Sai Pallavi : மக்களோடு உற்சாக நடனம், செல்ஃபி - உறவினர் திருமணத்தில் கவனத்தை ஈர்த்த சாய் பல்லவி
முன்னணி திரைப்பட நடிகையான சாய் பல்லவி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெற்றோர், சகோதரி என குடும்ப உறுப்பினர்கள் வெளி மாவட்டங்களில் வசித்து வந்தாலும், நீலகிரியில் நடைபெறும் சாய் பல்லவியின் சமுதாய கோயில் திருவிழாக்கள், உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஹெத்தையம்மன் திருவிழாவில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பர்ய உடையாக கருதப்படும் வெள்ளை நிற உடையில் வெள்ளி ஆபரணங்கள் அணிந்து பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. திருவிழாக்களில் மக்களோடு மக்களாக சேர்ந்து நடனமாடுவது, உறவினர்களுடன் செல்ஃபி எடுப்பது என மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்
இந்த நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள மேல் அனையட்டி படுகர் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். திருமணத்தில் இசைக்கப்பட்ட பேண்டு வாத்தியத்திற்கு உறவினர்களுடன் சேர்ந்து உற்சாக நடனமாடியிருக்கிறார். மேலும் கிராம மக்களோடு புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து கிராம மக்கள், " ஷூட்டிங் பிஸியிலும் ஊர் பண்டிகை, உறவினர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் எளிமையாக பங்கேற்பது அவரின் வழக்கம். அப்படித்தான் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மிகப்பெரிய நடிகையாக இருந்தாலும் ஊர் மக்களுடன் ஒன்றிணைந்து மிகவும் எதார்த்தமாக நடனமாடி உணவருந்தி செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
