'விமர்சனங்களைத் தாண்டித்தான் தி.மு.க 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது!" - சொல்...
Dental Care: யார் எந்த டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும்?
''இன்றைய நவீன உலகில், டூத் பேஸ்ட் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாகிவிட்டது. பற்களின் ஆரோக்கியத்தைக் காக்க இரண்டு, மூன்று முறை பல் துலக்குபவர்களுக்குக்கூட பேஸ்ட் பற்றிய தெளிவு இருப்பதில்லை. சென்சிடிவ் பற்களுக்கு, பற்சிதைவைத் தடுப்பது, புத்துணர்வு அளிப்பது, வாய் துர்நாற்றத்தை நீக்குபவை, ஈறுகளை வலிமையாக்குபவை என விதவிதமான பேஸ்ட்டுகள் கிடைக்கின்றன.
கவர்ச்சிகரமான விளம்பரங்கள், பற்பசையின் நிறம், சுவை, மணம், அழகான பேக்கிங் ஆகியவற்றைப் பார்த்து பற்பசை வாங்குவது நம் வழக்கமாகிவிட்டது.
ஆனால், அதில் என்னென்ன மூலப்பொருட்கள் உள்ளன, அவை நம் பற்களுக்கு உகந்தவையா, என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் யாரும் கவனிப்பதில்லை'' என்கிறார் வாய் மற்றும் முகம் சீரமைப்பு நிபுணர் வி.சுரேஷ்.
யார் எந்த டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும்; டூத் பேஸ்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை; டூத் பேஸ்ட் டியூபின் மேல் இருக்கும் நிறப்பட்டைகள் ஆகியவற்றைப்பற்றி வி.சுரேஷ் விளக்குகிறார்.

பற்பசைகளில் வேம்பு, லவங்கம் போன்ற இயற்கைப் பொருள்களும், கூடவே நுரை ஏற்படுத்தவும், நறுமணத்துக்காவும், சுவைக்காகவும், நிறத்தை அளிக்கவும், நீண்ட காலம் கெடாமலிருக்கவும் எனப் பல்வேறு ரசாயனப் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, டூத் பேஸ்ட் வாங்கும்போது அதில் என்னென்ன மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை படித்துப் பார்த்து வாங்க வேண்டும்.
பற்பசையில் நுரை ஏற்படுத்த, சோடியம் லாரியல் சல்பேட் சேர்க்கப்படுகிறது. பாக்டீரியா தாக்குதலிலிருந்து பாதுகாக்க ஸ்டேன்னஸ் ஃபுளோரைடு (Stannous Fluoride) சேர்க்கப்படுகிறது. ஈரப் பதத்துக்காகச் சார்பிட்டால் (Sorbitol), ஹுமெக்டன்ட் (Humectant) ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இனிப்புச் சுவைக்காக சோடியம் சாக்கரின் (Sodium saccharin) சேர்க்கப்படுகிறது. இதனுடன், உப்பு, `சலவை சோடா’ எனப்படும் சோடியம் பை கார்பனேட் (Sodium Bicarbonate), கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் டி போன்றவையும் சேர்க்கப்படுகின்றன.

ஃபுளோரைடு இயற்கையாகவே கிடைக்கும் ஒரு தாதுஉப்பு. நாம் வசிக்கும் இடத்தைப் பொறுத்தும், நாம் அருந்தும் நீரில் கலந்துள்ள இதன் அளவைப் பொறுத்தும் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் ஃப்ளோரைடின் அளவு மாறுபடும். ஃபுளோரைடு, நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. ஃபுளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்குப் பற்குழி விழுவது குறைகிறது எனப் பல சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குப் பற்சொத்தை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், ஃபுளோரைடு கலந்த பற்பசைகள் ஏற்றவை. ஆனால், அதிக அளவு ஃபுளோரைடு உபயோகமானது, ஃப்ளூரோசிஸ் என்ற பற்சிதைவு ஏற்படக் காரணமாகிறது. மேலும், குழந்தைகளுக்குப் பற்கள் விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ஃபுளோரைடு உபயோகித்தால், பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் விழக்கூடும்.
பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் 1,000 பி.பி.எம் (ppm - parts per million) அளவுக்கு மிகாமலும், சிறுவர்களுக்கான பற்பசையில் 500 பி.பி.எம் (ppm - parts per million) அளவுக்கு மிகாமலும் ஃபுளோரைடு இருக்க வேண்டும். பற்பசையிலேயே இது குறிப்பிடப்பட்டிருக்கும்.

நுரை வருவதற்காகச் சேர்க்கப்படும் டிடர்ஜென்ட், நிறத்தை அளிக்கும் ரசாயனங்கள் ஆகியவற்றை அதிகமாக உபயோகிப்பதால், பற்கள் எனாமல் இழந்துபோகலாம். மேலும், பற்கள் கூசவோ அல்லது புளிப்புத்தன்மையை உணரவோ செய்யும். இதன் மூலம் சிறு வயதிலேயே பற்களுக்கு பாதிப்புகள் உருவாகும்.
முதியவர்களுக்கும் வயோதிகம் காரணமாக, பற்கள் தேய்மானம் அடைந்திருப்பதால் சென்சிட்டிவ்வாக (Sensitive) மாறிவிடும். எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி, சென்சிடிவ் பற்பசைகளை உபயோகிப்பது நல்லது.
ஒவ்வொருவரின் வயதைப் பொறுத்து பற்பசையின் அளவு மாறுபடும். ஃபுளோரைடு உட்பட பல்வேறு ரசாயனப் பொருட்கள் உள்ள பற்பசையில் ஒரு பட்டாணி அளவு எடுத்து, பல் துலக்கினாலே போதும். பெரியவர்கள் பயன்படுத்துவதைவிடக் குழந்தைகளுக்கு குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும்.
*வண்ணமயமான பேஸ்ட்டைவிட வெள்ளை நிற பேஸ்ட்டே சிறந்தது.
*ஃபுளோரைடு குறைவான பேஸ்ட்டையே தேர்வுசெய்யுங்கள்.
*ஜெல் பேஸ்ட்டுகள் பற்களின் தேய்மானத்துக்குக் காரணமாகும் என்பதால், க்ரீம் பேஸ்ட்டுகளே சிறந்தவை.
*பற்களை பாலீஷ் செய்வதற்கும், சுத்தப்படுத்துவதற்கும் அப்ரேஸிவ் (Abrasives) எனும் ‘தேய்க்கும் பொருள்’ பயன்படுத்தப்படுகிறது. இது, பற்கள் சொத்தையாகக் காரணமாகும் ரசாயனங்கள் கொண்டது. ஆகவே, இதன் அளவு குறைந்ததாக இருக்கும் பேஸ்ட்டாகப் பார்த்து வாங்குங்கள்.
*சோடியம் லாரைல், சோடியம் லாரேத், பேக்கிங் சோடா, பெராக்ஸைட் ஆகியவை அடங்கிய பேஸ்ட்டுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

கறுப்பு நிறப் பட்டை: முழுமையாக ரசாயனப் பொருள்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டது.
நாம் வாங்கும் பற்பசை டியூப்பின் அடி முனையில் பச்சை, நீலம், சிவப்பு, கறுப்பு என நான்கு வண்ணங்களில் ஏதேனும் ஒரு வண்ணப்பட்டை தீட்டப்பட்டிருக்கும். அந்த வண்ணப்பட்டையைக் கொண்டு, பற்பசையில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிய முடியும்.
பச்சை நிறப் பட்டை: பற்பசை முழுக்க முழுக்க இயற்கைப் பொருள்களால் தயாரிக்கப்பட்டது.
நீல நிறப் பட்டை: பற்பசையில் இயற்கைப் பொருட்களுடன் சில மருந்துகளும் கலக்கப்பட்டிருக்கின்றன.
சிவப்பு நிறப் பட்டை: இயற்கைப் பொருள்களுடன், அதிக அளவில் ரசாயனப் பொருள்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
கறுப்பு நிறப் பட்டை: முழுமையாக ரசாயனப் பொருள்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டது.