Harbhajan Singh : 'தோனியுடன் பேசியே 10 ஆண்டுகள் ஆகிவிட்டது!' - காரணம் சொல்லும் ஹர்பஜன் சிங்
இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தான் தோனியுடன் பேசியே 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதென கூறியிருக்கிறார். கூடவே, 'ஒரு நட்புறவில் நாம் ஒருவரை மதிக்கிறோம் எனில், அவரும் நம்மை பதிலுக்கு மதிக்க வேண்டும்.' என்றும் கூறியிருக்கிறார்.
வட இந்திய செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் ஹர்பஜன் சிங், 'தோனியுடன் நான் பேசுவதே இல்லை. கடைசியாக நாங்கள் ஐ.பி.எல் இல் சென்னை அணிக்காக ஆடியபோது பேசிக்கொண்டோம். அதுவும் மைதானத்தில் போட்டி நிமித்தமாகத்தான் பேசிக்கொள்வோம். மற்றபடி அவரும் என் அறைக்கு வரமாட்டார். நானும் அவரின் அறைக்கு செல்லமாட்டேன். நானும் அவரும் சரியாக பேசியே 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கு எந்த காரணமும் இல்லை. அவருக்கு எதிராகவும் நான் நிற்கவில்லை. ஆனால், அதற்காக நானாக அவருக்கு தொடர்புகொண்டும் பேசவில்லை.
நான் அழைத்தால் யார் போனை எடுத்து பேசுவார்களோ அவர்களை மட்டும்தான் நான் அழைப்பேன். நாம் மீண்டும் மீண்டும் அழைத்தும் எந்த பதிலும் இல்லையெனில் அதில் எந்த அர்த்தமும் இல்லை. என்னுடன் நண்பர்களாக இருப்பவர்களிடம் மட்டுமே நான் தொடர்பில் இருக்கிறேன். ஒரு நட்புறவில் நாம் ஒருவரை மதித்து நடத்தினால் அவரும் நம்மை மதிக்க வேண்டும். இருவருக்கும் பரஸ்பரம் மரியாதை இருக்க வேண்டும்.' எனப் பேசியிருக்கிறார்.
தோனிக்கு முன்பாகவே இந்திய அணிக்கு அறிமுகமானவர் ஹர்பஜன் சிங். தோனியின் தலைமையின் கீழும் பல ஆண்டுகள் ஆடியிருக்கிறார். தோனி தலைமையில் இந்திய அணி 2011 உலகக்கோப்பையை வென்றபோது அந்த அணியின் முக்கிய வீரராகவும் ஹர்பஜன் இருந்தார்.