Doctor Vikatan: வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே மலச்சிக்கல் சரியாகும் என்பது உண்மையா?
Doctor Vikatan: மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே நிவாரணம் தெரியும் என்கிறார்களே... இது உண்மையா? மலச்சிக்கலுக்கான மாத்திரைகள் அடிக்ஷனாக மாற வாய்ப்புண்டா? அப்போது உப்பு- வெந்நீர் கரைசல் குடிப்பது சரியானதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினாக் தாஸ்குப்தா
மலச்சிக்கல் பிரச்னையோடு வரும் பலரும், கூகுளில் இந்தத் தகவலைப் பார்த்துவிட்டு, வெந்நீரில் உப்பு கலந்து சாப்பிட்டால், பிரச்னை சரியாகிவிடுமா என்ற கேள்வியோடு மருத்துவர்களைச் சந்திக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு மட்டுமல்ல, எந்த நோய்க்கும், கூகுள் டாக்டரை நம்பாமல், சரியான மருத்துவரிடம், முறையான சிகிச்சை எடுப்பதுதான் பாதுகாப்பானது.
உப்பு கலந்த வெந்நீர் குடிப்பதால், உங்கள் உடலில் சோடியம் அளவு அதிகரித்து, அதன் விளைவாக தற்காலிகமாக மலச்சிக்கல் பிரச்னை சரியாகலாம். ஆனால், அது நிரந்தர தீர்வோ, பாதுகாப்பான தீர்வோ அல்ல. சோடியம் அதிகமுள்ளதால் இந்தச் சிகிச்சை, ரத்த அழுத்தம் மற்றும் கிட்னி பாதிப்பு உள்ள நபர்களுக்கு மிகமிக ஆபத்தானது. இன்னும் சிலர், மலச்சிக்கல் பிரச்னைக்கு மருந்துக் கடைகளில் சுயமாக மாத்திரைகள் வாங்கிப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது ஒரு கட்டத்தில் மாத்திரை இல்லாமல் மலம் கழிக்க முடியாது என்ற அடிக்ஷன் நிலையை ஏற்படுத்தலாம். எனவே, இவை எல்லாமே தற்காலிக தீர்வுகள்தான்.
மலச்சிக்கலுக்கான மருந்து உங்கள் உணவுப்பழக்கத்தில்தான் இருக்கிறது. உங்கள் உணவில் போதுமான அளவு நார்ச்சத்து இருக்க வேண்டும். ஒவ்வொரு நாள் உணவிலும் குறைந்தபட்சம் இரண்டு வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் இருக்க வேண்டும். தவிர, தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். தண்ணீர் மட்டுமன்றி, சூப், ஜூஸ், ரசம், கஞ்சி, மோர் என எல்லாம் சேர்ந்து 3 லிட்டர் திரவம் உங்கள் உடலுக்குள் போக வேண்டும். அப்போதுதான் மலச்சிக்கல் இல்லாமலிருக்கும்.
வெந்நீரில் உப்பு கலந்து குடிப்பதும், பார்மசியில் மாத்திரை வாங்கிப் பயன்படுத்துவதும் மலச்சிக்கல் பிரச்னைக்கு தற்காலிக தீர்வைக் கொடுத்துவிட்டு, மறுபடி அதே பிரச்னையைத் தொடரச் செய்யும். பிரச்னைக்கான காரணம் அறிந்து, அதற்கான சரியான சிகிச்சையை எடுப்பதை எப்போதும், எல்லா விஷயங்களிலும் நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.