Gaur: ``மனித தவறுகளால் மரண வேதனையில் துடிக்கும் காட்டுமாடுகள்'' - வனத்துறை சொல்வதென்ன?
ஆசியாவின் மிகப்பெரிய மாட்டினமாக அறியப்படும் இந்திய காட்டுமாடுகளின் (Indian Gaur) எண்ணிக்கை நீலகிரியில் கணிசமாக காணப்படுகின்றன.
வனங்களில் அந்நிய களைத்தாவரங்களின் ஆக்கிரமிப்பு, வாழ்விடம் மற்றும் வழித்தட அழிப்பு, நீர்நிலைகளுக்குச் செல்லும் பாதைகளில் தடுப்பு வேலிகள் போன்ற பல்வேறு காரணங்களால் காடுகளை இழந்து தவிக்கும் காட்டுமாடுகள், குடியிருப்பு பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் தஞ்சமடையும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

மனித நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நடமாடும் காட்டுமாடுகளுக்கு சுருக்கு கம்பிகள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், மின் வேலிகள், உடைந்த கண்ணாடிகள், பிளாஸ்டிக் கழிவுகள், உலோக குழாய்கள் போன்றவை பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன.

இவற்றால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்படும் காட்டுமாடுகளின் உடல் ரணப்பட்டு மரண வேதனையில் துடித்து இறக்கின்றன.
வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அவற்றைப் பிடித்து சிகிச்சை அளித்து விடுவிக்கின்றனர். காலில் பிளாஸ்டிக் குழாய் சிக்கி ரணத்துடன் தவித்த காட்டுமாட்டை கடந்த மாதம் கோத்தகிரி, பெட்டட்டி பகுதியில் மீட்ட வனத்துறையினர் அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிளாஸ்டிக் குழாயை அகற்றியுள்ளனர். சிகிச்சை அளித்து மீண்டும் விடுவித்துள்ளனர்.

இந்த நிலையில், கோத்தகிரி பகுதியில் இரண்டு காட்டுமாடுகளின் கால்களில் உலோகங்கள் சிக்கி நடமாட முடியாமல் தவிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கால்நடை மருத்துவர்களுடன் அந்த பகுதிக்குச் சென்ற வனத்துறையினர், இரண்டு காட்டுமாடுகளுக்கும் மயக்க ஊசி செலுத்தி காலில் இருந்த உலோகங்களை அகற்றி சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.
தொடரும் இந்த துயரம் குறித்து தெரிவிக்கும் வனத்துறை, " சுமார் 4 வயதுடைய பெண் காட்டுமாடு ஒன்று இடது பின்னங்காலில் எவர்சில்வர் வளையம் சிக்கியதால் காயத்துடன் நடமாடியது கண்டறியப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி அதன் காலில் சிக்கியிருந்த எவர்சில்வர் வளையம் அகற்றப்பட்டது.
அதே போல் கோத்தகிரி சக்தி நகர் மலைப் பகுதியில் சுமார் 8 வயதுடைய ஆண் காட்டுமாடு ஒன்றின் வலது பின்னங்காலில் சிக்கிய எவர்சில்வர் பாத்திரத்துடன் நடமாடியது கண்டறியப்பட்டது. மயக்க ஊசி செலுத்தி காலில் சிக்கியிருந்த எவர்சில்வர் பாத்திரம் அகற்றப்பட்டது. வீடுகள், வணிக நிறுவனங்களின் உணவு கழிவுகள் முதல் உலோக கழிவுகள் வரை எதையும் கண்ட இடங்களில் தூக்கி எறியாமல், முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும்.

நமது சிறிய அலட்சியம் தான் காட்டுமாடுகளை பெரிய துன்பத்திற்கு உள்ளாக்கி வருகின்றன. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் என்பதால் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காயங்களுடன் நடமாடும் காட்டு மாடுகளை கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்." என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.