இரட்டை இலை சின்னம் விவகாரம்: தோ்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் பதில் மனு
Indigo Airlines: தொழில் நுட்ப கோளாறு... மும்பை விமான நிலையத்தில் பயணிகள் 16 மணி நேரம் தவிப்பு!
மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துருக்கியில் இருக்கும் இஸ்தான்புல் என்ற இடத்திற்கு இண்டிகோ விமானம் ஒன்று நேற்று அதிகாலையில் புறப்படுவதாக இருந்தது. இதனால் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் வந்து காத்திருந்தனர். காலையில் விமானம் திட்டமிட்டபடி கிளம்பவில்லை. விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் பயணிகள் குழந்தைகளுடன் பலமணி நேரம் விமான நிலையத்தில் காத்துக்கிடந்தனர். ஆரம்பத்தில் விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பயணிகளுக்கு சாப்பிட எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனால் பயணிகள் சோசியல் மீடியாவில் தங்களது குறைகளை தெரிவிக்க ஆரம்பித்தனர். பயணிகள் பல முறை விமானத்தில் ஏற்றப்பட்டு பின்னர் இறக்கப்பட்டனர்.
4 மணி நேரம் தாமதம் என்று சொன்ன இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாகம் இறுதியில் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தது. விமான ஊழியர்கள் பயணிகள் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கவில்லை. அதோடு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்தது. அதிகமான பயணிகள் இஸ்தான்புல் நகரத்தில் இருந்து வேறு விமானத்தில் செல்ல டிக்கெட் எடுத்திருந்தனர். அந்த விமானத்தை பயணிகள் தவறவிட்டனர். இது தொடர்பாக பயணிகள் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக நேற்று இரவு 11 மணிக்கு மாற்று விமானத்தின் மூலம் பயணிகள் இஸ்தான்புல் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால், பயணிகள் 16 மணி நேரம் மும்பை விமான நிலையத்தில் காத்துக்கிடந்து இஸ்தான்புல் சென்றனர்.
விமானம் தாமதம் ஆனதற்கு வருத்தம் தெரிவித்த இண்டிகோ விமான நிறுவனம், ``பயணிகளுக்கு தங்குமிடம், சாப்பாடு கொடுக்கப்பட்டது. மேலும், பயணிகளின் டிக்கெட் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.