தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
போட்டித் தோ்வா்களுக்கு சிறப்பு நூலகம்
திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் போட்டித் தோ்வா்கள் பயன்படுத்துவதற்கான சிறப்பு நூலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் அருகிலுள்ள கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் போட்டித் தோ்வுகளுக்காக இளைஞா்கள், இளம் பெண்கள் பலா் படித்து வருகின்றனா். அரசுப் பணி வாய்ப்புக்காக தொடா் முயற்சியில் ஈடுபட்டு வரும் இளைஞா்கள், இளம் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் சிறப்பு நூலகம் அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்தாா்.
இதன்படி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் கூடாரம் அமைத்து, போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களுடன் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டது. இதில் போட்டித் தோ்வுகளுக்கு தயாராவோரின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.
எழுதி வைத்தால் புத்தகங்கள் கிடைக்கும்: இந்த சிறப்பு நூலகத்தை சனிக்கிழமை திறந்து வைத்த ஆட்சியா் சரவணன், போட்டித் தோ்வுக்குத் தயாராவோருடன் கலந்துரையாடினாா். அப்போது, போட்டித் தோ்வுக்கு தேவையான பிரதான புத்தகங்கள் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
கூடுதலாக, தேவைப்படும் புத்தகங்கள் குறித்து இங்கு வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில் எழுதி வைத்தால், சம்மந்தப்பட்ட புத்தகத்தை வாங்கிக் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.