புல்வாமா தாக்குதலில் மோடி அரசைக் குற்றம்சாட்டிய J&K Ex ஆளுநர் மறைவு; யார் இந்த ச...
J&K : 370 ரத்து செய்யப்பட்டு 6 ஆண்டுகள் - நடந்த மாற்றங்கள் என்ன? எப்படி இருக்கிறது ஜம்மு காஷ்மீர்?
அரசியலமைப்பின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக (UT) மறுசீரமைக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் முடிவடைகிறது.
மற்ற மாநிலங்களுடன் ஜம்மு & காஷ்மீர் நெருக்காமாகுவதற்கும், அங்கு அமைதி நிலவுவதற்கும், பிரேதேசங்களில் வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் அரசியலமைப்பின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் முறையிட்டு, ஜம்மு & கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டமான 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது ஆகஸ்ட் 5, 2019.
அதைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என அரசியல் களமும் பரபரப்பானது. அதே நேரம், சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஒமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, காவல்துறை மற்றும் சேவைகள் மீதான கட்டுப்பாடு லெப்டினன்ட் கவர்னருக்கு வழங்கப்பட்டது. அதனால், ஜம்மு & கஷ்மீரின் முதல்வரின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒமர் அப்துல்லா அமைச்சரவையின் முதல் தீர்மானம் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான். அதற்காக முதலமைச்சர் கூட்டங்களுக்காக டெல்லிக்கு அடிக்கடி சென்று வருகிறார்.
ஆனால் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக சிக்கல் எழவே, அந்தக் கோரிக்கை ஆறப்போடப்பட்டிருக்கிறது. அதே நேரம் ஜம்மு & காஷ்மீரின் ஆளும் கட்சியின் தரப்பு, ``பிரிவு 370 திரும்ப வழங்க வேண்டும் என்பதற்கான போராட்டம் அதைப் பறித்தவர்களிடமிருந்து உடனடி முடிவுகளைத் தராது என்பது ஒமர் அப்துல்லாவுக்கும் தெரியும். ஆனால், மாநில அந்தஸ்து குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்தியில் ஆளும் பாஜக தரப்பு ஒப்புக்கொள்ளும் என அவர் நம்புகிறார்" எனக் குறிப்பிடுகிறது.
இந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில், கடந்த ஜூலை 13-ம் தேதியை ஜம்மு & காஷ்மீரின் தியாகிகள் தினமாக கொண்டாட முதல்வர் ஒமர் அப்துல்லா மேற்கொண்ட நடவடிக்கையின் போது வீட்டுச் சிறை, கல்லறைகளைப் பார்வையிட அவர் மேற்கொண்ட முயற்சியாக சுவர் ஏறி குதித்தது போன்ற செயல்பாடுகள் மத்திய அரசுக்கும் ஜம்மு & காஷ்மீர் அரசுக்கும் இடையிலான உறவு மிகவும் பலவீனமாக இருப்பதைக் காட்டுகிறது.

`தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' கட்டுரையில் வந்திருக்கும் தகவலின் படி, ``370 சட்டப்பிரிவு ரத்து செய்வதற்கு முன்னால் இருந்த கல்எறிதல், கடத்தல்கள், ஆயுதங்களைப் பறித்தல் போன்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் எல்லை தாண்டிய ஊடுருவல்கள், பாதுகாப்புப் படையினர் மீது அடிக்கடி நடத்தடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்ட ஜம்மு பகுதியில், இப்போது மிகக் குறைவான மோதல்களே பதிவாகியுள்ளன. 2024-ல் 67 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 2025-ல் இதுவரை 28 தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். உள்ளூர் ஆட்சேர்ப்பு நடவடிக்கை 2019-ல் 129 என்றிருந்தது. இந்த ஆண்டு 1 ஆகக் குறைந்துள்ளது.
2019-ம் ஆண்டு ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும்போது ஆளும் பா.ஜ.க அரசு முன்வைத்த மிக முக்கியமான வாதம், `இந்த முடிவு பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும்" என்பதாகும். ஆனால், ஐந்து ஆண்டுகள் கடந்தப்பிறகுதான் பஹல்காம் தாக்குதல் நடந்தது என்பதை நாம் மறந்திருக்க மாட்டோம். 2024-ல் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு பதிவான பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்தத் தாக்குதல் ஜம்மு & காஷ்மீர் இயல்பு நிலைக்கு மாறி வருகிறது என்ற பிம்பத்தை சுக்குநூறாக்கியது. மேலும் பாதுகாப்ப்புப் பணியில் உள்ள இடைவெளிகளை, குறிப்பாக புதிதாகத் திறக்கப்பட்ட சுற்றுலா மண்டலங்களின் பாதுகாப்பை அம்பலப்படுத்தியது. சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் அபாயங்களை பாதுகாப்புத் திட்டமிடல் குறைத்து மதிப்பிட்டதாக அதிகாரிகளே ஒப்புக்கொள்கிறார்கள்.
முதலீடுகள்:
முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஊக்கத்தொகைகளை உறுதியளிக்கும் வகையில் 2021-ல் மத்திய அரசு ஒரு புதிய தொழில்துறை திட்டத்தைத் தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் முன்மொழியப்பட்ட முதலீடுகள் இப்போது மொத்தம் ரூ.1.63 லட்சம் கோடி. இதில் ரூ.50,000 கோடிக்கும் அதிகமானவை பல்வேறு கட்டங்களில் செயல்பாட்டில் உள்ளன. 359 தொழில்துறை அலகுகளில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 1,424 அலகுகள் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. 2024-25-ம் ஆண்டில் முதலீடு உணர்தல் 2020 க்கு முந்தைய காலத்தை விட 10 மடங்கு அதிகம் என மத்திய அரசு தெரிவிக்கிறது.
வருவாய்:
ஜம்மு & காஷ்மீர் வரி வருவாய் கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஜிஎஸ்டி வசூல் 12%, கலால் வரி 39% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த வரி அல்லாத வருவாய் 2022 - 2024 க்கு இடையில் 25% அதிகரித்துள்ளது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2015-16-ம் ஆண்டில் ரூ.1.17 லட்சம் கோடியிலிருந்து 2023-24-ம் ஆண்டில் ரூ.2.45 லட்சம் கோடியாக இரட்டிப்பாகி, 2024-25-ம் ஆண்டில் ரூ.2.63 லட்சம் கோடியை எட்டியது.
மின்சாரம்:
மின் துறை சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, 2024-ம் ஆண்டின் நடுப்பகுதியில் 5.74 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவப்பட்டன, இதனால் மின் பரிமாற்றம் மற்றும் விநியோக இழப்புகள் 25% குறைந்திருக்கிறது. டிசம்பர் 2026-ம் ஆண்டில், மின் உற்பத்தி இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜம்மு & காஷ்மீர் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மின்சாரம் பரிமாற்றம் மற்றும் விநியோக உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு ரூ.10,000 கோடி செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், குறிப்பாக குளிர்காலத்தில், மின் பற்றாக்குறை நீடிக்கிறது. அதன் 3,500 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் குளிர்காலத்தில் 600-650 மெகாவாட்டாகக் குறைகிறது, இதனால் மத்திய ஒதுக்கீட்டை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
நிதி சுகாதாரம்:
ஜம்மு & கஷ்மீரின் வங்கி 2019-20-ல் ரூ.1,139 கோடி நஷ்டத்தில் இருந்து 2023-24ல் ரூ.1,700 கோடி லாபமாக உயர்ந்துள்ளது. வாராக்கடன் அளவுகள் பாதியாகக் குறைந்துள்ளன. இருப்பினும், நிதிப் பற்றாக்குறை அதிகமாகவே உள்ளது. பொருளாதாரம் மத்திய மானியங்களை (செலவில் 70% வரை) பெரிதும் நம்பியுள்ளது. விவசாயம், தொழில்துறை போன்ற முக்கியத் துறைகள் சேவைகளை விட மிகக் குறைவாகவே பங்களிக்கின்றன.
சுற்றுலா:
2023-ம் ஆண்டில், 2.11 கோடி சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்தனர். சுற்றுலா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7% பங்களித்தது. சுற்றுலா வளர்ச்சி, பிரிவு 370 நீக்கப்பட்டதற்க்குப் பிந்தைய இயல்பு நிலைக்கு சான்றாகக் கருதப்பட்டது. 2019-க்குப் பிறகு, 75 புதிய இடங்கள் திறக்கப்பட்டன. ஹோம்ஸ்டேக்கள் ஊக்குவிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 2,000 பதிவு செய்யப்பட்டன. ஆனால், பஹல்காம் தாக்குதலால் 50 சுற்றுலாத் தலங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டது. இது பொருளாதாரத்தின் மீதான கடுமையான அடியாகும். தற்போது 16 இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டன. தேவைப்படும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஆனால், ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டும், சுற்றுலாவில் தனியார் முதலீடு மந்தமாகவே உள்ளது. ஐந்து ஹோட்டல்கள் மட்டுமே புதிய தொழில்துறை திட்டத்தில் சேர்ந்துள்ளன. ஸ்ரீநகரில் உள்ள ராடிசனின் 200 அறைகள் கொண்ட ஹோட்டல் மற்றும் பஹல்காமில் உள்ள 150 அறைகள் கொண்ட ஜே.டபிள்யூ.மேரியட்டின் போன்ற ஹோட்டல்கள் இன்னும் இந்த திட்டத்தில் இணையாதது சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது என அதிகாரிகள் கருதுகின்றனர்.
பஹல்காம் சம்பவத்தால் ஜம்மு & காஷ்மீரில் இருக்கும் அச்சுறுத்தல் மறைந்துவிடவில்லை என்பதை நினைவூட்டுகிறது.
அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து தொடர்பாக பேசிய முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவருமான மெஹபூபா முஃப்தி, ``இன்றைய தினம் மோசமான ஒன்று நடக்கும் என்ற அச்சம் உள்ளது. 2019-ல் எங்கள் மாநிலத்தை உடைத்து துண்டாக்கினர். எங்களை வெளியேற்றினர். அவர்களின் முக்கிய இலக்கு முஸ்லிம்கள், குறிப்பாக காஷ்மீரிகள். எனவே, எங்களை மேலும் அதிகாரம் இழக்கச் செய்வதற்கு, எங்களை துண்டாக்குவதற்கு மோசமான ஒன்று நடக்கக்கூடும் என்று நான் உணர்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.