செய்திகள் :

Harshad Mehta: பல்லாயிரம் கோடி ஊழல், சரிந்த சாம்ராஜ்யம்; கதறிய கடைசி நொடிகள்; ஹர்ஷத் மேத்தாவின் கதை

post image

‘பிக் புல்’ என்றழைக்கப்பட்ட ஹர்ஷத் மேத்தா பற்றிய கட்டுரைகள், கதைகள், வழக்கு விசாரணைகள் திரைப்படங்களாகவும், வெப்சீரியஸாகவும் எடுக்கப்பட்டு வருகின்றன. எத்தனை முறை கேட்டாலும் ஹர்ஷத் மேத்தாவின் கதை கண்களை விரித்து வியக்க வைக்கின்றன. 'Scam 1992' வெப்சீரிஸ் வந்தபோது பிரபலமானது, இப்போது 'லக்கி பாஸ்கர்' படம் மூலம் மீண்டும் பிரபலாகியுள்ளது. பங்குச் சந்தையில் கொடிக் கட்டிப் பறந்த ஹர்ஷத் மேத்தாவின் சாம்ராஜ்ஜியம் எங்கு ஆரம்பித்தது, எப்படி முடிவுக்கு வந்தது என்பதைப் பற்றிப் பார்போம்.  

குஜராத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஹர்ஷத் மேத்தா, 1976ம் ஆண்டு பாம்பே லாலா லஜ்பத்ராய் கல்லூரியில் தனது பி.காம் படிப்பை முடிக்கிறார். படிப்பிற்காகவும், தொழிலுக்காகவும் அவரது குடும்பம் குஜாராத்திலிருந்து பம்பாய்க்குக் குடி வருகிறது. இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் அந்தக் கனவுகளின் நகரத்தில் தெருத்தெருவாக வீடு தேடி குறைந்த வாடகையில் வீட்டைப் பிடித்து தொழில் செய்யத் தொடங்கியது ஹர்ஷத் மேத்தாவின் குடும்பம்.

அப்பா ஷாந்திலால் மேத்தாவின் டெக்ஸ்டைல் தொழில் ஓரளவிற்குக் குடும்பத்தை ஓட்ட, அதுவும் ஒரு கட்டத்தில் வியாபாரம் குறைந்து நலிவடைந்து விடுகிறது. குடும்பத்தின் மொத்தச் சுமையும் மூத்த மகனாக இருக்கும் ஹர்ஷத் மேத்தா தலையில் வந்து விழ தங்கம், வைரத்தைத் தரகராக இருந்து விற்பது என நகரம் முழுவதும் சுற்றித் திரிந்து தன்னால் முடிந்தப் பல வேலையைச் செய்து பார்க்கிறார். அவையெல்லாம் போதுமான வருமானத்தைத் தாராமல் போக, தனது பி.காம் படிப்பிற்கு ஏற்ற வேலையைத் தேடுகிறார். அந்தத் தேடுதலில் ஹர்ஷத் மேத்தா கண்ணில் பட்டது பாம்பே தலால் ஸ்ட்ரீட் ‘இந்தியப் பங்குச் சந்தை’.

ஹர்ஷத் மேத்தா

பங்குச் சந்தைப் பற்றிப் பெரிதாக ஏதும் தெரியாமலே பங்குகளை வாங்கி, விற்கும் ஆலோசனைகளை வழங்கும் பிரஷான் பஞ்ஜீவந்தாஸ் கம்பேனியில் பங்குச் சந்தைத் தரகராக 1980ம் ஆண்டு வேலைக்குச் சேருகிறார். நாளுக்கு நாள் பங்குச் சந்தைப் பற்றிக் கற்றுத் தேறும் ஹர்ஷத் மேத்தா, முதலீட்டாளர்கள், பெரு நிறுவனத்தினர், பணம் படைத்தவர்கள், பங்குச் சந்தையைச் சேர்ந்தவர்களின் தொடர்புகளை விரிவாக்குகிறார். இந்தத் தொடர்பும், பழக்க வழகத்தை முதலீடாக வைத்துச் சொந்தமாக ‘GrowMore Research and Asset Management’ என்ற பெயரில் பங்குச் சந்தை ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்குகிறார்.

முதலீட்டாளர்களைப் பெருக்குவது, பங்குச் சந்தையைத் துல்லியமாகக் கணித்து பங்குகளை வாங்கி, விற்று லாபம் ஈட்டி, அதிலிருந்து கமிஷனைப் பெற்றுக்கொள்வது என ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துகொண்டே சென்றது. குடும்பமும் தன்னிறைவை அடைந்து வசதியாக வாழத்தொடங்கியது. ஹர்ஷத் மேத்தா இதோடு தனது பங்குச் சந்தை ஆட்டத்தை நிறுத்தியிருந்தால் எந்தப் பிரச்னையும் வந்திருக்கிறது. பணம் கொடுத்த அந்த போதையால் கோடிகளில் விளையாடியவர், பல நூறு கோடிகளில் விளையாடும் பேராசைச் சுழலில் வீழ்ந்தார். 

குறைந்த மதிப்பில் இருக்கும் பங்குகளை வாங்கி போலியான முதலீடுகள் மூலம் அதை உயர்த்திவிட்டு, நல்ல மதிப்பிற்கு அந்தப் பங்குகளின் விலை ஏறியவுடன் தன் பங்குகளை உஷாராக விற்று லாபம் எடுத்துவிடும் யுக்தியைக் கையாளத் தொடங்கினார். இது பெரும் லாபத்தைக் கொடுத்து அவரை உயர்த்தியது. ஆனால், அவரது வலையில் சிக்கி பங்குகளை வாங்கியவர்கள் அதள பாதாளத்திற்குச் செல்ல வைத்தது. நிறுவனங்களில் பணி புரிபவர்களை கையில் போட்டுக் கொண்டு அந்நிறுவனங்களின் பொருளாதாரா வளர்ச்சியையும், உற்பத்தியையும் கணித்து பங்குச் சந்தையில் விளையாடினார். பங்குச் சந்தை விதிகளிலும் விளையாடி விதிமீறல்களில் ஈடுபட்டார். இதோடாவது நிறுத்தியிருக்கலாம்.  

ஹர்ஷத் மேத்தா

சிறு சிறு கோடிகளில் வரும் முதலீட்டை பல நூறு கோடிகள், பல ஆயிரம் கோடிகளாக மாற்றி லாபத்தைப் பார்க்கலாம் என முதலீடு நிதிகளைத் தேடி ஓட ஆரம்பித்தார். பங்குகளை ஏற்றி, இறக்கி விளையாட பல நூறு கோடிகள் தேவைப்பட்டது. அதற்கு வங்கிப் பத்திர ரசீதை (BR) பகடையாகப் பயன்படுத்தினார். ஒரு வங்கி, மற்றொரு வங்கிக்கு ‘BR’ மூலம் கடன் தரலாம் என்றிருந்த வங்கி அமைப்பில் இருக்கும் ஓட்டையை தனக்குச் சாதமாகப் பயன்படுத்தினார். டம்மியான வங்கியைக் கையில் போட்டுக் கொண்டு, அந்த வங்கியின் பெயரில் BR மூலமாக மற்றொரு வங்கியில் கடன் வாங்கி, இரு வங்கிக்கும் இடையில் இடைத்தரகராக இருந்து பணத்தைத் தன் கைகளுக்குக் கொண்டு வந்தார்.

அப்பணத்தைப் பங்குச் சந்தையில் போட்டு லாபம் எடுத்துவிட்டு ஓரிரு வாரங்களில் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் மோசடிகளில் ஈடுபடத்தொடங்கினார். வங்கிகளில் பணிபுரிந்த முக்கிய அதிகாரிகளும ஹர்ஷத் மேத்தாவின் இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்து  நல்ல லாபம் பார்க்கத்தொடங்கினர். ஒருகட்டத்தில் போலியான BR களை அச்சிட்டு வங்கிப் பணத்தை அதிகமாக எடுக்க ஆரபித்தார். மக்கள் பணத்தை வைத்து பங்குச் சந்தையில் விளையாடினார். 

ஹர்ஷத் மேத்தா மற்றும் அவரின் குடும்பத்தின் வங்கிக் கணக்கில் கணக்கிட முடியாத அளவிற்கு ஆயிரக் கணக்கான கோடிகள் ஏறிக் கொண்டே இருந்தன. ‘1980 - 1990’ இந்த பத்து ஆண்டுகளில் ஹர்ஷத் மேத்தா அசுர வளர்ச்சியைக் கண்டார். பங்களாக்கள், சொத்துக்கள், விலையுயர்ந்த பல கார்கள் அவரது வீட்டு வாசலில் வந்து நின்றது. விலையுயர்ந்த லெக்ஸஸ் காரை அவர் வாங்கியது பாம்பே முழுவதும் பேசுபொருளானது. ஆனால், இவையெல்லாம் ரொம்ப நாள்களுக்கு நீடிக்கவில்லை.

ஹர்ஷத் மேத்தா

1991 சமயத்தில் இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சியைக் கண்டது. 1991ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராகப் பதிவியேற்றார். இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த பல புதியக் கொள்கைகள், திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. பங்குச் சந்தை முறைகேடுகளைக் கண்காணித்து, முறைப்படுத்த ‘SEBI’ அமைப்புக் கொண்டுவரப்பட்டது. வங்கியில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க ‘RBI’யில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இவை ஹர்ஷத் மேத்தாவின் முடிவுரையை ஒவ்வொரு எழுத்தாக எழுத ஆரம்பித்தன. 

பங்குச் சந்தை வீழ்ச்சியால் ஹர்ஷத் மேத்தா வங்கியிடமிருந்து வாங்கிய பல நூறு கோடி மதிப்பிலானப் பணத்தை குறித்தக் காலத்திற்கு திருப்பிச் செலுத்த முடியாமல் போக, ஹர்ஷத் மேத்தாவின் முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளியில் வர ஆரம்பித்தன. 

ஹர்ஷத் மேத்தாவின் முறைகேடுகள் பற்றி தீவிரமாகப் ஆராய்ந்து வந்துவர் பத்திரிகையாளர் சசேதா தலால். இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்ட சசேதா தலால், ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தையிலும், வங்கிகளிடமும் செய்த முறைகேடுகளைப் பற்றி ‘பிக் புல்’ எனக் குறிப்பிட்டு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் கட்டுரை வெளியிட்டார்.

பின்னாளில் ஹர்ஷத் மேத்தாவின் முறைகேடுகள், பங்குச் சந்தை முறைகேடுகள் பற்றிய தொகுப்பாக பத்திரிக்கையாளர் சசேதா தலால், ‘Scam 1992’ என்ற பெயரில் நூலை வெளியிட்டார். அது ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. ஹர்ஷத் மேத்தாவின் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. அவரது போலியான பங்குச் சந்தை ஏற்ற யுக்தி, வங்கி முறைகேடுகள் பற்றிய உண்மைகள் அம்பலமாக முதலீட்டாளர்கள் ஹர்ஷத் மேத்தாவுடனான வர்த்தகத்தை கைவிட்டனர். பங்குச் சந்தை முறைகேடுகள், வங்கி முறைகேடுகள், நிதி முறைகேடுகள், வரி முறைகேடுகள், லஞ்சம், ஊழல் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் 70க்கும் மேற்பட்ட வழக்குகளில் மாட்டிக் கொண்டார் ஹர்ஷத் மேத்தா. 

Harshad Mehta

வருவாய், புலனாய்வு, SEBI உள்ளிட்டத் துறைகளின் தொடர் விசாரணையால் ஹர்ஷத் மேத்தா நிலைகுலைந்து போனார். அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அவரது அதிபுத்திசாலித்தனங்கள் எதுவும் எடுபடவில்லை. பாம்பே உயர் நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும் ஹர்ஷத் மேத்தா பல வழக்குகளில் நிதி மோசடியில் ஈடுபட்டதை உறுதி செய்து, குற்றவாளியாகக் தீர்ப்பளித்தது. சுமார் ரூ.30,000 கோடி வரை ஹர்ஷத் மேத்தா நிதிமோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. அதற்கு மேலும் இருக்கலாம் என்ற கோணத்தில் பத்து ஆண்டுகளைத் தாண்டியும் விசாரணை நீடித்தது. எஸ்.பி.ஐ, என்.எச்.பி வங்கிகள் எல்லாம் விசாரணைக்குட்படுத்தப்பட்டன. ஹர்ஷத் மேத்தா, அப்போதைய பிரதமராக இருந்த பி.வி. நரசிம்ம ராவிடம் உதவி கேட்க முயற்சி செய்ததாக ஹர்ஷத் மேத்தாவின் மனைவி ஜோதி மேத்தா கூறியிருக்கிறார். ஆனால், அவை ஏதும் வேலைக்கு ஆகவில்லை.

விசாரணைக் கைதியாக இருந்தபோது அவ்வப்போது பெயிலில் வந்த ஹர்ஷத் மேத்தா, தனது பெயரின் மீதான கலங்கத்தைத் துடைக்க நாளிதழ்களில் பங்குச் சந்தை அறிவுரைகள் குறித்தும் தன்னைக் குறித்தும் எழுதத் தொடங்கினார். அதுவரை நாளிதழ்களில் பங்குச் சந்தை, சென்செக்ஸ் பற்றி படித்திராதவர்கள் ஹர்ஷத் மேத்தாவின் கட்டுரைகளைப் படிக்க ஆரம்பித்தனர். தொலைக்காட்சிகளில் பேட்டியளித்தார். இருப்பினும், ஒவ்வொரு வழக்காக விசாரிக்கப்பட பெயில் கிடைத்தும் அடுத்தடுத்த வழக்குகளில் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

ஹர்ஷத் மேத்தா

2001ம் ஆண்டு நவம்பர் மாதம் விசாரணைக் கைதியாக மும்மை தானேவில் இருக்கும் சிறையில் அடைப்பட்டார். சிறையில் இருந்த ஹர்ஷத் மேத்தாவிற்கு டிசம்பர் 30ம் தேதி இரவு 7 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. சிறையில் நெஞ்சு வலியால் அலறித் துடித்திருக்கிறார். சிறை அதிகாரிகளும், டாக்டர்களும் அவரை பரிசோதித்து அருகில் இருக்கும் தானே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு  ஹர்ஷத் மேத்தா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஹர்ஷத் மேத்தாவின் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது. 

ஹர்ஷத் மேத்தா வழக்கு பங்குச் சந்தை, வங்கி அமைப்பு முறையில் இருக்கும் பல சட்ட ஓட்டைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இவை பங்குச் சந்தையிலும் வங்கி அமைப்பு முறை, ஆர்.பி.ஐ துறைகளில் பல்வேறு மாற்றங்களையும், புதிய விதிமுறைகள் வருவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இருப்பினும், இந்த நிதி மோசடிகள் ஹர்ஷத் மேத்தாவோடு நின்றதா என்று கேட்டால், அதற்குப் பதில் இல்லை. ஏதோவொரு வகையில் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் ஊழல் பேர்வழிகளின் கதைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

Neerathikaram | Vikatan Play

Bomb threat:‌ பள்ளி, கல்லூரிகள் முதல் ஹோட்டல் வரை தொடரும் வெடிகுண்டு மிரட்டல்... திணறும் காவல்துறை!

தாஜ்மஹால் தொடங்கி ரயில் நிலையங்கள் வரை நாட்டின் பல பகுதிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து அதிகரித்து நிலையில், சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நீலகிரியிலும் வெடிகுண்டு மிரட்டல்கள் த... மேலும் பார்க்க

போதைப்பொருள் விற்பனை; நடிகர் மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது! - நடந்தது என்ன?

90-களின் தமிழ்த் திரைப்பட வில்லன்கள் பட்டியலில் மிக முக்கிய இடம் மன்சூர் அலிகானுக்கு உண்டு. தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தவர், தற்போது குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திர... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம்: `போலீஸ் கொலைவெறித் தாக்குதல்' - இளைஞரின் சிறுநீரகம் செயலிழந்ததாக புகார்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனிடம் வழங்கப்பட்ட மனுவில், “கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சேரன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் தௌபீக் உமர் (21... மேலும் பார்க்க

மலேசியா டு திருச்சி; விமானத்தில் கடத்திவரப்பட்ட அபூர்வ வகை ரக்கூன், பல்லிகள்; தொடரும் கடத்தல்கள்!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் ஏற்பட்ட தகராறு... பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர்..!

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகிலுள்ள கூட்டாம்புளியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், அதே பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வெள்ளக்கண்ணு. கொத்தனாரான இவருக்கும் அதே பகுதியைச் சே... மேலும் பார்க்க

ரூ.2 கோடிக்கு அரிய வகை மண்ணுளி பாம்பு விற்க முயற்சி; கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி?

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அரிய வகை மண்ணுளிப் பாம்புகள் வசிக்கின்றன. ’இரட்டை தலைப் பாம்பு’ என அழைக்கப்படும் சிவப்பு நிற மண்ணுளிப் பாம்புகளுக்கு சர்வதேச சந்தைகளில் அதிக மவுசு இருக்கிறதாக கூறப்படுக... மேலும் பார்க்க