதை வழங்கினார். 20ஆம் நூற்றாண்டின் 100 முக்கியமான நபர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். பிபிசியின் Lifetime Achievement Award பெற்றார்.
2017ம் ஆண்டு எம்மா ஸ்டோன் நடிப்பில் Battle of the Sexes திரைப்படமாக வெளிவந்தது.
வரலாற்றுப் பெருநிகழ்வு!
பில்லி ஜீன் கிங் Battle of the Sexesக்குப் பிறகு உலகளவில் பிரபலமானார். அவரைச் சுற்றிய சர்ச்சைகளும் செய்தித்தாள்களில் இடம்பிடித்தன.
1980களில் பில்லி ஜீன் கிங் தான் ஓர் பாலின உறவில் இருந்ததை பொதுவெளியில் ஒப்புக்கொண்டார். அவரது காதலியான மர்லின் பார்னெட், பில்லி தனக்கு ஜீவானாம்சம் தர வேண்டுமென வழக்கு தொடுத்தார். வழக்கில் வெற்றி பெற்றாலும் அந்த காலத்தில் LGBTQ+ மக்களுக்கு ஆதரவு இல்லாததால் பல இன்னல்களைச் சந்தித்தார்.
1987ல் அவரது கணவர் லேரி கிங் - பில்லி ஜீன் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 1989ம் ஆண்டு முதல் முன்னாள் தென்னாப்பிரிக்க வீராங்கனை இலானா க்ளாஸ் என்பவருடன் உறவில் இருந்தார். 2018ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

பில்லி ஜீன் எத்தனையோ கோப்பைகளை வென்றுள்ளார், சாதனைகள் புரிந்துள்ளார், சர்ச்சைகளில் பேசப்பட்டிருக்கிறார். ஆனால் இது எல்லாவற்றையும் கடந்து, அவரை நாம் புகழ்வது Battle of the Sexes என்ற 55 வயது வீரருக்கு எதிரான போட்டிக்காக. ஏனென்றால் அந்தப் போட்டி வெறும் விளையாட்டு அல்ல; அது ஒரு சமூக மாற்றத்துக்கான அடிக்கல், பெண்கள் சம உரிமைக்கான முழக்கம்.
ஆண்கள் உருவத்தில் அதிக எடை கொண்டவர்களாக இருக்கலாம், வேகமாக செயல்படுபவர்களாக இருக்கலாம், ஆனால் பெண்கள் போர்திறத்திலும், கடின உழைப்பிலும், விடாமுயற்சியிலும் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என உலகுக்கு அறிவித்த வரலாற்றுப் பெருநிகழ்வு!