Sadaa: `நடிகை டு புகைப்படக்கலைஞர்' கானகத்தின் அழகியலை காட்சிகளாக்கும் சதா - வாழ்த்தும் பெண்கள்
திரைப்பட நடிகையாக அறியப்படும் சதா, அர்ப்பணிப்பான காட்டுயிர் புகைப்படக் கலைஞர், வனவிலங்குப் பாதுகாப்பு ஆர்வலர், விலங்குகள் நல உரிமை அமைப்பின் ஆதரவாளர் என சூழலியல் பாதுகாப்பில் அதி தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள் வனவிலங்கு சரணாலயங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் சதா, அங்கேயே தங்கி காட்டுயிர்களின் வாழ்வியலை கவின் மிகு காட்சிகளாகப் படம் பிடித்து வருகிறார். அடர் வனப்பகுதிக்குள் சஃபாரி சென்று அரிய வகை உயிரினங்களையும் புகைப்படம் எடுத்து வருகிறார்.
'சதா வைல்டு லைஃப் போட்டோகிராபி', 'சதா வைல்டு ஸ்டோரி' என்ற பெயரில் சோஷியல் மீடியாக்களில் சதா வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மில்லியன் கணக்கான வியூவ்ஸ்களைக் கடந்து வருகின்றன. யானை, புலி, சிறுத்தை மட்டுமின்றி ராஜ நாகம் போன்ற பாம்புகள், போரடைஸ் ஃபிளை கேச்சர் போன்ற பறவைகளையும் படம் பிடித்து வருகிறார்.

சதாவை முன்மாதிரியாக கொண்டு கர்நாடகாவில் பல பெண்கள் காட்டுயிர் புகைப்பட கலைஞர்களாக உருவாகி வருகின்றனர். கர்நாடகாவின் பந்திப்பூர் உள்ளிட்ட தேசிய பூங்காக்களில் பல பெண்கள் துணிச்சலாகவும் தைரியத்துடனும் காட்டுயிர்களை படம் பிடித்து வருகின்றனர். நடிகை சதாவால் காட்டுயிர் புகைப்பட கலைஞராகவும் ஆர்வலர்களாகவும் மாறிய பெண்கள் பலரும் காடுகள் தினமான இன்று சதாவிற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.