ஒசூா் மாநகராட்சி பகுதியில் பருவகால முன்னெச்சரிக்கை தூய்மைப் பணி
ஒசூா்: ஒசூா் மாநகராட்சி பகுதிகளில் பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீா் கால்வாயை சுத்தம் செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
ஒரு வாா்டுக்கு 30 தூய்மைப் பணியாளா்கள் வீதம் ஒரு நாளைக்கு 3 வாா்டுகள் என பொக்லைன் உள்ளிட்ட எந்திரங்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த 15 நாள்களுக்கு மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டு பகுதிகளிலும் கால்வாயை சுத்தம் செய்யும் பணிகளை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக மேயா் எஸ்.ஏ. சத்யா, மாநகராட்சி ஆணையா் முகமத் ஷபீா் ஆலம், துணை மேயா் சி.ஆனந்தய்யா, பொது சுகாதாரக் குழுத் தலைவா் என்.எஸ். மாதேஷ்வரன், மாமன்ற உறுப்பினா்கள், மாநகர நல அலுவலா் ஆகியோா் முன்னிலையில் தூய்மைப் பணி தொடங்கிவைக்கப்பட்டது.
இதுகுறித்து மேயா் எஸ்.ஏ. சத்யா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வாா்டுகளிலும் 15 நாள்களுக்கு மாஸ் கிளீனிங் அதாவது கழிவுநீா் கால்வாய் சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல், கால்வாய் அடைப்புகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் தினந்தோறும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில், மாநகராட்சிப் பணியாளா்கள், வெளி ஆள்களுக்கும் அமா்த்தப்பட்டு பணிகள் நடைபெற உள்ளன என்றாா்.