India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொடுத்த தக்க பதிலடி!
இந்தியா மீது கடும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது பாகிஸ்தான். ஆனால், அந்த ஏவுகணைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்துள்ளது இந்திய ராணுவம்.
நேற்று இரவு, ஜம்முவின் எல்லைகளான சத்வாரி, சம்பா, ஆர்.எஸ். புரா, ஆர்னியா ஆகிய பகுதிகள் மீது எட்டு ஏவுகணைகளை ஏவியது பாகிஸ்தான். இவற்றை இந்தியா வெற்றிகரமாக வானிலேயே தகர்த்தது. இந்தத் தாக்குதலில் உயிர் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவைத் தாக்கும் முறை, பாலஸ்தீனத்தின் தீவிரவாத அமைப்பான ஹமாஸின் தாக்குதல் முறையை ஒத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தான் இந்தப் போரை முதலில் தொடங்கியது.
இந்தப் போரில் ஹமாஸ் எப்போதும் இஸ்ரேல் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவுகிறது. இதே முறையைத் தற்போது பாகிஸ்தான் ராணுவம் பின்பற்றி வருகிறது. ஆனாலும், இதனால் எந்தப் பயனும் இல்லை. காரணம், இந்திய ராணுவம் அனைத்து ஏவுகணைகளையும் இந்திய மண்ணில் விழாமல் தடுத்துவிட்டது.