OPS: "பாஜகவுடன் உறவை முறிக்கிறோம்!" - ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு; அடுத்த நகர்வு என்ன?
ஓபிஎஸ் தனது அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையை நடத்தி முடித்திருக்கிறார். தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க ஓபிஎஸ் கடிதம் எழுதியும் அவருக்கு நேரம் வழங்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு நிதி வழங்க வேண்டி மத்திய அரசைக் கண்டித்து ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதேவேளையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் விஜய்க்கு ஆதரவாகத் தீவிரமாகப் பேசி வருகிறார். இப்படியொரு சூழலில் ஓபிஎஸ்ஸின் ஆலோசனைக்கூட்டம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு ஓபிஎஸ்ஸின் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான உறவை முறித்துக்கொள்கிறோம். அதற்கான காரணத்தை நாடே அறியும். தமிழகம் முழுக்க ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். எந்தக் கட்சியுடனும் இப்போதைக்குக் கூட்டணி இல்லை. எதிர்காலத்தில் நிலைமையைப் பொறுத்து முடிவெடுப்போம்" என்றார்.
3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனையின் முடிவிலேயே இந்த 3 தீர்மானங்களையும் எடுத்திருப்பதாக பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரோடு ஓபிஎஸ்ஸின் மகன்களும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்து ஓபிஎஸ் கிளம்புகையில், "நம்பிக்கைத் துரோகி எடப்பாடி ஒழிக.. குருமூர்த்தி ஒழிக.. அண்ணாமலை ஒழிக..." என அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.