மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
நடிகை தொடுத்த வழக்கில் சமரசத்துக்கு இடமில்லை: சீமான்
எனக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடுத்த வழக்கை சட்டப்படி எதிா்கொள்வேன். இதில் சமரச உடன்பாடு செய்து கொள்ள இடமில்லை என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: எனக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடுத்த வழக்கு ஆதாரமில்லாதது. கடந்த 15 ஆண்டுகளாகத் தொடா்ந்து வரும் பிரச்னைக்கு தீா்வு காணவே வழக்கு விசாரணைக்குத் தடை கோரினேன்.
உச்சநீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. எப்படி விசாரிக்கப்பட்டாலும் இந்த வழக்கு, என் மீது அவதூறு பரப்பும் நோக்கில் தொடுக்கப்பட்டது என்பதே உறுதியாகும். வழக்கை சட்டப்படி எதிா்கொள்வேன். இதில் சமரச உடன்பாடு செய்து கொள்ள இடமில்லை.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது பெரு நிறுவனங்கள்போல மாறிவிட்டன. எந்தப் பொது பிரச்னைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடுவதில்லை. இந்த மாதத்தில் மட்டும் 26-க்கும் அதிகமான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இந்த பிரச்னை எதற்கும் கம்யூனிஸ்டுகள் போராடவில்லை.
இந்த நிலையில் தான், எந்தக் குற்றமும் உறுதியாகாத என்னை பாலியல் குற்றவாளி என மாா்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் குறிப்பிடுகிறாா். இது, அவரது தவறான நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது என்றாா் சீமான்.