Kush Maini: `F2 ரேஸில் வென்ற முதல் இந்தியர்' - ஆனந்த் மகிந்திரா பாராட்டு
மொனாகோ கிராண்ட் பிக்ஸ் தடத்தில் நடந்த ஃபார்முலா 2 (F2) ஸ்பிரிண்ட் ரேஸில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் குஷ் மைனி.
DAMS Lucas Oil என்ற பிரஞ்சு அணியுடன் தனது முதல் போட்டியில் களமிறங்கிய குஷ், நிதானமாகவும், துலியும் சிதறாத கவனத்துடனும் செயல்பட்டு இந்த சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த குஷ் மைனி, இங்கிலாந்தின் பி.டி.டபுள்யூ ஆல்ஃபைன் ஃபார்முலா 1 அணியின் ரிசர்வ் ஓட்டுநராக ரேசிங் உலகில் அறியப்படுபவர்.
போட்டியில் சிறந்த தொடக்கத்தை சாதகமாக்கி, இறுதிவரை சர்கியூட்டில் ஆதிக்கம் செய்துள்ளார் குஷ். 24 வயதேயான இவரது ஸ்டராடஜிக்களும் கட்டுப்பாடும் பல தசாப்த கால அனுபவசாலிகளுக்கு இணையானதாக இருந்தது, என ரேஸிங் உலகம் இவரைத் திரும்பிப்பார்க்கிறது.
30 சிறிய சுற்றுகள் கொண்ட பந்தயத்தை நிறைவு செய்த பிறகு, மேடை கொண்டாட்டங்களுடன், "மொனாகோவில் முதல் இந்தியனாக வெற்றிபெறுவது மிகப் பெரிய கௌரவம் மற்றும் என் கனவு நனவான தருணம். நான் DAMS அணிக்கும் எனக்கு ஆதரவளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கிறோம்." என எமோஷனலாக பேசினார் குஷ்.
குஷ் மைனியின் இந்த இணையற்ற சாதனைக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளார் இந்திய தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா.
"நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் குஷ் மைனி, உங்களுடன் நம் நாடும் உயர்ந்து நிற்கிறது.
மான்டே கார்லோவில் நடந்த F2 பந்தயத்தில் வெற்றிபெற்ற முதல் இந்தியராக குஷ் மைனி வரலாறு படைத்துள்ளார்...
எங்கள் மகிந்திரா ரேஸிங் அணியின் நீங்கள் இருப்பதற்காக பெறுமை கொள்கிறோம்" என எழுதியுள்ளார் ஆனந்த் மகிந்திரா.
குஷ் மைனி வெற்றியைத் தொடர்ந்து பந்தய அரங்கில் இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
You are Standing Tall, @kmainiofficial and the country stands tall with you.
— anand mahindra (@anandmahindra) May 24, 2025
Kush Maini making history as the 1st Indian winner of an F2 race in Monte Carlo…
We are proud to have you on our team at @MahindraRacingpic.twitter.com/mJJg2Dlxpo
மேலும் பல தொழிலதிபர்கள், ரேஸிங் ஆர்வலர்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.