செய்திகள் :

BB Tamil 8 Day 102: பவித்ராவிற்கு விட்டுத் தந்த ஜாக்குலின்; 2 லட்சத்தை தட்டித் தூக்கிய விஷால்

post image
இந்த எபிசோடின் ஹைலைட் ஜாக்குலினின் எவிக்ஷன்தான். ‘எனக்கு பயமாயிருக்கு’ என்று பின்வாங்கிக் கொண்டேயிருந்த ஜாக், அச்சத்தைத் தகர்த்து போட்டியில் துணிச்சலாக இறங்கிய அந்தக் கணம்தான் அவர் அடைந்த உண்மையான வெற்றி.

தன் மனத்தடையை உடைக்கும் தருணம்தான் ஒவ்வொருவருக்கும் வருங்கால வெற்றிக்கான முதலீடு. 

உள்ளூற சிரித்தவர்கள், பாவனையாக அழுதவர்கள் தவிர ஏறத்தாழ அனைவருமே ஜாக்குலினின் எவிக்ஷனுக்கு ஆத்மார்த்தமாக வருந்தியிருப்பார்கள். விமர்சனங்கள் இருந்தாலும் இந்த சீசனின் உண்மையான ஆட்டக்காரர்களில் ஒருவர் ஜாக்குலின்.

 அனைவருக்கும் கிடைக்காத பிரத்யேகமான எவிக்ஷன் ஜாக்குலினுக்கு மட்டுமே கிடைத்தது. மஞ்சரி கெஞ்சிக் கேட்டும் தராத டிராஃபியை, ஜாக்குலினுக்கு தானே முன்வந்து பிக் பாஸ் தந்தது சிறந்த தருணம்.  ஒரு நாளில் எவ்வளவோ நேரத்தை வீணாக்குகிறோம். ஆனால் வெறும் 2 விநாடிகள், ஜாக்குலினின் நூறு நாட்களுக்கு மேலான உழைப்பை பறித்துப் போட்டது. நேரத்தின் மதிப்பை இனியாவது நாம் உணர்வோமா?! 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 102


‘காசு மேல காசு வந்து’ என்று பொருத்தமான பாடலைப் போட்டார் பிக் பாஸ். அதை விடவும் ‘நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ..ஓடு ராஜா’ பாடலைப் போட்டிருந்தால் பெட்டி டாஸ்க்கிற்கு இன்னமும் பொருத்தமாக இருந்திருக்கும். ‘அஞ்சி..அஞ்சி..வாழ்ந்தது போதும் ராஜா’ என்கிற வரி ஜாக்குலின், சவுந்தர்யாவிற்கு செட் ஆகும். 

‘முத்து, ரயான், விஷால்.. நீங்க ரெடியா இருக்கீங்களா?’ என்று கேட்டு விட்டு வண்டியை லெப்ட்டில் உடைத்து “நீங்க அப்படியே ரெஸ்ட் எடுங்க. ஏன்னா இந்த ரவுண்ட் பெண்களுக்கானது” என்று இடஒதுக்கீட்டு அம்சத்தை அறிமுகப்படுத்தினார் பிக் பாஸ். (அவங்க.. பாலு.. அவங்க பேட்டு.. அவங்க வெச்சதுதான் சட்டம்!) உடனேயே கையைத் தூக்கி விட்டு பின்பு இறக்கிக் கொண்டார் சவுந்தர்யா. 

இது 3-ம் பணப்பெட்டிக்கான டாஸ்க். நேரம் 25 விநாடிகள். தூரம் 45 மீட்டர்கள். பரிசு 2 லட்சம். ஜாக்கும் பவித்ராவும் இந்தச் சுற்றில் கலந்து கொள்ள முட்டி மோதினார்கள். ‘நான்தான் முதல்ல சொன்னேன்’ ‘சொல்றது முக்கியமில்ல. எழுந்து வந்து நிக்கணும். நான்தான் வந்தேன்’ என்று இருவரும் அடித்துக் கொள்ள “பேசி முடிவுக்கு வாங்க” என்று கைகழுவினார் பிக் பாஸ். 

பவித்ராவிற்கு விட்டுத் தந்த ஜாக்குலின்


“நான் அவுட் ஆகி போனாலும் பரவாயில்ல. இந்த சான்ஸ் வேணும்” என்று பவித்ரா ஆழமாக சொன்ன வார்த்தைகள் ஜாக்கின் மனதை சலனப்படுத்தியிருக்க வேண்டும். ‘சரி போ’ என்று ஒரு கணத்தில் விட்டுத் தந்து விட்டார். ‘விட்டுத் தருபவர்கள் எப்போதும் கெட்டுப் போவதில்லை’. அப்புறம் ஏன் பிறகு ஜாக் எவிக்ட் ஆனார் என்று சிலருக்குத் தோன்றலாம். அது தற்காலிக மாயத் தோற்றம். மற்றவர்களுக்கு விட்டுத் தருபவர்களுக்கு உடனடி ஆதாயங்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால் நிரந்தர மனநிம்மதி கிடைக்கும். 

“விட்டுக் கொடுக்கறதுதான் உன் நேச்சர். அதுக்காக ஈஸியா தரலை. உனக்கான வேலிட் பாயிண்ட்ஸ்ஸை சொன்னே” என்று ரவி உள்ளிட்டவர்கள் ஜாக்கிற்கு ஆறுதல் சொன்னார்கள். “எனக்கு பயமாவும் இருக்கே” என்று பதறினார் ஜாக். பவித்ராவிற்கு ஆளாளுக்கு தைரியம் சொல்ல “இருங்கடா.. எனக்கே மரண பீதியா இருக்கு. சும்மா இருந்தா கூட நான் போயிட்டு வந்துடுவேன்” என்று அடித்த கமெண்ட் ஜாலியானது மட்டுமல்ல, உண்மையானதும் கூட. “டேய்.. முத்துக்காளை.. பக்கத்துல முதலை வருதுடா” என்று ஒருவன் மிகையாக எச்சரிக்கும் போதுதான் பயமே அதிகம் வரும். முதலையிடம் மாட்டிக் கொள்வோம். 

“உன்னை நம்பி கொடுத்திருக்கேன். ஒரு பிரதிநிதியா வெற்றியைக் கொண்டு வா” என்று ஜாக் சொன்ன சொற்கள் பவித்ராவிற்கு பூஸ்ட்டாக இருந்திருக்க வேண்டும். தனக்காக ஒருவன் ஓடுவதை விடவும் மற்றவர்களுக்காக ஓடும் போதுதான் அதிக முனைப்பைக் காட்டுவான். 

45 மீட்டர், 25 விநாடிகள், 2 லட்சம், மனம் மாறினால் திரும்பலாம். பெட்டி வந்தால் வெற்றி, தாமதம் ஆனால் எவிக்ஷன் என்கிற விதியை மீண்டும் நினைவுப்படுத்தி பவித்ராவிற்குள் பீதியைக் கிளப்பினார் பிக் பாஸ். “வெற்றி பெறப்போகும் முதல் பெண்மணி நீங்கள்தான்” என்கிற வார்த்தை நிச்சயம் உத்வேகத்தை தந்திருக்கும். ஆட்டம் ஆரம்பித்தது. ஓட்டப் பந்தயத்தில் எப்போதுமே அந்த முதல் தருணம் முக்கியம் என்பார்கள். அந்த ரிதம் செட் ஆகி விட்டால் அந்தத் துவக்கமே மீதியைப் பார்த்துக் கொள்ளும். பவித்ராவிற்கு அப்படியாக அமைந்ததோ? பரபரவென ஓடி பெட்டியை எடுத்து திரும்பி குறிப்பிட்ட நேரத்திற்குள் மெயின் டோரைத் தாண்டி உள்ளே வந்து விழுந்தார். 

வெற்றிப் பரிசை ஜாக்கிற்கு சமர்ப்பணம் செய்த பவித்ரா


அனைவரும் மகிழ்ச்சி கலந்த உற்சாகத்துடன் பவியை வாழ்த்த, ‘ஜாக் திஸ் இஸ் ஃபார் யூ’ என்று உணர்ச்சிப் பெருக்குடன் பவித்ரா கத்தியது சிறப்பான தருணம். “உண்மையாவே ஃபயர் மோட் ஆன் பண்ணிட்டே” என்று ரவி பாராட்ட,  “பவித்ரான்னா பிளவர்ன்னு நெனச்சியா. . ஃபயருடா” என்று பவித்ரா கத்த கோரஸாக நின்று போஸ் தந்தார்கள். 

விட்டுத் தந்து விட்டாலும் அந்த வெற்றி தான் அடைந்திருக்க வேண்டியது என்று ஜாக் கருதினாரோ, என்னமோ, அவர் அழ ஆரம்பிக்க “நீ சொன்ன வாக்கியம்தான் என்னை ஒட வெச்சது. இந்தப் பரிசு உனக்குத்தான்” என்று பவித்ரா பெருந்தன்மையுடன் சொல்ல “ச்சே.. ச்சே.. இது  உன்னோட உழைப்பு” என்று அதை மறுத்தார் ஜாக். 

“அடுத்த பணப்பெட்டி டாஸ்க். யாரு வேணுமின்னாலும் எடுக்கலாம்” என்று பிக் பாஸ் அறிவிக்க, வீட்டிற்குள் வந்தவர்களும் நிமிர்ந்து உட்கார “அஸ்க்கு புஸ்க்கு.. இது டாப் 6 போட்டியாளர்களுக்கு மட்டும்தான்” என்று தெளிவுப்படுத்தினார் முத்து. 

‘ஓடுவதின் மூலம் வெற்றியை நிர்ணயிக்கும் இந்த டாஸ்க்கில் ஆணை விட பெண் ஓடி வெற்றியை அடைவது சிரமமான விஷயம்’ என்கிற பொது அபிப்ராயத்தை உடைக்க வேண்டிய நிர்ப்பந்தம் பிக் பாஸிற்கு இருந்தது. எனவே ‘ரயானும் பவித்ராவும் ஓடி வந்த தூரம் ஒன்றுதான். பவியால முடியும்ன்னா ஜாக், சவுந்தர்யாவாலயும் முடியும். இதை நாங்க சும்மா சொல்லல. எங்க டீம் இதை பல்வேறு பரிசோதனைகள் மூலமாக டெஸ்ட் செஞ்ச பிறகுதான் சொல்றோம்.. பெண்களால முடியும் என்பதை நிரூபிப்பதற்கான தருணம்” என்று பாலின வித்தியாசத்தை தகர்த்தெறியும் வார்த்தைகளில் உத்வேகம் தந்தார் பிக் பாஸ். 

ஆனால் இதில் ஒரு டிவிஸ்ட். ஒரு பெட்டிக்குப் பதிலாக மூன்று பெட்டிகள் இருக்கும் அதில் ஒன்றுதான் உண்மையான பணப்பெட்டி. மதிப்பு என்ன தெரியுமா? ஐந்து லட்சம். 60 மீட்டர். 30 விநாடிகள் என்று ஆட்டத்தை நிர்ணயித்தார் பிக் பாஸ். ரிஸ்க் எடுத்தாதான் ரஸ்க் சாப்பிட முடியும். 

சவுந்தர்யாவிற்கு சான்ஸ் தந்த பிக் பாஸ். ஆனால்?


பவித்ரா தவிர மற்ற அனைவருமே எழுந்து வந்தார்கள். “நீங்கள்லாம் ஆல்ரெடி போயிட்டு வந்தீங்க” என்று ஒருவகையில் நியாயமான காரணத்தைச் சொன்னார் சவுந்தர்யா. “இதுல ரிஸ்க் அதிகம். எனக்கு பரபரன்னு இருக்கு. பார்த்துட்டு சும்மா உக்கார முடியாது” என்று சொல்லிப் பார்த்தார் முத்து. “பணம் முக்கியம் கிடையாது. ரிஸ்க் எடுக்கற சவால்தான் முக்கியம்” என்று சம்பிரதாயமாகச் சொன்னார் விஷால். முத்துவின் வாதத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் “உன்னை மாதிரி என்னால பேச முடியாது” என்று சவுந்தர்யா சொல்ல “இது பேச்சுப் போட்டி கிடையாது” என்று கவுன்ட்டர் தந்தார் முத்து. 

இப்படியே பேச்சுவார்த்தை இழுபறியாகச் செல்ல “ஜாக்.. இல்லைன்னா.. சவுண்டு போகட்டும்.. அப்படின்னா எனக்கு ஓகே” என்று விஷால் விட்டுத்தர முன் வந்தது சிறப்பு. போட்டியாளர்களின் எண்ணிக்கை நான்காகச் சுருங்கியது. “எனக்குப் பயமா இருக்கு” என்று அதே அனத்தலைத் தொடர்ந்தார் ஜாக். “நான் போறேன்” என்று துணிச்சலாக கை தூக்கினார் சவுந்தர்யா.

“எவ்ள நேரம்யா.. பேசுவீங்க.. ஒரு மணி நேரமா பேசிட்டிருக்கீங்க.. எனக்கு பொறுமை இல்ல” என்று டென்ஷன் ஆன பிக் பாஸ், “முதலில் முனைப்பு காட்டிய சவுந்தர்யா இந்தப் போட்டியில் கலந்து கொள்வார்” என்று தீர்ப்பை சொல்லி, தானும் சவுண்டின் ரசிகன் என்பதை அநியாயமாக நிரூபித்தார். “இந்த வீட்டில் முதன்முறையா என்க்கு நீதி கிடைச்சிருக்கு” என்று பெருமிதத்துடன் சவுந்தர்யா சொல்ல, அவரை கொலைவெறியுடன் பார்த்தார் முத்து. 

பாவம், பிக் பாஸ், ஒரு பச்சைப் பிள்ளையை நம்பி ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பும் துணிச்சலைப் பாராட்டி சரோஜா தேவி உபயோகித்த சோப்பு டப்பாவை பரிசாக அளிக்கலாம். 60 மீட்டர், 30 விநாடிகள் என்று தூரத்தையும் நேரத்தையும் மீண்டும் நினைவுப்படுத்திய பிக் பாஸ்,  ‘வெற்றியுடன் திரும்பி வா’ என்று தலையில் தண்ணீர் தெளித்து அனுப்பினார் பிக் பாஸ். 

வீரம்ன்னா என்ன தெரியுமா? - பாடம் எடுத்த சவுந்தர்யா


மின்னல் வேகத்தில் தனது பயணத்தை ஆரம்பித்தார் சவுந்தர்யா. ஏறத்தாழ பாதி தூரத்தைக் கடந்து விட்டார். “வந்துருவா.. வந்துருவா.. பெட்டியோட வந்துடுவா”என்று வீட்டிற்குள் மக்கள் நம்பிக்கையாக கத்திக் கொண்டிருந்தார்கள். ‘அடப்பாவிகளா.. பொட்டிய 60 மீட்டர்ல வெச்சிருக்கிறதா சொன்னாங்க.. ஆனா அது எங்கயோ தூத்துக்குடில இல்லைன்னா.. திருநெல்வேலில இருக்கும் போலயே.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் ஒரு வத்திப்பெட்டியைக் கூட காணோமே’ என்று சவுண்டின் மைண்ட் வாய்ஸ் ஓடியதோ, என்னமோ. அலார்ம் வைத்து எழுந்து தண்ணீர் குடித்து தெம்பாக வாக்கிங் கிளம்பிய ஆசாமி, தெரு முனையில் கண்ட சொறிநாயைக் கண்டவுடன் வீட்டுக்குள் பதறியடித்து திரும்புவதைப் போல பாதியிலேயே பயணத்தை கேன்சல் செய்து விட்டு ‘ஆள விடுங்கடா சாமி.. பொட்டியும் வேணாம். ஒண்ணியும் வேணாம்.. நம்ம ரசிகர்கள் பார்த்துக்குவாங்க’ என்கிற தைரியத்துடனும் மரண பீதியுடனும் திரும்ப வீட்டிற்குள் ஓடி வந்தார். ஒரு மகத்தான வீராங்கனையின் தியாக சரித்திரம் இப்படியாக ஆன்ட்டி டிவிஸ்டுடன் முடிவிற்கு வந்தது.  

வீட்டுக்குள் வந்த சவுந்தர்யாவை “நல்ல டெஸிஷன். திரும்பி வந்தது நல்ல விஷயம்” என்று பலரும் பாராட்டினாலும் ‘இதுக்கா முதல்ல கையைத் தூக்கினே’ என்று உள்ளுக்குள் நமட்டுச்சிரிப்பு சிரித்திருப்பார்களோ என்னமோ. “நானும் ஃபோகஸ் பண்ணி பார்க்கறேன். பெட்டியைக் காணலை. பிக் பாஸ் prank பண்றாரு போல” என்கிற மாதிரி காரணம் சொன்னார் சவுண்டு. (‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போறேன்னு சொன்னானாம்’ என்பது பழமொழி)

மஞ்சரி - ராணவ், தீபக் என்ட்ரி - மக்கள் உற்சாகம் 


‘வாடி ராசாத்தி’ என்கிற பாடல் ஒலிக்க மஞ்சரியோ என்று பதட்டமும் மகிழ்ச்சியுமாக தவித்தார் ஜாக்குலின். ஆனால் உள்ளே வந்த மூவருமே முன்னாள் போட்டியாளர்கள். வனிதா, ராபர்ட் மற்றும் ஜோவிகா. அவர்களுடைய படத்தின் பிரமோஷனிற்காக வந்திருக்கிறார்கள். ‘இந்த வீடுதான் மீண்டும் மீடியாவிற்குள் திரும்பும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது’ என்று நன்றியுடன் நினைவுகூர்ந்தார் வனிதா. இந்தப் புதிய படத்தின் தயாரிப்பாளர் ஜோவிகாவாம். டைரக்ஷன் வனிதாவாம். (பார்றா!). ராபர்ட் ஹீரேவாக நடிக்க வனிதா ஹீரோயின். (என் பணத்தைப் போட்டுட்டு இன்னொருத்தரையா ஹீரோயினா போடுவேன்?! - வனிதாவின் நியாயமான கேள்வி). தங்களின் பிரமோஷனை முடித்து விட்டு இவர்கள் கிளம்பினார்கள்.

“வெளில கூட போறண்டா.. எனக்கொரு வாய்ப்பு வேணும்’ என்று உள்ளுக்குள் பயத்தை வைத்துக் கொண்டு ரயானிடம் கெஞ்சினார் ஜாக்குலின். “தீபக் அண்ணன்.. மஞ்சரி புள்ள, அருண்.. ராணவ் பய .. இவங்களையெல்லாம் உள்ள அனுப்பி விடுங்க பிக் பாஸ்” என்று முத்து வேண்டுகோள் வைத்த அடுத்த நிமிடமே பாடல் ஒலித்தது. ‘நான் பொல்லாதவன்’ என்று எஸ்.பி.பி அட்டகாசமாக பாடிய பாடல்.  பாடகர்கள் பாடும் ஒரு சிறிய அறையில் நின்று கொண்டு இந்த மனிதர் என்னவெல்லாம் ஜாலம் செய்திருக்கிறார் என்பதை நெகிழ்வுடன் நினைவு கூர முடிந்தது. வாட் எ லெஜண்ட்?!

உள்ளே வந்தவர்கள் ராணவ் மற்றும் மஞ்சரி. ராணவ்வை யார் சட்டை செய்யப்போகிறார்கள்? கிச்சனாலே இளிச்சவாயன்தான். ஆனால் மஞ்சரியைக் கண்டதும், தாய்ப்பசுவைக் கண்ட கன்று மாதிரி பரவசப்பட்டார் ஜாக்குலின். அதே சமயத்தில் கன்ஃபெஷன் ரூம் வழியாக தீபக் என்ட்ரி தர, வீடு கூடுதல் உற்சாகமானது. முத்துவை இறுக்கி அணைத்து உம்மா தந்த தீபக், இது வெளியில் இருக்கும் வரவேற்பின் அடையாளம் என்று சூசகமாகச் சொன்னார். 

மற்றவர்கள் உற்சாகமாக இருந்தாலும் ஆட்டம் குறித்த பீதி ஜாக்கிற்கு இருந்தது. “உன் மேல கான்ஃபிடன்ஸ் இருந்தா போ. ரிஸ்குதான். பிரைஸ் மணி என்னன்னு பாரு. பரிசுப்பணம் எவ்வளவுன்னு பாரு. கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியா வரும்” என்று மஞ்சரி சொல்ல “என்னடி இது இவ்ள நேரம் நம்பிக்கையா இருந்தேன்?” என்று மீண்டும் குழம்பினார் ஜாக். விஜய் சேதுபதிக்கான பிறந்த நாள் கேக் வந்தது. மக்கள் கோரஸாக வாழ்த்து சொல்லி விட்டு கேக்கின் மீது கொலைவெறியுடன் பாய்ந்திருப்பார்கள். 

5-ம் பணப்பெட்டிக்கான டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். பரிசு 5 லட்சம், நேரம் 30 விநாடிகள், தூரம் 60 மீட்டர். அறிவிப்பு வந்த போது தானும் எழுந்து செல்வது போல் பாவனை செய்து சிரிப்பு மூட்டினார் தீபக். முத்து, விஷால், ரயான் ஆகிய மூவரும் போட்டிக்கு நின்றார்கள். நியாயமாக விஷாலுக்கு இந்த வாய்ப்பு தர வேண்டும். “சரி.. மூணு பெட்டி இருக்கும். கரெக்ட்டா எடுத்துட்டு வந்துடுவியா… நம்பிக்கை இருக்கா.. இல்லைன்னா சொல்லு.. நாங்க பார்த்துக்கறோம்” என்று முத்துவும் ரயானும் சொல்ல, “நானே போறேன் ஆள விடுங்கடா சாமி.” என்று முடிவு செய்தார் விஷால். 

2 லட்சத்தை தட்டித் தூக்கிய விஷால்


இதை பொதுவில் அறிவிக்கும் போது ‘தான்தான் போட்டியாளர்’ என்பது போல் முத்து பாவனை செய்து பிறகு விஷால் போட்டியாளர் என்று  தெரிவித்தது சுவாரசியமான காட்சி.  பரிசுத் தொகை குறையக் குறைய “அய்யோ.. என்னோட அமௌண்ட்டலாம் போகுதே?” என்று சாெல்லி சிரிப்பு மூட்டினார் சவுந்தர்யா. “ஒருத்தனுக்கு உள்ள இருக்கற பயத்தைப் போக்கி நீங்க தைரியம் தர்றீங்க பிக் பாஸ் இந்த டாஸ்க்கோட வெற்றி அதுதான்னு நெனக்கறேன்” என்று விஷால் சொல்ல ‘நானும்’ என்று சவுந்தர்யாவும் பெருமிதமாக கை தூக்கினார். 

‘உனக்காக ரெக்கமண்ட் செஞ்சு நம்பி உன்னை அனுப்பினா.. நாய் துரத்தினா மாதிரி திரும்ப வீட்டுக்குள்ளஓடியாந்துட்டு.. பேச்சா பேசற?” என்று பிக் பாஸ் நினைத்தாரோ, என்னவோ. “யார் பேசியது.. சவுந்தர்யவா.. எது காய்கறி வாங்கும் போது கொசுறா கொத்தமல்லி கேப்பாங்களே.. அந்த மாதிரி நீங்களும் உள்ளே வர்றீங்க” என்று செய்தது சுவாரஸ்யமான பங்கம். ‘இல்ல ப்ரோ..’ என்று ஆரம்பித்து தடுமாறி பிக் பாஸையே கலாய்த்தார் சவுண்டு.

விஷால் வெற்றிகரமாக இந்த டாஸ்க்கை செய்து முடித்து ‘எங்க அம்மா கடன் கேக்க போறப்ப கால்ல விழுந்து கேட்கறேன்னு மாதிரி சொந்தக்காரங்க கிட்ட சொல்வாங்க. என் கிட்ட கூட அப்படிக் கேட்டிருக்காங்க. இந்தப் பணம் உங்களுக்குத்தான்ம்மா” என்று விஷால் செய்த சமர்ப்பணம் நெகிழ்ச்சியூட்டியது. 

அடுத்ததாக அறிவிக்கப்பட்டது, பணப்பெட்டியின் கடைசி டாஸ்க். பரிசுத் தொகை பெரியது. 8 லட்சம். எனவே ரிஸ்க்கும் அதிகம்தான். 80 மீட்டர் தூரத்தை 35 விநாடிகளில் கடந்து வர வேண்டும். முதல் பென்ச் மாணவர்கள் போல முத்துவும் ரயானும் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடுவதற்காக ஓடி வர ஜாக்குலினும் உதறலுடன் வந்து சேர்ந்தார். என்னதான் ரூல்ஸ் என்று போடப்பட்டாலும் பிக் பாஸ் சொல்வதுதான் இறுதித் தீர்ப்பு. எனவே முதலில் குரல் தந்த ஜாக்குலின்தான் போட்டியில் கலந்து கொள்வார் என்று பிக் பாஸ் அறிவிக்க “நாம சும்மா இருந்தாலும். இந்தாளு விடமாட்டான் போலயே” என்பது மாதிரி உள்ளே தோன்றினாலும் முகத்தில் பயத்தைக் காட்டாமல் சமாளித்தார் ஜாக்குலின். 

‘எனக்குப் பயமாயிருக்கு’ - தயங்கிக் கொண்டேயிருந்த ஜாக் எடுத்த முடிவு


‘போலாமா, வேண்டாமா’ என்று மயங்கித் தவித்த ஜாக்குலினுக்கு ஆதரவாக நின்றார் மஞ்சரி. “யாரும் அவ கிட்ட நெகட்டிவ்வா சொல்லாதீங்க” என்று வேண்டுகோள் வைத்தார் முத்து. கணக்கு மேதை போல என்னென்னமோ படம் வரைந்து போட்டு கூட்டிப் பெருக்கி விடை சொன்னார் ரயான். ஆட்டத்தில் இறங்குவதற்கு முன்னால் ஜாக் கண்ணீர் விட “ஏன் அழறீங்க?” என்று விசாரித்தார் பிக் பாஸ். “இந்த வீட்டை இனிமே பார்க்க முடியாதோன்னு தோணுது” என்று அவர் கலங்க “மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு நீங்கள் பெறப்போகும் வெற்றிதான் பதில்” என்று உத்வேகமூட்டினார் பிக் பாஸ். 

ஆட்டம் ஆரம்பித்து பஸ்ஸர் அடிக்க, கலக்கத்துடன் ஓடினார். ‘வந்துடுவா.. வந்துடுவா’ என்று வீட்டிற்குள் பரபரப்புடன் மக்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தார். பெட்டியை தூக்கிக் கொண்டு முகத்தில் கலக்கத்துடன் திரும்பவும் வீட்டை நோக்கி ஓடினார். ‘வந்துட்டா’ என்று மக்கள் கத்தவும் மெயின் டோரை தாண்டி ஓடி வந்து ஜாக் கீழே விழவும் சரியாக இருந்தது. ஜாக் வெற்றியடைந்து விட்டார் என்றே பலரும் மகிழ்ச்சியைத் தெரிவித்தாலும் விஷால் உள்ளிட்டவர்களுக்கு சந்தேகமாக இருந்தது. 0 விநாடியைத் தாண்டிய பிறகுதான் ஜாக் உள்ளே வந்தார் என்பதால் சந்தேகம். என்றாலும் அதை அவரிடம் தெரிவிக்காமல் அமைதி காத்தார்கள். 

“ஜாக்.. டைட்டான ஃபினிஷ். எங்க டீம் செக் பண்ணிட்டிருக்காங்க” என்று அறிவிப்பு வரவும் “நான் வந்துட்டனா. .வந்துட்டனா’ என்று கேட்டுக் கொண்டிருந்த ஜாக்குலின் முகத்தில் இருந்த சிறிய மகிழ்ச்சியும் மறைந்து கலக்கம் மீண்டும் படர ஆரம்பித்தது. மக்களை காக்க வைத்து டென்ஷன் ஏற்றிய பிக் பாஸ், பிறகு அதிகாரபூர்வமாக ஜாக்குலினின்  தோல்வியை அறிவித்தார். 2 விநாடிகள் தாமதம். இதற்கான ரீப்ளே வீடியோவும் பார்வையாளர்களுக்கு காட்டப்பட்டது.  ‘உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது’ என்று போட்டியாளர் எவருமே கேட்க விரும்பாத வாக்கியத்தை ஜாக்குலின் கேட்க வேண்டியிருந்தது. இந்த முடிவைக் கண்டு அனைவருமே அதிர்ச்சியடைந்தார். வெற்றியின் நுனியில் ஒருவன் போட்டியிலிருந்து வெளியேறுவது பெரும் துரதிர்ஷ்டம். 

பயத்தை நேரில் சந்திப்பதுதான் உண்மையான வெற்றி


ஜாக்குலின் அமைதியாக இருந்து இறுதிப் போட்டியில் தொடர்ந்திருக்கலாமே என்கிற கேள்வி எழலாம். ஆனால் அதுதான் சேஃப் கேம். ‘வீரன் ஒருமுறைதான் சாவான். கோழை தினம் தினம் செத்துக் கொண்டிருப்பான்’ என்கிற பொன்மொழி இருக்கிறது. பயத்தைக் கண்டு அஞ்சி அஞ்சி பதுங்குவதை விடவும் அந்தப் பயத்தை நேருக்கு நேராக சந்திப்பதின் மூலம்தான் விடுதலையை பெற முடியும். அந்த வகையில் ஜாக் எடுத்த ரிஸ்க் அர்த்தபூர்வமானது. அதிலும் சவுந்தர்யா மாதிரி திரும்பி விடாமல், இறுதி வரை போராடித் தோற்ற இந்த தோல்விக்குத்தான் வெற்றியை விடவும் மதிப்பு அதிகம். இதன் மூலம் அவர் பிக் பாஸ் கோப்பைக்கான வாய்ப்பை தவற விட்டிருக்கலாம். ஆனால் தன் வாழ்க்கையில் பயத்தை விலக்கி ரிஸ்க் எடுப்பதின் மூலம் மேலதிக உயரங்களைத் தொடக்கூடிய பாடத்தைக் கற்றிருப்பார். கீழே விழுந்தால்தான் இன்னமும் மேலே எழ முடியும்.

இந்த முடிவு காரணமாக இடிந்து போனாலும் உடனே சுதாரித்துக் கொண்டு ‘எல்லோருக்கும் நன்றி. ப்ரூவ் பண்ணனும்னு நெனச்சேன். பண்ணிட்டேன்” என்று ஜாக் சொல்ல முத்து எழுந்து நின்று கைத்தட்ட அனைவரும் அதைப் பின்பற்றி ஜாக்கிற்கு மரியாதை கொடுத்தார்கள். பெரும்பாலான எவிக்ஷன்களுக்கு கலங்காத முத்து, சாச்சனா, தீபக் ஆகியோருக்குப் பிறகு ஜாக்குலின் எவிக்ஷனுக்கு கலங்கினார். ‘என் கிட்ட பேசாத. கொன்ருவேன்’ என்கிற அளவிற்கான உரிமையுடன் கூடிய கோபத்தின் வழியாக அன்பைக் காட்டினார். இதெல்லாம் நடிப்பா கோப்பால்?’ என்றால் சிலருக்கு தங்களின் அன்பை டிராமாட்டிக்காக வெளிப்படுத்துவது பிடிக்கும். ஆனால் அதற்காக அந்த அன்பு பொய் என்று சொல்ல முடியுமா? மஞ்சரியும் இதே போல் உரிமையுடன் கோபத்தைக் காட்டினார். 

ஒரு பக்கம் இந்த டிராஜிடி டிராமா சென்று கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பொய் அழுகை அழுபவர்களைப் பார்த்து ஜெப்ரியும் சத்யாவும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார்கள். இதற்காக இவர்கள் கெட்டவர்கள் அல்லது வில்லன்கள் என்று ஆகி விடுவார்களா? இல்லை. இதுவும் மனித இயல்புதான். சிலருக்கு மிகையான டிராமாவைப் பார்த்தால் சிரிப்பு வந்து விடும். மரண வீட்டில் ஓவராக ஒப்பாரி வைப்பவர்களைப் பார்த்தால் மைண்ட் வாய்ஸிற்குள் சிரிப்பு வருவது போல. ‘பாரேன்.. சாச்சனாவிற்கு அழுகையே வரல. ஆனா என்னமா சீன் போடுது’ என்கிற மாதிரி சிரித்தார் ஜெப்ரி. 

ஒரு பக்கம் சோகம் - இன்னொரு பக்கம் சிரிப்பு


“அப்பவே சொன்னேன். ஜாக்கிற்கு ஹோப் கொடுக்காதீங்கன்னு’ என்று பொருமினார் ஜெப்ரி. ஜாக்குலின் விடைபெறும் நேரம். “சும்மா இருந்துட்டுப் போயிட்டேன்ற பெயர் வாங்கக்கூடாதுன்னுதான், இந்தப் போட்டில கலந்துக்கிட்டேன்” என்று கலங்கிய ஜாக்கிடம் “காலடி எடுத்து வெச்ச முதல் நாள்ல இருந்து நீங்க சிறப்பா ஆடினீங்க. 15 வாரங்கள் தொடர்ந்து நாமினேட் ஆகி மக்களால் காப்பாத்தப்பட்டிருக்கீங்க. அப்ப அவங்களுக்கு உங்களைப் பிடிச்சிருக்குன்னுதானே அர்த்தம்? இறுதி மேடையை ஏற முடியாம போனாலும் வெளியில் கிடைக்கப் போகும் வெற்றி அதை விட அதிகமாக இருக்கும்” என்று ஊக்கமான வார்த்தைகளை ஆறுதலாகச் சொன்னார் பிக் பாஸ். 

“இனிமே நீங்க மிடில் பென்ச் ஸ்டூடன்ட் இல்ல. ஃபர்ஸ்ட் பென்ச். நீங்க என்னை ஏமாத்தலை ஜாக்குலின். Am proud of you. உங்களுக்காக ஒரு பிரத்யேக பரிசு. இந்த டிராஃபியை நீங்க உடைக்க வேணாம். நீங்களே வெச்சுக்கலாம்” என்று பிக் பாஸ் கருணையுடன் அனுமதிக்க, மகிழ்ச்சியில் உடைந்து அழுதார் ஜாக்குலின். “என் நட்பு உண்மையானது. எதற்காகவும் நான் மாறலை” என்பதை தெளிவுப்படுத்திய ஜாக், கோவா கேங்கின் தேசிய கீதத்தைப் பாடி விடை பெற்றார். 

ஜாக்குலின் விடை பெற்ற பிறகு “அவ கிட்ட போக வேண்டாம்ன்னு ஸ்ட்ராங்கா சொல்லியிருக்கணுமோ?” என்று முத்துவும் மஞ்சரியும் ரயானும் குழம்பித் தவித்தார்கள். இந்தக் குழப்பம் அநாவசியமானது. ஜாக்குலின் எடுத்த முடிவுதான் சரியானது. தோல்வியாக இருந்தாலும் வெற்றியை விடவும் கம்பீரமானது. சத்யா, ஜெப்ரி கும்பல் சோகமாக இருப்பவர்களின் பாவனையைக் கண்டு சிரித்து நடனமாடியது டூ மச் கிண்டல். தவிர்த்திருக்கலாம். 

ஆக பரிசுப் பணம் 40,50,000-ஆக குறைந்திருக்கிறது. இனிமேலும் சவுந்தர்யாவின் பங்கில் எவரும் கை வைக்க முடியாது. வெற்றி நமதே! வெற்றிவேல்.. வீரவேல்! 

இனிமேல் போட்டி என்று எதுவும் இருக்காது. மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் பிரிவு ஏக்கமும்தான். யார் வெற்றியாளர் என்பதை அறிந்து கொள்வது மட்டுமே சஸ்பென்ஸ்-ஆக இருக்கும். காத்திருப்போம். 

BB Tamil 8 : `ஒரு வாழைப் பழத்துக்கு இவ்வளவு அக்கபோறா!'- பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பரிதாபங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 103- வது நாளுக்கான ( ஜனவரி 17) நான்காவது புரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் 6 -ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வர இருக்... மேலும் பார்க்க

BB Tamil 8: ``நீ பண்ணத நியாயப்படுத்தாத ராணவ்..." - கடிந்துகொண்ட பவித்ரா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 103- வது நாளுக்கான ( ஜனவரி 17) மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் 6 -ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வர இருக்... மேலும் பார்க்க

BB 8 பவித்ராவின் தூர்தர்ஷன் நாள்கள்: `25ஜி பஸ்ல ஷூட்டிங் வருவாங்க' - 'கோலங்கள்' ஶ்ரீதர், யோகேஷ்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், முதல் வாரத்தில் தொடங்கியபிக்பாஸ் சீசன் 8 ன் ஃபினாலே ஷூட் நாளை நடக்கவிருக்கிறது. முதல் நாள் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ஆறு... மேலும் பார்க்க

BB Tamil 8 : 'பிடிக்கலைனா பிடிக்கலைன்னு சொல்லிறனும்; அந்த ரிலேஷன்ஷிப்..!' - விஷால் குறித்து தர்ஷிகா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 103- வது நாளுக்கான ( ஜனவரி 17) இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் 6 -ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வர இருக்... மேலும் பார்க்க

Siragadikka Aasai: ரோகிணியின் 'பல் வலி' நடிப்பைக் கண்டுபிடித்த முத்து; அடுத்து என்ன?

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் ரோகிணி மீதிருக்கும் சந்தேகத்தைச் சொல்கிறார். ரோகிணி உண்மையில் மலேசியாவிலிருந்து வரவில்லை என்று உறுதியாகச் சொல்கிறார்.முன்னதாக முத்துவின் காரி... மேலும் பார்க்க