செய்திகள் :

New Wave In Mollywood: இதுசவாலை தாண்டி உச்சம் தொட்ட `மல்லுவுட்’டின் கதை!

post image

கடந்தாண்டு வெளியான படங்களின் மூலம் ஒரு புதிய மைல்கல்லை தொட்டிருக்கிறது மலையாள சினிமா.

பெரிதும் எதிர்பார்க்காத நேரத்தில் 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு', 'ஆவேஷம்', 'ப்ரமயுகம்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வசூலை அள்ளியது.

இந்த வசூல் மேஜிக் கேரளத்தில் மட்டும் கிடையாது. இதுபோன்ற கடந்தாண்டு வெளியான சில மலையாள திரைப்படங்கள் எல்லைகளை கடந்து தமிழகத்திலும் கெத்து காட்டியது.

Mollywood 2024
Mollywood 2024

இதில் அதிக வசூலை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு' ஆகியவை மல்லுவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் நடிக்காத திரைப்படங்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

அதன் திரைக்கதை, தொழில்நுட்ப நுணுக்கங்கள், நடிகர்களின் அசாத்திய நடிப்பு போன்ற விஷயங்கள்தான் இந்தப் படத்தை வெற்றிக்குக் கொண்டுச் சென்றது.

இதோ இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே மலையாள சினிமா தன்னுடைய அசுர கதகளி ஆட்டத்தைத் தொடங்கிவிட்டது.

கடந்த ஜனவரி மாதம் ஆசிப் அலியின் 'ரேகாசித்திரம்' திரைப்படம் வெளியாகியிருந்தது. 'Alternate History' என்ற கான்சப்ட்டை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதையைப் பரபரப்பான த்ரில்லர் முடிச்சுகளுடன் கோர்த்திருந்தார்கள்.

ஏ.ஐ தொழில்நுட்பத்தைச் சிறப்பான வகையில் சினிமாவில் பயன்படுத்தியதில் முக்கியமானதொரு பங்கு இந்தப் படத்திற்கு உண்டு.

படத்தில் நடிகர் மம்மூட்டியை ஏ.ஐ மூலமாக கேமியோ செய்ய வைத்திருந்தார்கள்.

malayalam movies
malayalam movies

இந்த ஹிட் திரைப்படத்தின் தாக்கம் குறைவதற்குள் பேசில் ஜோசப்பின் பொன்மேனும் அதிரடி காட்டியது.

இப்போது 'மரண மாஸ்' படத்தின் மூலம் தன்னுடைய அடுத்த ஹிட் கொடுத்து மிளிர்ந்துக் கொண்டிருக்கிறார் பேசில் ஜோசப்.

இதைத் தாண்டி இன்னும் எதிர்பார்க்கப்படும் படைப்புகள் அடுத்தடுத்து மலையாள சினிமாவிலிருந்து நமக்கு கிடைக்கவிருக்கிறது.

மல்லுவுட் சவால்களை சந்திக்கும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு வலுவான கம்பேக் முத்திரையைப் பதித்திருக்கிறது.

முக்கியமாக, 2000-களில் மல்லுவுட் பெரும் சிரமத்தை எதிர்கொண்டது. உச்சநட்சத்திரங்களாக மிளிர்ந்த எவருடைய படங்களும் அந்த சமயத்தில் பெரிதளவில் சோபிக்கவில்லை.

சொல்லப்போனால், 2000-ல் வெளியான திரைப்படங்களிலிருந்து 10 சதவீதம் படங்களே திரையரங்குகளில் வெற்றியைப் பெற்றன. பெரும்பாலான திரைப்படங்கள் அந்தாண்டு பெரும் தோல்வியைச் சந்தித்தன.

2000-க்கு முன்பு ஜான் அப்ரகாம் போன்ற முக்கியமான இயக்குநர்களின் அழுத்தமான அரசியல் பேசும் படைப்புகள் வெளியாகி பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு பல்வேறு சர்வதேச சேனல்களின் மூலம் வேற்று மொழி படங்களைப் பார்த்த மக்கள் வித்தியாசமான படைப்புகளை எதிர்பார்த்தனர்.

இதன் பிறகு மல்லுவுட்டிலிருந்து தொடர்ந்து க்ளிஷே கதையம்சத்தைக் கொண்ட படங்கள்தான் அடுத்தடுத்து வந்தன.

Malayalam Top Heros
Malayalam Top Heros

அதுபோலவே ஒரே பார்முலாவையே பின்பற்றிய திரைக்கதையைக் கொண்டதாகவும் அப்போதைய மலையாள திரைப்படங்கள் வெளியானது. இது நாளடைவில் பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியைக் கொடுத்தது.

இதிலிருந்து வேறு வழியைக் கண்டெடுக்க தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களை மலையாளத்தில் ரீமேக் செய்தும் டப்பிங் செய்தும் வெளியிட்டார்கள். ஆனால், இதுவும் அவர்களுக்கு முழுமையாக கரம் கொடுத்து உதவவில்லை.

இப்படியான ஒரு கடின காலம் மல்லுவுட்டுக்கு கிட்டதட்ட 2010 வரை தொடர்ந்தது. இதற்கிடையில் மல்லுவுட்டிலிருந்து வெளியான சில திரைப்படங்கள் பெரிதளவில் பேசப்பட்ட கதைகளும் இருக்கிறது. இப்படியான க்ளிஷே மீட்டர்களில் மூழ்கியிருந்த மலையாள சினிமா 2010-ப் பிறகு மாற்று பாதையைத் தேர்ந்தெடுத்தது.

அதுவரை அவுட்டேடட் மலையாள சினிமா துறை என எழுதி வந்தவர்களையெல்லாம் இந்தியாவிலிருந்து அறிவார்ந்த படைப்புகளைக் கொடுக்கும் மல்லுவுட் என்று புகழ்பாட வைத்து, 2010-க்குப் பிறகு வந்த இயக்குநர்கள் புதிய அலையை நிகழ்த்திக்காட்டினார்கள்.

2010-க்குப் பிறகு வந்த இயக்குநர்கள் திரைப்படங்களின் கன்டென்ட் மற்றும் கதைகளை மாற்றியமைத்தனர்.

எடுத்துக்காட்டாக, 2010-க்கு முந்தைய பெரும்பாலான மலையாளப் படங்களில் வழக்கமான திரைக்கதை பார்முலாவை மையப்படுத்தி களமாடி வந்தார்கள்.

படத்தின் முன்னணி கதாபாத்திரங்கள், அவர்களைப் பற்றிய விவரிப்பு, அக்கிராமத்தைப் பற்றிய விவரிப்புகள், அவர் சந்திக்கும் மோதல், அவருடைய வீழ்ச்சி, அவர் மீண்டும் எழுந்து கம்பேக் கொடுப்பது என்பதுதான் வழக்கமான கமர்ஷியல் பார்முலா.

ஆஷிக் அபு

2010-க்குப் பிறகு இந்த பார்முலாவை அப்படியே முழுமையாக வேறுபடுத்தி அமைத்தார்கள். படத்தின் தொடக்கத்திலேயே கதாபாத்திரம் சந்திக்கும் மோதல் புள்ளியைக் காட்சிப்படுத்திவிட்டு அதிலிருந்து கதாபாத்திரத்தின் விவரிப்பு உட்பட அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு நகரும் வகையில் நான்-லினியர் திரைக்கதைகளை நுட்பமாக அப்போது எழுதினார்கள்.

கதைகளில் மட்டுமல்ல தொழில்நுட்ப ரீதியாகவும் புதியதொரு அனுபவத்தைக் கொடுப்பதற்குப் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தினார்கள்.

மலையாள சினிமா மேற்கொண்ட இந்த புதிய முயற்சியில் வெற்றி கண்டு பிற சினிமா துறைகளுக்கு முன் மாதிரியாக விளங்க தொடங்கியது.

2010-க்குப் பிறகான மலையாள சினிமாவில் சாதாரண மனிதர்களின் கதைகளையும் அவர்கள் சந்தித்த போராட்டங்களையும் காட்சிப்படுத்தினார்கள். பரபரப்பான ஒரு பிரச்னை களத்தில் ஒரு சாதாரண மனிதன் எப்படி அந்தப் பிரச்னையை அணுகுவார்? அதற்கு எப்படித் தீர்வு காண்பார்? என்பது போன்ற எளிமையான விஷயங்களை திரையில் காட்சிப்படுத்தினார்கள்.

அதையும் வழக்கமான கதை சொல்லும் லினியர் முறையிலிருந்து சற்றே ஜம்ப் அடித்து நான்-லினியர் வடிவத்திற்கு மாறினார்கள். சவால் மிகுந்த கதைகளத்தையும் தொட்டு வெற்றியையும் கண்டார்கள்.

Traffic Movie - Mollywood Hyperlink Movie
Traffic Movie - Mollywood Hyperlink Movie

எளிதில் கணிக்கும்படியான திருப்பங்களைக் கொண்டதாக இருந்த திரைக்கதை அம்சத்தை மாற்றி பல அடுக்குகளைக் கொண்டதாகவும் ஆழமாகவும் அமைத்து கதை சொன்னார்கள். கூடவே, பெரும்பான்மையான படங்களில் பஞ்ச் வசனங்களை மட்டுமே படத்தின் ஹைலைட்டாக பயன்படுத்தி வந்த முறையை முழுமையாக வேறுபடுத்தி அமைதியான வகையில் கதாபாத்திரத்தின் ஆழத்தைக் காட்டும் வசனத்தை அமைத்தார்கள்.

அதுபோல, வழக்கமான காமெடி எலமென்டுகளையும் ட்ரெண்டிற்கேற்ப மாற்றியமைத்தார்கள். 2010-க்குப் பிறகு டார்க் ஹுயூமர் திரைப்படங்களும், கதாபாத்திரங்களை மட்டுமே மையப்படுத்திய நகைச்சுவை திரைப்படங்களும் மலையாள சினிமாவில் வரத் தொடங்கின.

2010-க்கு முந்தைய பெரும்பான்மையான மலையாள திரைப்படங்களில் ஹீரோவை மட்டுமே மையப்படுத்தி கதை சொல்லப்பட்டது. சொல்லப்போனால், கதாநாயகன்களை மட்டுமே போற்றி பாடும் விதமாக கதாபாத்திரங்களை வடிவமைத்திருப்பார்கள்.

பிறகு, அந்த வழக்கொழிந்த முறை முற்றிலுமாக மாற்றப்பட்டது. கூடவே, பெண் கதாபாத்திரங்களின் சித்தரிப்பும் 2010-க்குப் பிறகான மலையாள சினிமாவில் மாற்றி அமைக்கப்பட்டது. அதுபோலவே, வழக்கமானதொரு பழிவாங்க துடிக்கும் வில்லன் கதாபாத்திரங்களைத் தாண்டி வில்லன் கதாபாத்திரத்தில் சில வேறுபாடுகளைப் பின்பற்றி காட்சிப்படுத்தினார்கள்.

Kumbalangi Nights - Shammi Character
Kumbalangi Nights - Shammi Character

முன்பு சில திரைப்படங்களில் அப்போது இலகுவாகக் கிடைத்த தொழில்நுட்ப வசதிகளை வைத்து ஒளிப்பதிவில் லைட்டிங் அமைப்பார்கள்.

அதில் சிலவற்றை டிராமடிக் வடிவில் இருக்கும். 2010-க்குப் பிறகு தொழில்நுட்ப ரீதியான வேலைகளில் முன்னேற்றத்தை நோக்கி இயக்குநர்கள் நகரத் தொடங்கினார்கள்.

2010-க்குப் பிறகான மலையாள திரைப்படங்களில் சூழலின் உணர்வை அப்படியே பார்வையாளர்களிடம் கடத்துவதற்கு இயற்கையான லைட்டிங் முறையைப் பின்பற்றினார்கள்.

இப்படி பல்வேறு மாற்றங்களை உண்டாக்கி 2010-க்குப் பிறகான இயக்குநர்கள் புதிய அலையை மலையாள சினிமாவில் கொண்டு வந்தார்கள். அப்போது வரை பழக்கப்பட்ட கதைகளை மட்டுமே தொடர்ந்து பார்த்து வந்த மக்களுக்கு இந்த புதிய அலை புது வடிவிலான அனுபவத்தைக் கொடுத்தது.

பார்வையாளர்களின் ரசனையும் எதிர்பார்ப்பும் இந்த புதிய முயற்சிகளுக்குப் பிறகு மாற்றத்தை எட்டியது. நல்ல கண்டென்ட் கொண்ட திரைப்படங்களை மட்டுமே அடுத்தடுத்து விரும்பிப் பார்க்கத் தொடங்கினார்கள்.

மக்களின் இப்படியான எதிர்பார்ப்பைக் கணித்த மலையாள நடிகர்கள் ஒரு படத்தில் தனக்குக் கிடைக்கும் தாண்டி முக்கியத்துவத்தைக் கதையின் முக்கியத்துவத்தை எண்ணி நடித்தார்கள்.

ஆம், இதன் பிறகு 'த்ரிஷ்யம்' போன்றதொரு திரைப்படத்தில் மோகன் லால் நடித்தார். 'நண்பகல் நேரத்து மயக்கம்' போன்ற திரைப்படத்தில் மம்முட்டி நடித்தார். இப்போதும் மம்மூட்டி பல புதுமுக இயக்குநர்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

Thallumalla - Edit Pattern
Thallumalla - Edit Pattern

பார்வையாளர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதைக் கணித்து அப்போது இளம் இயக்குநர்கள் புதிய வடிவிலான திரைப்படங்களைக் கொடுக்க களத்தில் இறங்கினார்கள்.

இப்படியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதில் திரைக்கதையாசிரியர்களுக்கு நீக்கமற இடமிருக்கிறது.

ஷ்யாம் புஷ்கரன், பாபி - சஞ்சய், உன்னி ஆகியோர்தான் மலையாள சினிமாவின் திரைக்கதை வடிவத்தின் கேம் சேஞ்சர்ஸ். 'கும்பளங்கி நைட்ஸ்', 'மகேஷின்டே ப்ரதிகாரம்' போன்ற திரைப்படங்களில் கதாபாத்திரங்களின் உணர்வுகளை மட்டுமே வைத்து கதை சொல்லும் திரைக்கதையை எழுதியது ஷ்யாம் புஷ்கரன்தான்.

இந்தியாவின் முதல் ஹைப்பர்லிங்க் திரைப்படம் என்று சொல்லப்படும் 'ட்ராஃபிக்' படத்தின் திரைக்கதையை எழுதியது பாபி - சஞ்சய்தான். நமக்கு கவித்துவமான அனுபவத்தைக் கொடுத்த 'சார்லி' திரைப்படத்தின் திரைக்கதையாசிரியர்தான் உன்னி. சிறுகதை எழுத்தாளராக இருந்த உன்னியின் பல கதைகளிலும் உவமை நிரம்பியிருக்கும்.

Dileesh Pothan
Dileesh Pothan

ஆஷிக் அபு, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, அஞ்சலி மேனன், அல்போன்ஸ் புத்திரன், ராஜேஷ் பிள்ளை, திலீஷ் போத்தன், ஜியோ பேபி, பேசில் ஜோசப், மகேஷ் நாராயணன் உட்பட பலர் இந்த புதிய அலையை உருவாக்க முக்கியக் காரணமானவர்கள்.

ரொமாண்டிக் - காமெடி, எமோஷனல் டிராமா, ஹைப்பர்லிங்க் த்ரில்லர், சைக்காலஜிக்கல் த்ரில்லர், சூப்பர் ஹீரோ டிராமா, சோசியோ - டிராமா, பீரியட் டிராமா என வெவ்வேறு களங்களைக் கொண்ட திரைப்படங்களை இந்த இயக்குநர்கள் இயக்கினார்கள்.

இப்படங்களெல்லாம் அடுத்தடுத்து வெளியாகி அபரிமிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இப்படி பன்முகத்தன்மையாக வெவ்வேறு கதைக்களங்களில் பயணித்த மலையாள சினிமா கதையமைப்பில் புதியதொரு ட்ரெண்டையும் மற்ற சினிமா துறைகளுக்கும் அறிமுகப்படுத்தி வழிகாட்டியிருக்கிறது.

கணிக்க முடியாத த்ரில்லர் ட்விஸ்ட், பரபரப்பான சீட் எட்ஜ் த்ரில்லர் கதை போன்ற விஷயங்களையெல்லாம் முதலில் கையிலெடுத்தது மல்லுவுட்டுதான்.

ராஜேஷ் பிள்ளையின் 'ட்ராஃபிக்', ஆஷிக் அபுவின் 'சால்ட் N பெப்பர்', திலீஷ் போத்தனின் 'மகேஷின்டே ப்ரதிகாரம்', லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் 'ஜல்லிக்கட்டு', மகேஷ் நாராயணனின் 'சி யூ சூன்', ஜியோ பேபியின் 'தி க்ரேட் இந்தியன் கிச்சன்' ஆகியவைதான் இந்த புதிய அலையில் சில முக்கியமான திரைப்படங்கள்.

இப்படங்களெல்லாம்தான் மல்லுவுட் கொடுத்த புதிய வகையிலான கதை அம்சத்தைக் கொண்டவை. தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படங்களில் புதியதொரு உச்சத்தைத் தொட்டிருப்பார்கள்.

Mamooty , Mohanlal , Kunchako Boban
Mamooty , Mohanlal , Kunchako Boban

இதுபோன்ற காரணங்களால்தான் கொரோனா காலத்தில் ஓ.டி.டி தளங்களின் வளர்ச்சியின் மூலமாக பல மல்லுவுட் படைப்புகள் பல பக்கங்களிலிருந்து பாராட்டுகளை அள்ளின.

இப்படி புதிய அலையை உருவாக்கிய மல்லுவுட் கொரோனா காலத்துக்குப் பிறகு சில சவால்களையும் சந்தித்தது. இதே ஓ.டி.டி தளங்களின் வளர்ச்சியின் மூலமாக பார்வையாளர்களும் பல வகையான கண்டென்ட்களைப் பார்த்து அப்படியான மெருகேறிய கண்டென்ட் திரைப்படங்களையே அடுத்தடுத்துப் பார்க்க விரும்பினார்கள்.

கொரோனாவுக்குப் பின் பல மலையாள திரைப்படங்களால் திரையரங்குகளில் பெரிதளவில் சோபிக்க முடியவில்லை. அதன் பிறகு சில சிரமங்களைச் சந்தித்த மல்லுவுட் சரிவிலிருந்து மீண்டு கடந்தாண்டு புதிய உச்சங்களையும் மலையாள சினிமா தொட்டிருந்தது.!

Mysskin:`மிஷ்கினை வரவேற்கும் மலையாள திரையுலகம்' - துல்கர் சல்மான் படத்தில் ஒப்பந்தம்

திரைப்பட இயக்குநர்,தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பல்வேறு திரைத்துறைகளில் ஆளுமை செலுத்திவரும் மிஷ்கின் நடிகராகவும் மக்கள் மனதில் பெரும் இடத்தைப் பிடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டிராகன்... மேலும் பார்க்க

Shaji N Karun: பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி என்.கருண் காலமானார்!

மலையாள சினிமாவுக்கு தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் பெருமை சேர்த்த இயக்குநர்களில் முக்கியமானவர் ஷாஜி என் கருண். மலையாள முற்போக்கு கலை இலக்கிய சங்கத்தின் மாநில குழு தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். இவர்... மேலும் பார்க்க

கலப்பின கஞ்சா பறிமுதல்; கேரளாவில் `தல்லுமாலா' திரைப்பட இயக்குநர் உள்பட மூவர் கைது!

'அனுரக கரிக்கின்வெல்லம்', 'உண்டா' மற்றும் 'தல்லுமாலா' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் காலித் ரஹ்மான். அவரது சமீபத்திய படமான 'ஆலப்புழா ஜிம்கானா' தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்... மேலும் பார்க்க

Thudarum Review: 'குடும்பத்திற்காக மீண்டும் ரகட் பாயாகும் மோகன்லால்' - 'துடரும்' எப்படி இருக்கு?

மெட்ராஸில் சினிமா ஃபைட்டராக இருந்த சண்முகம் (எ) பென்ஸ் (மோகன் லால்), ஒரு விபத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி, கேரளத்தில் கேப் டிரைவராக வாழ்கிறார். சண்முகத்திற்குத் தன்னுடைய அம்பாசிடர் கார் மீது ... மேலும் பார்க்க

Hanumankind: கேரளாவிலிருந்து உலக அரங்கை ஆளும் ராப் நட்சத்திரம்!

இசைக்கான களம் இப்போது பரந்து விரிந்திருக்கின்றது. கேசட், சி.டி-களில் பாடல்கள் கேட்கும் வழக்கம் முற்றிலுமாக அழிந்து, யூட்யூப், ஸ்பாடிஃபை என்ற செயலிகளுக்கு நாம் மாறியிருக்கிறோம். இப்படியான தொழில்நுட்பங்... மேலும் பார்க்க

``சில தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது'' - மெஸ்ஸி அனுப்பிய கிப்ஃட்; நெகிழ்ந்த மோகன்லால்

மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். அவரது நடிப்பில் சமீபத்தில் L2: எம்புரான் படம் வெளியானது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் 325 கோடி வசூல் செய்த மலையாள சினிமாவின்... மேலும் பார்க்க