ரூ. 25 கோடியில் 1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறும்: அம...
Operation Sindoor பெயரில் திரைப்பட அறிவிப்பு; கிளம்பிய எதிர்ப்பால் மன்னிப்புக் கேட்ட இயக்குநர்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகக் கூறும் இந்தியா, பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது. அதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இப்படி மாறி மாறி இரு நாடுகளும் தாக்குதலை நடத்துகின்றன. அதனால் தற்போது இரு நாட்டுக்கும் மத்தியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதற்கிடையில், ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கப்போவதாக இயக்குநர் உத்தம் மகேஸ்வரி அறிவித்தார். வெள்ளிக்கிழமை, நிக்கி விக்கி பக்னானி பிலிம்ஸ் மற்றும் தி கன்டென்ட் இன்ஜினியர் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் போஸ்டரையும் வெளியிட்டனர். அதில் சீருடை அணிந்த ஒரு பெண் ராணுவ வீராங்கனை ஒரு கையில் துப்பாக்கியும், மற்றொரு கையால் நெற்றியில் குங்குமம் பூசுவது போலவும் இருந்தது.
இந்தப் போஸ்டரைத் தொடர்ந்து இயக்குநருக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதைத் தொடர்ந்து இயக்குநர் உத்தம் மகேஸ்வரி சமூக ஊடகத்தில் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், ``புகழுக்காவோ, பணத்துக்காகவோ அல்லாமல் நமது வீரர்கள் மற்றும் தலைமையின் தைரியம், தியாகம், வலிமையால் நெகிழ்ந்து ஆபரேஷன் சிந்தூர் படத்தை இயக்க விரும்பினேன்.

இதை அறிவிப்பதன் மூலம், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை. ஆபரேஷன் சிந்தூர் பட அறிவிப்புக்கு உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
எனது செயலுக்காக மிகவும் வருந்துகிறேன். எப்போதும் தேசம் முதலில் என்ற குறிக்கோளுடன் நாட்டிற்காக இரவும் பகலும் உழைத்து நம்மை பெருமைப்படுத்தும் நமது ராணுவத்துக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி. எங்கள் அன்பும் பிரார்த்தனையும் எப்போதும் வீரர்களுடனும் இருக்கும். ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.