Doctor Vikatan: அடிபட்ட காயங்கள் ஏற்படுத்திய தழும்புகள், நிரந்தரமாகத் தங்கிவிடுமா?
Doctor Vikatan: என் வயது 34. எனக்கு சமீபத்தில் ஒரு விபத்தில் அடிபட்டது. அதனால் ஏற்பட்ட காயங்கள் தழும்புகளாக மாறிவிட்டன. அவை நிரந்தரமாக தங்கிவிடுமா, பழைய சருமத்தைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்... தழும்புகளைப் போக்கும் ஆயின்மென்ட் உதவுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

தழும்புகளில் இரண்டு வகைகள் உள்ளன. எப்போதோ ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக ஏற்பட்டது ஒரு வகை, சமீபத்தில் ஏற்பட்ட பாதிப்பினால் உண்டானது இன்னொரு வகை.
சின்ன வயதில் அம்மை பாதித்ததால் உருவான தழும்பு, அடிபட்டதால் ஏற்பட்ட தழும்பு, வெட்டுக்காயம் ஏற்படுத்திய தழும்பு, இதெல்லாம் ஏற்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன என்ற நிலையில், அந்தத் தழும்புகளை குணப்படுத்துவது சாத்தியமற்றது.
அந்தத் தழும்புகளின் ஆழம், எப்போது ஏற்பட்டது என்பதையெல்லாம் வைத்து ஓரளவுக்கு குணப்படுத்தலாம். அதுவே சமீபத்தில் ஏற்பட்ட காயம், அதனால் ஏற்பட்ட தழும்பு என்றால் அதைச் சரிசெய்வது ஓரளவு சுலபம். காயம் ஆறிய உடனேயே அதற்கான கவனிப்பைத் தொடங்க வேண்டும்.
மேலோட்டமான காயங்கள் என்றால், அவை ஆறியதும், சிலிக்கான் ஜெல் உபயோகிக்கத் தொடங்கலாம்.

காயங்களின் ஆழம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் லேசர் சிகிச்சை, மைக்ரோ நீட்லிங் சிகிச்சைகள் மூலம் நன்றாகவே சரிசெய்ய முடியும். ஆனால், எந்தத் தழும்பு ஏற்பட்டாலும், அதன் பிறகு சருமம் பழையநிலைக்குத் திரும்பாது.
ஓரளவுக்கு சாதாரண தோற்றத்துக்குத் திரும்பும், அவ்வளவுதான். புரியும்படி சொல்வதானால், மிக ஆழமான தழும்புகளை சரியான சிகிச்சைகளின் மூலம் 70 சதவிகிதமும், மேலோட்டமான காயம் ஏற்படுத்திய தழும்புகளை 90 சதவிகிதம் வரையிலும் சரிசெய்ய முடியும். அது அவரவர் சருமத்தின் தன்மை, எடுத்துக்கொள்ளும் சிகிச்சை போன்றவற்றைப் பொறுத்தது. எனவே, உங்கள் விஷயத்தில் காயம் ஆறிய உடனேயே சரும மருத்துவரைச் சந்தித்து சரியான சிகிச்சையை சீக்கிரமே தொடங்குங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.