பாமக நிறுவனா் ராமதாஸுடன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சந்திப்பு
Chris Woaks: "நேற்றுதான் அறிமுகமானதுபோல இருக்கிறது!" - 15 வருட சர்வதேச கரியர்; கிறிஸ் வோக்ஸ் ஓய்வு
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.
2011-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான தொடரின் (ODI & T20) மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வோக்ஸ், இதுவரை 122 ஒருநாள் போட்டிகளில் 173 விக்கெட்டுகளும், 33 டி20 போட்டிகளில் 31 விக்கெட்டுகளும், 62 டெஸ்ட் போட்டிகளில் (2013-ல் அறிமுகம்) 192 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.
இக்கட்டான சூழல்களில் பேட்ஸ்மேனாகவும் ஜொலித்திருக்கும் வோக்ஸ், மூன்று ஃபார்மெட்டுகளிலும் மொத்தமாக 3,500-க்கும் ரன்கள் குவித்திருக்கிறார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ஓய்வுபெற்ற பிறகு முன்கள பவுலராக இங்கிலாந்து பவுலிங் யூனிட்டை வழிநடத்திய வோக்ஸ், 2019 ஒருநாள் உலகக் கோப்பையிலும், 2022 டி20 உலகக் கோப்பையிலும் தனது அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.

கடைசியாக 2023-ல் ஆஸ்திரேலியா இங்கிலாந்து வந்து விளையாடிய ஆஷஸ் தொடரில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தியாவுக்கெதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரில் சீனியர் பவுலராக ஆடிய வோக்ஸ், கடைசி போட்டியில் கையில் அடிபட்டபோதும் ஒற்றைக் கையுடன் களமிறங்கி பேட்டிங் செய்திருந்தார்.
இவ்வாறிருக்க, அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதில், காயம் காரணமாக வோக்ஸ் பெயர் இடம்பெறவில்லை. இந்த நிலையில், தனது 15 வருட சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வோக்ஸ் இன்று ஒய்வு பெற்றார்.

இதுகுறித்து வோக்ஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "நேரம் வந்துவிட்டது, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இதுதான் எனக்கு சரியான நேரம்.
நான் சிறுவனாகத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது இங்கிலாந்து அணியில் விளையாட வேண்டும் என்று கனவு கண்டேன்.
அந்தக் கனவுகளை நனவாக்கியதில் நான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன்.
இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது, 3 சிங்கங்கள் கொண்ட ஜெர்ஸியை அணிவது, 15 ஆண்டுகளாக அணி வீரர்களுடன் மைதானத்தைப் பகிர்ந்து கொள்வது, அவர்கள் பலர் என் வாழ்நாள் நண்பர்களாகிவிட்டது என இந்தக் கரியரை மிகப்பெருமையுடன் திரும்பிப் பார்ப்பேன்.
நேற்றுதான் ஆஸ்திரேலியாவில் (2011) அறிமுகமானது போல இருக்கிறது. காலம் வேகமாகச் செல்கிறது.
2 உலகக் கோப்பைகளை வென்றதும், சில ஆஷஸ் தொடர்களில் (4) விளையாடியதும் நான் ஒருபோதும் சாத்தியமில்லை என்று நினைத்த ஒன்று.
Pleasure has been all mine. No regrets pic.twitter.com/kzUKsnNehy
— Chris Woakes (@chriswoakes) September 29, 2025
என் அணி வீரர்களுடனான நினைவுகளும், கொண்டாட்டங்களும் என்றென்றும் என்னுடன் இருக்கும்.
அப்பா, அம்மா, மனைவி அமி, மகள்கள் லைலா, ஈவி ஆகியோரின் அன்புக்கும், தியாகத்துக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் இது எதுவும் சாத்தியமில்லை.
தொடர்ந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்கும், எதிர்காலத்தில் லீக் போட்டிகளில் விளையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.