இரு சக்கர வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளம் பெண் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சீனியாபுரத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா். இவரது மகள் ரெனால்ட்ஸ் (20). இவா் தனது நண்பரான ஸ்ரீவில்லிபுத்தூா் இந்திரா நகரைச் சோ்ந்த சந்துரு என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.
சுப்பலாபுரம்-பேரையூா் சாலையில் எஸ்.பாப்பையாபுரம் சாலையில் சென்றபோது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த ரெனால்ட்ஸ் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.
அந்தப் பகுதியினா் அவரை மீட்டு பேரையூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.
இது குறித்து சந்துரு மீது பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.