Sai Pallavi: `தெலுங்குல நடிகையா தெரியுறேன்; தமிழ்ல ரௌடி பேபியா தான் தெரியுறேன்னு..!' - சாய் பல்லவி
சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது . படக்குழுவினர் மற்றும் விநியோகஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். இந்த நிகழ்வின் காணொளிகள் ஒவ்வொன்றாக யூட்யூப் தளத்தில் வெளியாகி வருகிறது. இதில் சாய் பல்லவி பேசிய சில விஷயங்கள் காணொளிகளாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சாய் பல்லவி, "படத்துல வரும் வசனம், இசை, ஆக்ஷன் எல்லாத்தையும் திட்டமிட்டது இயக்குநர் ராஜ்குமார்தான். இந்தக் கதையை எழுதுறது ரொம்பவே கஷ்டம், அவரு எப்படி எழுதினாருனு எனக்கு தெரியல.

நம்மளாக நடிக்க கொஞ்சம் இடம் வேணும். அது ரொம்ப முக்கியம். அதுதான் எனக்கு இந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கி நல்லா நடிக்கிறதுக்கு வாய்ப்பு கொடுத்துச்சு. பாலிவுட்ல நிறைய ராணுவப் படங்கள் எடுப்பாங்க. அவங்களுக்கே இந்த படம் பென்ச் மார்க்காக அமைஞ்சிருக்கு. அதுக்குக் காரணம் ராஜ்குமாரோட வேலைதான். சரியான தயாரிப்பாளர் இல்லைனா இந்த படத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போகுறது சிக்கலான விஷயம்தான்.
'தீபாவளிக்கு வரும்போது எல்லாரும் அழுதுட்டுப் போகணுமா'னு விநியோகஸ்தர்கள் சொன்னாங்க. கமல்ஹாசன் சார் தவிர வேற யாரலையும் இதை நிகழ்த்திக் காட்டிருக்க முடியாது. அவர் சினிமாவை ரொம்ப நம்புறாரு. சினிமா இன்னும் உயிர்ப்போட இருப்பதற்கும் வளர்வதற்கும் கமல் சார் தான் காரணம். சிவகார்த்திகேயன் சார் பத்தி பேசணும். 'இந்த ரோல் பண்றதுக்கு யாராச்சும் புதுசா இருக்கணும்' னு ராஜ்குமார் சார் சொல்லியிருந்தார். அவரும் பொறுப்போட அந்த ரோல் பண்ணியிருந்தார். 'பராசக்தி' புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் பார்த்தேன், மறுபடியும் அவர அவரே புதுப்பிக்க ஆரம்பிச்சுட்டார்.

படம் வந்து 100-வது நாள் கொண்டாடுறோம். 100 நாள் மேல ஆயிடுச்சு. இப்போ யாராச்சும் என்னைப் பார்த்தால்கூட அமரன் படத்தைப் பற்றி என்கிட்ட பேசுறாங்க. நான் பத்து வருஷமா சினிமாவுல இருக்கேன். இது வரைக்கும் இப்படி நடந்தது இல்லை. அதுக்கு காரணம் எல்லாரும் அவங்களோட 100 சதவீதம் உழைப்பை தந்ததுதான். 'தெலுங்குல நல்ல கேரக்டர் வருது, நடிகையாக தெரியுறேன். தமிழ்ல ரௌடி பேபியாகத்தான் தெரியுறேன், ஏன் நடிகையாக தெரியல'னு சில நேரம் நான் யோசிப்பேன். ராஜ்குமார் சாருக்கு நன்றி, நம்ம ஆடியன்ஸ்க்கு நடிகை சாய் பல்லவியைக் காட்டுனதுக்கு. எல்லா ஆடியன்ஸ்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி" என்றார்.