BB Tamil 8 Day 76: அன்ஷிதாவிடம் அதிரடி விசாரணை; அடுத்தது முத்துவுக்கா?- `வாத்தியார்' விசே
‘அடுத்த வாரத்துல இருந்து ஃபயர் மோட் ஆன்’ என்று கடந்த வாரத்தில் பவித்ரா சொன்னார்.
அவர் சொன்னதைச் செய்கிறாரோ, இல்லையோ, விஜய் சேதுபதி வாரத்திற்கு வாரம் தனது ஃபயர் மோடை அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறார். எனவே இந்த எபிசோடில் ரோஸ்டிங் சம்பவங்கள் சிறப்பாக நடைபெற்றன. அவர் அடித்த அடியில் அன்ஷிதா உள்ளிட்ட பலரது முகங்கள் இருண்டன.
எபிசோடு சுவாரசியமாக சென்றாலும் தனது ‘உக்காருங்க’ அணுகுமுறையை விசே மாற்றிக் கொள்ளலாம் என்று நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - 76
‘பிக் பாஸ்’ என்கிற இந்த கேம் ஷோவை தமிழில் எட்டு வருடங்களாக நாம் பார்த்து வருகிறோம். பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி இது நமக்குத் தந்தது என்ன? இதைப் பற்றி நிறைய பேசியிருந்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் நிகழவில்லை.
இந்த நிகழ்ச்சியை வைத்து சமூக வலைத்தளங்களில் ஆராய்ச்சி செய்து வம்பு பேசி விமர்சனங்கள் செய்வதெல்லாம் ஓகே. ஆனால் அவை பெரும்பாலும் எப்படியிருக்கின்றன தெரியுமா? ‘இவன் அவனைக் கிள்ளிட்டான்.. அவன் இவனை அடிச்சிட்டான். இவன் எனக்குப் பிடிச்சவன்.. ஆகவே இவன் செய்யறதெல்லாம் சரி.. இவனை எனக்கு ஆகாது. எனவே இவன் செய்யறதெல்லாம் தப்பு..” என்கிற ரீதியில் போட்டியாளர்களை குறை சொல்கிற அளவிலேயே நின்று விடுகின்றன.
மாறாக, ‘இந்தப் போட்டியாளர் தவறு செய்கிற போது என் முகத்தையே நான் அதில் பார்த்தேன். என்னுடைய கடந்த கால அனுபவத்தை அது நினைவுப்படுத்தி என் மனச்சாட்சியை உலுக்கியது. இனி அந்தத் தவறை என் வாழ்க்கையில் செய்யாமல் இருக்க முயல்வேன். இந்த ஷோவில் ஒருவர் கோபம் அடையும் போதோ, புறணி பேசும் போதோ, நம்பிக்கைத் துரோகம் செய்யும் போதோ அது எத்தனை விகாரமாக இருக்கிறது என்பதைக் காட்சி வடிவில் நன்றாகப் பார்க்க முடிகிறது. நான் செய்வதெல்லாம் காமிராவில் பதிவாகாது. என்றாலும் நான் இதையெல்லாம் செய்த சமயங்களில் அவை எத்தனை கொடூரமாக இருந்திருக்கும் என்பதை இப்போது உணர்கிறேன்’ என்றெல்லாம் சுய விமர்சனமாக எடுத்துக் கொள்பவர்கள் எத்தனை சதவிகிதம்? என்கிற கேள்வியுடன் பொதுவான சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
‘உங்களுக்கு கிடைக்கப் போகிற பரிசு என்ன?’
உரையாடலின் நடுவில் போட்டியாளர்களுக்கு விசே தந்த அட்வைஸ்களில் இதுவும் ஒன்று. “இந்த நிகழ்ச்சியின் மூலம் உங்களுக்குள்ள இருக்கற ‘உங்களை’ எடுத்துட்டுப் போகப் போறீங்கள்ல.. அதுதான் உங்களுக்கு கிடைக்கப் போற உண்மையான பரிசு” என்று ரத்தினச் சுருக்கமாக விசே சொன்னதைத்தான் மேலே வியாக்கியானமாக எழுதியிருக்கிறேன். இதுதான் பார்வையாளர்ளுக்கான பரிசு.
இனி, இந்த எபிசோடில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
‘விளையாடுங்கன்னு சொன்னா நம்ம கூடவே விளையாடறாங்க.. பழக்க தோஷத்துல பிக் பாஸ் கூடயே விளையாட்டிட்டாங்க.. மொத்தமா போச்சா.. (நாக்கை வழித்துக் காட்டுகிறார்!) எதிர் டீமா இருந்தாலும் நல்லா ஆடிய ஒருத்தரை மனசார பாராட்ட மனசு வராது. வாரா வாரம் பிரெண்ட்ஷிப் வேற மாறிட்டே இருக்கும்” என்கிற கிண்டலான முன்னுரையுடன் வீட்டிற்குள் நுழைந்தார் விசே. (விசே கண்ணாடி அணிந்து வரும் போதெல்லாம் ‘விக்ரம்’ படத்தின் சந்தானம் காரெக்டரும் நினைவிற்கு வந்து விடுகிறார்).
வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். சவுந்தர்யாவிற்குள் ஒரு சிறந்த தொழிலதிபர் இருப்பதை இன்று கண்டுகொள்ள முடிந்தது. சாப்பிட வந்திருந்த ஒரு பேக்கரி அயிட்டத்தைப் பார்த்து விட்டு ‘நல்ல வேளை. இவங்க சென்னைல இல்லை. எங்களுக்கு போட்டியா வந்திருப்பாங்க’ என்று பிஸ்னஸ் ஸ்ராட்டஜியாக அவர் சொன்னதைக் கேட்டு ‘தன் மகளை சான்றோர் எனக் கேட்ட’ அப்பாவாக சவுந்தர்யாவின் அப்பா மகிழ்ச்சி அடைந்திருப்பார். “வெளில போனா ஜாக்குலின் கூட பிரெண்ட்ஷிப் வெச்சுக்க மாட்டேன்’ என்று சவுந்தர்யா தனது பாணியில் கொளுத்திப் போட ‘பிரெண்ட்ல பல வகை வெச்சிருப்பா போல’ என்று படம் வரைந்து பாகங்களைக் குறித்தார் ஜாக்குலின்.
தனிமையில் பேசுவதின் மூலம் டேமேஜ் கன்ட்ரோல் முயற்சியில் ஈடுபட்டார் முத்து. ‘இதுவரைக்கும் நான் இப்படி தனியா பேசினதில்ல. எங்களை சிறப்பாக வெளியே காட்டற பிக் பாஸ் டீம் அத்தனை பேர் காலையும் தொட்டு வணங்கறேன். தப்புதான். நான் பண்ணியிருக்கக்கூடாது’ என்று ஒட்டுமொத்தமாக சரண் அடைந்தார். எதற்காக முத்து அப்படிச் செய்தார் என்பது அடுத்த எபிசோட் விசாரணையிலாவது வெளிப்படுமா? ம்ஹூம்.. நம்பிக்கையில்லை. அன்ஷிதாவிற்கு சிறப்புப் பரிசு வழங்கி அவரை வழியனுப்பும் சடங்கை இப்போதே செய்து வைத்தார் விஷால்.
ராணவ் மீதான வீண் சந்தேகம்
மேடையில் விசே. “ரொம்ப அக்ரஸிவா விளையாடினாங்க. நல்லா நடந்து போன அருண் திடீர்ன்னு நொண்டிட்டே வந்தாரு. முத்து முந்தாநேத்து மன்னிப்பு கேட்க ஆரம்பிச்சி இன்னமும் நிறுத்தவேயில்லை. பிக் பாஸை மயக்க முடியாது. இல்லத்தில் இருக்கும் செல்லங்களைப் பார்க்கலாமா?” என்றபடி வீட்டுக்குள் சென்றார்.
விஷாலுக்கும் ஜெப்ரிக்கும் ஆரம்பத்திலேயே ஜெர்க் தந்து ‘இருக்கு.. உங்களுக்கெல்லாம்.. பின்னாடி ஒரு கச்சேரி வெச்சிருக்கேன்’ என்று முறைப்பால் வார்னிங் தந்தார். அவர்களோ இதை அறியாமல் ‘நாங்க ஒரு பாட்டு வெச்சிருக்கோம்’ என்று வீக்லி டாஸ்க்கை முன்னிட்டு மற்றவர்களை கிண்டல் செய்து ஜாலியாக ஒரு பாட்டு பாடினார்கள். அது நன்றாகவே இருந்தது.
“நீங்க லெஃப்ட் பக்கம் படுத்தீங்களாமே.. வெளில மக்கள் சந்தேகப்படறாங்க ராணவ். தெளிவுப்படுத்தறதுக்காக இதைக் கேக்கறேன்” என்று ராணவ்வை எழுப்பி கேள்வி கேட்க அவரோ சங்கடத்தில் நெளிந்தார். ராணவ்விற்கு அடிபட்ட விஷயம் மருத்துவரால் உறுதிப்படுத்தப்பட்டு, அவர் மூன்று வாரங்களுக்கு டாஸ்க் விளையாட முடியாது என்று அதிகாரபூர்வமாக சொல்லப்பட்டு விட்டது. என்றாலும் பார்வையாளர்களில் சிலருக்கு சந்தேகம் ஏன் வருகிறது?. எனில், ‘நடிக்கிறான்’ என்று சொன்ன போட்டியாளர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ‘எல்லாவற்றையும் சந்தேகி’ என்று கார்ல் மார்க்ஸ் சொன்னது உண்மைதான். ஆனால் அனைத்திலுமே உலக சதி இருப்பதாக பயங்கர ஆராய்ச்சி செய்வது நமக்குள் இருக்கிற நல்ல மனிதனைக் கொன்று விடும்.
ராணவ்வின் கமெண்ட்ரி ஆட்டத்தைப் பாராட்டிய விசே, “உன்னால முடியாதுன்னு சொல்றதைக் கேட்ட தவளைகள் கீழே விழுந்தன. ஆனால் ஒரு தவளை மட்டும் மேலே போயிட்டே இருந்தது. ஏன்னா அதுக்கு காது கேக்காது” என்று ஒரு மேடையில் ரஜினி சொன்ன தவளைக் கதையை மேற்கோள் காட்டிய விசே, அது போல தன்னுடைய போக்கில் வித்தியாசமாக விளையாடும் ராணவ்வை பாராட்டினார். ‘டல்லாக இருக்கும் அருணை உற்சாகப்படுத்தி ‘மொத்தமா வண்டியை நிறுத்திடாதீங்க” என்று அட்வைஸ் தந்தார். ‘அடுத்த வாரத்துல இருந்து’ என்று எழுந்து சொன்ன அருணிடம் “இந்த நொடியே மாறுங்க. நாளைக்குன்னு சொன்னாலே அது விளங்காது” என்று சொன்னது ‘நச்’சென்ற அறிவுரை.
மஞ்சரியும் ராணவ்வும் ஒதுக்கப்படுகிறார்களா?
“மத்தவங்க கேக்கலைன்னா என்ன.. நான் விசாரிக்கிறேன். சொல்லுங்க .. மஞ்சரி. நீங்க எப்படியிருக்கீங்க.. சூப்பரா ஆடினீங்க.. யாரு உங்களுக்கு பாரபட்சம் காட்டறாங்களோ.. அவங்கதான் மக்கள் கிட்ட அம்பலமாகப் போறாங்க” என்று மஞ்சரியை விசே விசாரிக்கும் போது அன்ஷிதாவின் டைட் குளோசப் ஷாட் வந்தது. மந்த புத்திக்காரர் என்று கருதப்படுவதால் ராணவ் அந்த வீட்டில் பலராலும் ஒதுக்கப்படுவதைப் போலவே ‘சிறந்த ஆட்டக்காரர்’ என்கிற பொறாமை காரணமாக மஞ்சரியும் ஒதுக்கப்படுவது சுவாரசியமான முரண்.
‘மஞ்சரி.. இஞ்சுரி.. எப்படி சார் அது.. பிளான் பண்ணி சொல்வீங்களா?” என்று முத்துவிடம் கேட்க ‘ஒரு ப்ளோல வரதுதான் சார் அது” என்று முத்து புன்னகைத்தார். இந்த டாஸ்க்கில் ஆக்ரோஷம் காட்டிய அன்ஷிதா, பவித்ராவை பாராட்டிய விசே, ‘ஃபயர் மோட் ஆன் பண்ணிட்டீங்களா? குட்.. ஆனா பத்தலை” என்று பவித்ராவிடம் சொன்னார்.
“இந்த வயசுல ஜெப்ரி கூட மல்லுக்கட்டினீங்கள்ல.. பார்க்க நல்லா இருந்தது தீபக் சார். ஜெப்ரி வயசுல ஒரு தீபக்கைப் பார்த்தேன். அந்த சின்னப் பையன் பார்க்க நல்லா இருந்தான்” என்று விசே பாராட்ட, மனம் நெகிழ்ந்த தீபக், “என் பையன் இதை பார்ப்பான்.. சார்.. எனக்கது போதும்” என்று மகிழ்ச்சியடைந்தார். இந்த சீசனில் விசேவிடம் மிகக் குறைவாக திட்டு வாங்கியவர்களுள் தீபக்கை முதலிடத்தில் வைக்கலாம். தீபக் என்றாலே விசே கொஞ்சம் ரிவர்ஸ் கியர் போடுகிறாரோ?!
ரஞ்சித்தையும் பாராட்டிய விசே, ‘ஜெப்ரி.. நல்லா விளையாடினே. நீ நல்ல ஆட்டக்காரன்.. ஆனா.. சரி.. நீயே புரிஞ்சுக்கோ” என்று சஸ்பென்ஸ் வைத்து ஜெர்க் கொடுத்தார். ஜாக் எழுந்ததும் பலத்த கைத்தட்டல். “போன சீசன்ல யாருக்கு ரெட் கார்ப்பெட் கொடுத்தாங்கன்னு நெனச்சுல்லாம் தேவையில்லாம மனசைக் குழப்பிக்காதீங்க. நீங்க தைரியமான ஆளு” என்று இந்த முறை ஜாக்கிற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் தந்தார் விசே.
“ஒருத்தர் தரைல நீந்திப் போனதைப் பார்த்தேன்” என்று சொன்னவுடன் குறும்பான சிரிப்புடன் எழுந்தார் முத்து. “அதுக்கு இன்ஸ்பிரேஷன் சவுந்தர்யாதான் சார்…கல்லை எடுத்துட்டு ஒழுங்கு காட்டினாங்க. அதுலதான் மோட்டிவேட் ஆனேன்” என்று முத்து சொன்னதும் ‘இந்த சவுந்தர்யா இருக்கே..” என்று ஒரு குறும்புக் குழந்தையை பாராட்டும் எஃபெக்ட்டை விசே தந்தார். விசாரணை நாட்களில் தன்னுடைய சாதுர்யமான நகைச்சுவையால் விமர்சனங்கள் அதிகம் வராமல் முத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாரோ?!
அன்ஷிதாவை வறுத்தெடுத்த விசே
பிரேக் முடிந்து வந்த விசே அடிபட்ட ராணவ்வை சந்தேகப்பட்டவர்களின் லிஸ்ட்டை எடுத்தார். “யாரெல்லாம் அது.. எழுந்திருங்க?” என்றதும் அன்ஷிதா, சவுந்தர்யா, ஜெப்ரி ஆகிய மூவரும் டக்கென்று எழுந்தார்கள். ஆனால் ஆடையை சரி செய்வது போல மழுப்பும் பாணியை வழக்கமாகக் கொண்ட விஷால், இந்த முறையும் கோக்குமாக்காக எழுந்து எழுந்து அமர, அதை சரியாக நோட் செய்த விசே “என்னாச்சு.. விஷால்.. எதுக்கு எழுந்துக்கறா மாதிரி நடிச்சீங்க.. இந்த மாதிரி ஒரு பிராடு கேப்டனை நான் பார்த்ததில்ல” என்றது மிக காட்டமான விமர்சனம். விசே இதை தவிர்த்திருக்கலாம்.
“எனக்கும் கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. He is fine’ன்னு டாக்டர் சொன்னாங்க.. வெளில மக்கள் வேற பயந்துட்டு இருந்தாங்க” என்று விஷால் சொல்லிக் கொண்டே போக ‘என்னது.. பயந்துட்டு இருந்தாங்களா?’ என்று சர்காஸமாக உள்ளே புகுந்தார் விசே. “ராணவ் இப்படித்தான் ஏதாவது பண்ணுவான். அதான் சந்தேகம்” என்று சவுந்தர்யா சொல்ல அவரை அத்துடன் விட்டு விட்டார். அடிபட்டது உண்மை என்பது தெரிந்த பிறகும் ‘நான் ஸாரி கேட்க வரலை. இது அவனோட தப்பு’ என்று சொன்ன சவுந்தர்யாவை விசே ஏன் இறங்கி விசாரிக்கவில்லை? இதைப் போலவே ‘விசிட்டிங் ஹவர்ஸ் முடியப் போகுது’ என்று நக்கலடித்த ஜெப்ரியும் விசாரிக்கப்படவில்லை.
‘ராணவ் ரைட் சைட்லதான் விழுந்தான்.. ஆனா லெஃப்ட்ல அடிபட்டுச்சுன்னு துடிச்சான்’ என்று ஜெப்ரி சொல்ல, அடடா.. குறும்படம் போடுவதற்கான வாய்ப்பு. இப்போதாவது இது நடக்குமா என்று எதிர்பார்த்தால் விசே அதைச் செய்யவில்லை. “டாக்டர் சொன்னப்புறமும் ஏன் உங்களுக்கு சந்தேகம் வருது.. ராணவ் உங்கள்ல ஒருத்தர்தானே.. “ என்று பொதுவாக கேட்ட விசே, அன்ஷிதாவை எழுப்பி வரிசையாக கேட்ட கேள்விகள் சிறப்பானவை. “நீங்கதான் அன்பான அன்ஷிதாவாச்சே.. உங்களுக்குமா சந்தேகம்.. ‘டெவிலா என்னால நடிக்க முடியாதுன்னு சொன்ன அன்ஷிதாவாச்சே.. உங்களுக்குமா சந்தேகம்.. சாப்பாடு விஷயத்துல யார் என்னை குறை சொன்னாலும் பிடிக்காதுன்னு சொன்ன அன்ஷிதாவாச்சே.. உங்களுக்குமா சந்தேகம். சொல்றா கண்ணா” என்று இயக்குநர் ‘விசு’வின் பாணியில் விசே வசனமாக கேட்க அன்ஷிதா திகைத்து நின்றார்.
“ஒருத்தன் அடிபட்டுக் கிடக்கறான். ஆனா நீங்க கமெண்ட் பாஸ் பண்றீங்க” என்று விசே கேட்டதும், தன்னை அதனுடன் கனெக்ட் செய்து கொண்ட மஞ்சரி கண்கலங்கினார். “அவனுக்கு அடிபட்டதுன்னு உண்மைன்னு தெரிஞ்சவுடனே எனக்கு நிம்மதியா இருந்தது” என்று சஸ்பென்ஸாக ஆரம்பித்தார் முத்து. (பட்டிமன்ற திறமை!) “அப்படி இல்லாமப் போயிருந்தா இந்த வாரம் முழுக்க அவனை வெச்சு செஞ்சிருப்பாங்க. உன்னை கடவுள் காப்பாத்திருடான்னு சொன்னேன்..” என்று முத்து சொன்னதும் பலத்த கைத்தட்டல்.
“நான் வித்தியாசமா செய்யறேன் சார்” - ராணவ்
‘சவுந்தர்யா.. அருண் ஒண்ணு சொன்னார்ல.. அது நல்லா இருந்துச்சு.. அதை நீங்களே சொல்லுங்க அருண்” என்று விசே கேட்க “அடிபடலைன்ற யூகத்திற்கு 50 சதவிகிதம் இருக்குன்னா.. அடிபட்டதுன்றது இன்னொரு உண்மை. அதை ஏன் யோசிக்கல? என்று அருண் சொல்ல சவுந்தர்யாவிடமிருந்து மெளனம் மட்டுமே பதிலாக கிடைத்தது.
“ஏன் ராணவ்.. உங்க மேல எல்லோரும் இப்படி சந்தேகப்படறாங்க..” என்று அவரையே விசே விசாரிக்க “நான் ஏதாவது எக்ஸ்ட்ரா பண்ணிடறேன்..” என்று ராணவ் அரைமனதுடன் சொல்ல “கேளுங்க.. ராணவ். எக்ஸ்ட்ரா சர்க்கரை மட்டும் இனிக்குது.. நான் எக்ஸ்ட்ராவா பண்ணா கசக்குதான்னு கேளுங்க” என்று எடுத்துக் கொடுத்தார் விசே.
“ராணவ்வோட அறிவை இவங்களால ஏத்துக்க முடியலை’ என்று கூடவே சர்காஸமும் செய்தார். “சந்தேகத்தை விதைச்சது நீங்கதான். அப்படி இருந்தாலும் அவங்க அப்படி கேட்டிருக்கக்கூடாது” என்று விசே சொன்ன பன்ச் நன்று.
“மஞ்சரி.. ஒண்ணு சொன்னாங்கள்ல.. நீங்களே சொல்லுங்க மஞ்சரி.. “ என்று அவரையும் கோத்து விட்டார் விசே. “மருத்துவ ரீதியா உண்மைன்னு தெரிஞ்சதால ஸாரி கேட்டாங்க.. இல்லைன்னாலும் ஸாரி சொல்லியிருக்கணும். அவர் வலியால துடிச்சது உண்மைதானே” என்று மஞ்சரி சொல்ல இதற்குப் பிறகு விசே சொன்ன கருத்துக்கள் போட்டியாளர்களுக்கு மட்டுமானதல்ல. எதிர்மறையாக கமென்ட் போடும் பார்வையாளர்களுக்கும் சேர்த்துத்தான். “மஞ்சரி சொன்னது உங்களுக்குப் புரியாது. ஏன்னா.. அவங்களை உங்களுக்குப் பிடிக்காது. ஒருத்தர் பிடிச்சிருக்கார். பிடிக்கலைன்றதைத் தாண்டி சொல்லப்படுவது என்ன கருத்துன்னு பாருங்க” என்று விசே சொன்னது ‘நச்’ கமென்ட்.
எல்லோருக்கும் பிரியமானவன் ஜெப்ரி
“இதே ஜெப்ரிக்கு அடிபட்டிருந்தா, ராணவ் வில்லன் ஆகியிருப்பான்” என்று விஷால் சொன்ன கருத்தையும் நினைவுகூர்ந்த விசே “ஜெப்ரி போன வாரமே சொன்னேன்.. உங்க மேல பாவம் பார்க்கறாங்க.. அது உங்களுக்கு வேணாம்ன்னு. அதுதான் விஷால் மைண்ட்ல இருந்து வந்திருக்கு” என்றதும் மஞ்சரி எழுந்து ‘ஜெப்ரி இந்த வீட்டில் உள்ள பலருக்கும் பிரியமானவன். ஆனால் ராணவ் அப்படியல்ல” என்று நெற்றியடியாக உண்மையைப் போட்டு உடைக்க “அதானே.. ஜெப்ரிக்கு எப்படி NFP கொடுத்தீங்க.. ஜெப்ரிக்கு அடிபட்டிருந்தா எல்லோரும் ஓடி வந்திருப்பாங்க.. ராணவ்விற்கு வர மாட்டாங்க” என்ற விசே, உடனே உதவிக்கு ஓடி வந்த அருணை தனியாகப் பாராட்டினார்.
“ஒருத்தருக்கு அடிபட்டா அனுதாபம் காமிக்கறதெல்லாம் ரொம்ப பேஸிக்கான விஷயம். இதையெல்லாம் கூடவா விவாதம் செய்யணும்?” என்கிற சலிப்புடன் பிரேக்கில் சென்றார் விசே. திரும்பி வந்து ரயானிடம் அவர் செய்த லொள்ளு வித்தியாசமானது. ‘கருப்புச் சட்டை போட்டு வந்ததுக்கு வாழ்த்துகள்.. சந்தேகப்படாதீங்க சார். நீங்கதான் NFP வாங்கின கடைசி நபர்” என்று சொன்னதில் சர்காஸம் கொப்பளித்தது.
“ஓகே.. வீக்லி டாஸ்க் எந்த இடத்துல ரொம்ப டர்ட்டியா போச்சு.. சொல்லுங்க” என்று அடுத்த தலைப்பை விசே கேட்க முதலில் எழுந்த மஞ்சரி “பர்சனலா ரொம்ப டிரிக்கர் பண்ணாங்க. முதல் நாள் சிவப்பும் பிங்க்கும் சேர்ந்து வந்து எங்களைத் தாக்கினாங்க. ஆனா மூணாவது நாள் நாங்களும் யெல்லோவும் கூட்டணி வெச்சு அட்டாக் பண்றப்ப அது மட்டும் தப்புன்னு சொன்னாங்க. ஜாக்குலின் வலியால கத்தினதை நடிகை.. நடிகைன்னு சொன்னாங்க” என்று சொன்னதெல்லாம் அன்ஷிதா குறித்த புகார்கள்தான்.
“முன்னாடி பர்சனலா எடுத்திருக்கேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்த அன்ஷிதா ‘இந்த டாஸ்க்கில் அப்படிச் செய்யவில்லை’ என்று சாதித்தார். “இவங்களுக்கு வலிக்குதுன்னு சொன்னா நாங்க டக்குன்னு எடுத்துடணுமாம்.. அடுத்த நிமிஷமே மறுபடியும் வந்து அட்டாக் பண்ணுவாங்களாம். ஆனா நாங்க வலிக்குதுன்னு சொன்னா அது நடிப்பாம்” என்று மஞ்சரியும் ஜாக்குலினும் இணைந்து சொன்ன புகாருக்கு அன்ஷிதாவால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. “கைய விட்டா போகணும்தானே. விடலை.. பொம்மையைப் பிடிச்சிட்டே இருந்தாங்க” என்று அவர் சமாளிக்க “பொம்மையை எடுக்கறதுதானே டாஸ்க்?” என்று மடக்கினார் மஞ்சரி.
கேப்டன் விஷாலின் பாரபட்ச நடவடிக்கைகள்
இந்தச் சமயத்தில் கேப்டன் விஷால் காட்டிய பாரபட்சமும் அம்பலமானது. “எங்களுக்கு வலிக்குதுன்னா சம்பந்தப்பட்ட ஆளுங்க கிட்டதான் கத்துவோம். ஆனா அன்ஷிதாவிற்கு வலிக்குதுன்னா ‘கேப்டன்’ன்னுதான் கத்துவா’ என்று ஜாக்குலின் சுருக்கமாகச் சொன்ன சாட்சியம் வலுவாக இருந்தது. “ஏம்மா அன்ஷிதா.. உங்களுக்கு வந்தா ரத்தம்.. மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா.. எந்த ஊரு நியாயம் இது?” என்பது போல் அன்ஷிதாவிடம் கேட்கப்பட பதிலளிக்க முடியாமல் கண்கலங்கி இறுக்கமான முகத்துடன் அமர்ந்தார்.
“இது அடிபடக்கூடிய டாஸ்க்ன்றதால நாங்க சில ரூல்ஸ் பேசி வெச்சிக்கிட்டோம்” என்று முத்து சொல்ல “ஏம்மா... அன்ஷிதா... இந்த ரூல் உங்களுக்கும் தெரியும்தானே... அப்புறம்... சண்டைபோட நல்லா வரும்ன்றதால சண்டை போடுவீங்களா... தப்பு செய்யறீங்க. அப்புறமாவாவது அதை யோசிக்கணும்ல” என்று அன்ஷிதாவை விடாமல் வறுத்தெடுத்தார். இந்தச் சமயத்திலாவது டாஸ்க்கின் போது அன்ஷிதா காட்டிய ஆக்ரோஷத்தை குறும்படமாக போட்டுக் காட்டியிருந்தால் அவர்களுக்கே அது உறைத்திருக்கும்.
“வேற யாருக்காவது கருத்து இருக்கா?” என்று விசே கேட்க, முதல் பென்ச் மாணவர்கள் போல முத்து மஞ்சரி மட்டுமே கை தூக்கினார்கள். “எப்பவும் நீங்களேவா.. ஏன் வேற யாருக்குமே சொல்ல எதுவுமே இல்லையா. ஏம்மா.. சவுந்தர்யா.. நீங்கதான் தைரியமான ஆளாச்சே.. பேசுங்களேன்” என்றவுடன் “தோத்த மனவலில இருந்தேன் சார்” என்று விரக்தியாக சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார் சவுந்தர்யா. செய்வதையெல்லாம் செய்து விட்டு ‘உலக நடிப்புடா சாமி’ என்பது போல் முகத்தை வைத்துக் கொள்வதில் சவுந்தர்யாவிற்கு நிகரில்லை.
பரிதாபமாக நின்ற சவுந்தர்யா - நடிப்பா கோப்பால்?
“நீங்கதான் வித்தியாசமா எதையாவது சொல்வீங்கள்ல.. சொல்லுங்க” என்று விசே தூண்ட, “ப்ளூ டீம் பிங்க்கை டார்கெட் பண்ணதுக்குப் பதிலாக யெல்லோ டீமை அட்டாக் பண்ணியிருந்தா. ஜெயிச்சிருக்கலாம்” என்று புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு சவுந்தர்யா சொல்ல “அப்ப நீங்களும் அதைப் பண்ணியிருக்கலாம்ல .. ஏன் விளையாடல?” என்று விசே மடக்கியவுடன் “ஏன் சாமி.. நான் பாட்டுக்கு இதுக்குத்தான் சிவனேன்னு உக்காந்துட்டு இருந்தேன்.. நீங்களா என்னை எழுப்பி பேச வெச்சு…’ என்று சவுந்தர்யாவின் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கலாம்.
அடுத்ததாக அருணை எழுப்பிய விசே, இந்தச் சமயத்தில் செய்த குறும்பு ருசிகரமானது. (என்னவொரு வில்லத்தனம்?!) வெளியே அர்ச்சனா போடும் வீடியோவிற்கு எல்லாம் அருண் வீட்டிற்குள் அடி வாங்க வேண்டியிருக்கிறது. ‘இவனை அடிச்சா அங்க வலிக்கும்’ என்கிற டெக்னிக்கை விசே வேண்டுமென்றே ஜாலியாக செய்கிறார் போல. இது கடந்த பல வாரமாக நடக்கிறது. “அருண்.. நீங்க போட்டிருக்கிற சட்டை நல்லாயிருக்கு. ஆனா ஹார்ட்லாம் இருக்குமே.. எங்க காணோம்.. என்னாச்சு. எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்குல்ல..?” என்று கேட்டது பயங்கர நக்கல் ரகம்.
“தப்பு செஞ்சுட்டு.. உடனே ஸாரி சொல்லிடறாங்க. அதான் ஸாரி சொல்லியாச்சுல்ல.. ன்னு கேட்கறாங்க.. நாம மீண்டும் சொன்னா, பதிவு பண்ணாதீங்கன்னு சொல்றாங்க” என்று மஞ்சரி புகார் சொல்ல “அவங்க ஃபாஸ்டா விளையாடறாங்க.. ஃபாஸ்டா தப்பு பண்ணிட்டு ஃபாஸ்டா சாரி கேட்பாங்க.. அதெல்லாம் உங்களுக்குப் புரியாது” என்று சர்காஸம் செய்தார் விசே.
சவுந்தர்யாவை காமெடி பீஸாக்கி கைத்தட்டல் வாங்குவதில் முத்து முன்னணியில் இருக்கிறார். எனவே இப்போதும் எழுந்து “அருணிற்கு காயம்ன்னு எல்லோரும் போயிட்டோம். அப்ப. கோவை சரளா பாணில.. திரும்பி வந்து சவுண்டு விட்ட கிக்கு இருக்கே?!” என்று முத்து சொல்ல, அதை ரசித்து வழிமொழிந்தார் விசே. எல்லோரும் சிரித்து முடிந்தவுடன் “உங்க டேலண்ட்டை பத்தியும் விசாரிப்போம்.. முத்து” என்று விசே சொன்னவுடன் ‘தேவையா உனக்கு’ என்கிற மாதிரி பம்மி அமர்ந்தார் முத்து.
“இப்பத்தான் நல்லா விளையாட ஆரம்பிச்சோம். யாரு கண்ணு பட்டுச்சோ” என்று பிரேக்கில் பவித்ரா காமெடி செய்ய, வறுத்தெடுக்கப்பட்டதன் காரணமாக ஜெப்ரியின் தோளில் சாய்ந்து அழுதார் அன்ஷிதா. (நடிகா.. நடிகா..!)
பாசமான தாயாகவும் சந்திரமுகியாவும் அன்ஷிதா செய்யும் டூயல் ரோல்
பிரேக் முடிந்து திரும்பிய விசே “யார்.. என்ன ஸ்ட்ராட்டஜில விளையாண்டிங்க.. சொல்லுங்க” என்று அடுத்த டாப்பிக்கை ஆரம்பித்தார். “ரெட் டீம் விளையாடவே இல்லை சார். ஜெப்ரி இல்லாதப்ப.. அட்டாக் வந்தா.. அவங்களை காப்பாத்தவே அவங்களுக்கு நேரம் சரியா இருந்தது” என்று ஜாக்குலின் சொல்ல ‘ஓ.. தியாகிகள் அணியா?” என்று கிண்டலடித்தார் விசே. அருண் மற்றும் விஷால் சொன்ன சாட்சியம் எடுபடவில்லை. அதை சவுந்தர்யாவே மறுத்தார்.
“நான் பாட்டுக்கு தனியா நின்னேன் சார்” என்று அவர் பரிதாபமாகசொல்ல, அதைப் பிடித்துக் கொண்ட விசே “ஒரு ஆளை தனியா விட்டுட்டு என்ன ஆட்டம். உங்க டீமுக்காக நீங்க ஆடியிருக்க வேண்டாமா?” என்று கேட்டவர் “இதுக்குத்தான் சொல்றேன். பழைய பகை வன்மத்தையெல்லாம் டாஸ்க்குல காட்டாதீங்க. உங்களுக்கு சௌகரியமான ஆளுங்க கூட மட்டும் கூட்டணி வெச்சுக்காதீங்க.. மாத்தி ஆடுங்க. அப்பதானே கேம் சுவாரசியமாகும்? என்றார்.
ஒருவழியாக கடைசி விசாரணைப் பகுதிக்கு வந்தார் விசே. “இவங்க ஸ்ட்ராட்டஜின்னு எதைச் சொல்வீங்க.. யார் வேணா பதில் சொல்லலாம்” என்று ஆரம்பித்தார். “மத்தவங்க குறையைப் பெருசா சொல்லி, அவரோட குறையை மறைச்சுடுவாரு” என்று முத்துவைப் பற்றி சவுந்தர்யா சொல்ல, பவித்ரா சொன்னது இதற்கு நேர்மாறாக இருந்தது. “தான் செய்யற தப்பு பத்தி அவருக்கு முன்னாடியே தெரியும்.தெரிஞ்சாலும் ‘இதுதான் நான்’ன்னு சொல்லி சமாளிச்சுடுவாரு” என்றார் பவித்ரா.
“இன்னொருத்தரைத் தூண்டி விட்டு பின்னாடி இருந்து விஷால் விளையாடுவாரு” என்று ஒரே போடாக மஞ்சரி போட, விஷாலின் முகத்தில் டென்ஷன். “பிக் பாஸ் ஆட்டத்தையே ஒரு ஸ்கிரிப்ட் மாதிரி பார்க்கற பய சார் அவன். அதுக்காகவே ஸ்கிரீன்பிளே பண்ணுவான்” என்று முத்துவின் உத்தி பற்றிச் சொன்னார் ரஞ்சித்.
``பாசமான தாயா இருந்து சந்திரமுகியா மாறி மீண்டும் பாசமான தாயா மாறுவாங்க” என்று அன்ஷிதாவை இறங்கி அடித்தார் ஜாக்குலின். “ஏடாகூடா செஞ்சு உசுரை வாங்கறான்” என்பது போல் ராணவ்வை கிண்டலடித்தார் தீபக்.
“வாரத்திற்கு வாரம் நண்பர்களை மாத்துவது ஜாக்குலின் ஸ்டைல்” என்று பழிவாங்கினார் விஷால். “சின்ன விஷயங்களை ஊதி ஊதி பெரிசாக்கறது. யாருக்கு கைத்தட்டல் கிடைக்குதுன்னு கவனிச்சு அவங்க கூட போய் சேர்ந்துக்கறது” என்று ஜாக்குலின் மீது ரிவேன்ஜ் எடுத்தார் அன்ஷிதா.
“நீங்க தப்புன்னு சொன்னவுடனே சுவிட்ச் போட்ட மாதிரி ஜெப்ரி மாறிடறான்” என்று கோவா கேங் முன்னிட்டு ரயான் சொன்ன சாட்சியம் எடுபடவில்லை. “தப்பைச் சுட்டிக் காட்டி சரி பண்ணா அது நல்ல விஷயம்தானே. அது எப்படி ஸ்ட்ராட்டஜியாகும்?” என்று அந்தச் சாட்சியம் செல்லாது என்றார் விசே. இறுதியாக ராணவ் சொன்னது மிகத் துல்லியமான கருத்து. அவரைப் போய் எப்படி மந்த புத்திக்காரர் என்று சொல்ல முடியும்?! “அட்டாக் மோடில் செய்யறதையேல்லாம் செஞ்சுட்டு அப்புறமா க்யூட் மோடிற்கு மாறி ஏமாத்திடுவாங்க. அப்படி ஏமாந்தவங்கள்ல நானும் ஒருத்தன்” என்று ராணவ் சொல்ல ரசித்து சிரித்தார் விசே. விசேவும் அப்படி ஏமாந்தவர்களில் ஒருவராக சொல்லாம். தன்னை காமெடி பீஸாக காட்டிக் கொள்வதின் மூலம் பழைய பாவங்களை மறக்கடித்து விடும் உத்தியை ஒவ்வொரு வாரமும் செய்கிறார் சவுந்தர்யா.
“முத்து உங்க டிரஸ் பெரிசா இருக்கு. ஜெப்ரி எதையும் சொல்ல முயற்சி பண்ணாதீங்க.. உக்காருங்க” என்றபடி கிளம்பினார் விசே. எனில் நாளை முத்துவின் கேப்டன்சி டாஸ்க் டிராமா பற்றிய விசாரணைகள் உள்ளிட்டு பல சம்பவங்கள் இருக்கக்கூடும். (குறும்படம் போடுங்க சாரே!) இந்த வாரம் ‘மனிதரில் புனிதர்’ வெளியேற்றப்பட்டதாக தகவல் வந்திருக்கிறது. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.