Gingee Fort: செஞ்சி கோட்டையை உலகப் பாரம்பர்ய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ; சுவாரஸ்ய பின்னணி என்ன?
சத்ரபதி சிவாஜி மகாராஜா மகாராஷ்டிரா முழுவதும் கோட்டைகளைக் கட்டினார். இக்கோட்டைகள் இன்றைக்கும் சுற்றுலா மையங்களாகவும், சத்ரபதி சிவாஜியின் பெயர் சொல்லும் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகளை யுனெஸ்கோவின் பாரம்பர்ய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக மகாராஷ்டிரா தொல்லியல் துறை மற்றும் கலாசாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக வேலை செய்தனர்.
அதன் பயனாக மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் சத்ரபதி சிவாஜி காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகளை யுனெஸ்கோ உலகப் பராம்பர்ய சின்னங்களாக அறிவித்து இருக்கிறது.

அதில் 7 கோட்டைகள் மும்பை வட்டாரத்திற்குள் இருக்கின்றன. மகாராஷ்டிராவின் மற்ற பகுதியில் 4 கோட்டைகள் இருப்பதாக மகாராஷ்டிரா தொல்லியல் துறை அதிகாரி அபிஜித் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இக்கோட்டை செஞ்சியில் இருக்கிறது. யுனெஸ்கோவின் இந்த அறிவிப்பு மூலம் மகாராஷ்டிராவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இது குறித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “சத்ரபதி சிவாஜியின் கோட்டைகளை யுனெஸ்கோ உலகப் பாரம்பர்ய சின்னங்களாக அறிவித்து இருப்பது வரலாற்று பெருமை. சத்ரபதி சிவாஜி மகாராஜின் 12 கோட்டைகள் இப்போது யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய பட்டியலில் உள்ளன.
நமது நாட்டின் அன்புக்குரிய தெய்வமான மக்களின் மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் 12 கோட்டைகள் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பர்ய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.'' என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் ஏற்கனவே சத்ரபதி சிவாஜி ரயில்நிலைய கட்டிடம், அஜந்தா, எல்லோரா, எலிபெண்டா குகைகள் போன்றவை யுனஸ்கோவின் புராதான சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கோட்டைகள் ஷால்ஹர், சிவ்னெரி, லோஹாகட், ராய்கட், காந்தேரி, பிரதாப்கட், சுவர்னதுர்க், சிந்துதுர்க் போன்ற இடங்களில் இருக்கின்றன.