பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
Thailand vs Cambodia: இந்து கோவிலுக்கு உரிமை கொண்டாடுவதுதான் மோதலுக்கு காரணமா? | Explained
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே எழுந்துள்ள மோதலால் தென் கிழக்கு ஆசியாவில் போர்மேகம் சூழ்ந்துள்ளது.
இருநாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால எல்லைப் பிரச்னைகள் திடீரென மோதலாக வெடித்திருக்கிறது. ஜூலை 24-ம் தேதி கம்போடியா பீரங்கி மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்து வான்வழி தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
தாக்குதல்களில் 8 வயது சிறுவன் உட்பட தாய்லாந்து குடிமக்களும் ஒரு ராணுவ வீரர்களுமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் 14-க்கும் மேற்பட்ட வீரர்களும் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தின் நான்கு எல்லை மாகாணங்களில் இருந்து சுமார் 1,38,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
கம்போடியாவில் ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சிலர் காயமடைந்துள்ளனர், முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. ஒட்டார் மீஞ்சே மாகாணத்தில் இருந்து 1500 குடும்பங்கள் இடம்பெயரவைக்கப்பட்டுள்ளனர்.
இருநாடுகளும் முதலில் தாக்குதல் நடத்தியதாக ஒருவர் மற்றொருவரை குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த மே மாதம் ஒரு கம்போடிய வீரர் தாய்லாந்து ராணுவத்தால் சுடப்பட்டதைத் தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது மோதல் இதுவாகும். ஜூலை 16 மற்றும் 23-ல் தாய்லாந்து வீரர்கள் கண்ணிவெடியில் சிக்கினர். இரண்டாவது சம்பவத்தில் 5 தாய் ராணுவ வீரர்கள் காயமடைந்தது மோதல் தீவிரமடைய உடனடிக் காரணமாக அமைந்தது.
⏱ . This is what it looks like.
— Bangkok Community Help Foundation (@BKK_community) July 25, 2025
Homes destroyed.
.
No school. No work. No safety.
♀️ Children running. Mothers crying. Grandparents sleeping on mats.
Over 50,000 people evacuated from Thai villages.
Our focus now is the… pic.twitter.com/8uDtESsZz6
இரு நாடுகளும் ராஜாந்திர உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்தன. தூதர்களைத் திரும்பப் பெற்றன. கம்போடியா, சர்வதேச சட்டங்கள் மற்றும் தாய்லாந்தின் இறையாண்மையை மீறியுள்ளதாக ராயல் தாய் அரசாங்கம் தெரிவித்தது.
ஆனால் கம்போடியா அரசாங்கம் தாய்லாந்தின் கூற்றை புறக்கணித்து, கண்ணிவெடி சம்பவத்துக்கு பொறுப்பேற்க மறுத்தது. கண்ணி வெடிகள் 20ம் நூற்றாண்டு போரின்போது புதைக்கப்பட்டதாக இருந்திருக்கலாம் எனக் கூறியது. கம்போடியா பீரங்கி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய தாய்லாது இராணுவம், F-16 விமானத்தைப் பயன்படுத்தி கம்போடியாவின் இராணுவ தளங்களைத் தாக்கியிருக்கிறது.
Another war erupts.
— Zohran Mamdani (@zohranmamdani) July 24, 2025
After: Russia–Ukraine | Israel–Palestine | Israel–Iran | India–Pakistan
Now:
Thailand vs Cambodia
Royal Thai Air Force has launched airstrikes, destroying at least two Cambodian military positions — including a brigade HQ.
The world is on fire. pic.twitter.com/4ZMmKj5vYn
Thailand vs Cambodia - மோதலுக்கு காரணமான இந்துக் கோவில்!
ஜூலை 24ல் முதல் தாக்குதல் கெமர் (கம்போடிய மொழி) இந்து கோவிலான பிரசாத் தா முயன் தோமில் நடந்திருகிறது.
பின்னர் எல்லையில் 6 இடங்களில் மோதல்கள் வெடித்துள்ளன. இரண்டு நாடுகளுமே தங்களது எல்லை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கிலேயே ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகக் கூறியிருக்கின்றன.
இரு நாடுகளும் அரசியலமைப்பு முடியாட்சியைப் பின்பற்றக் கூடியவை. இந்த மோதல் அதன் காலனியத்துவ வரலாற்றிலும் ஓர் இந்து கோவிலிலும் நிலைகொண்டுள்ளது. மோதலுக்கான பின்னணியை விரிவாக பார்ப்போம்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் புத்த மதம், கலாச்சாரத்துடன் 817 கி.மீ எல்லையையும் பகிர்ந்துகொள்கின்றன. தாய்லாந்தின் சுரின் மாகாணம் மற்றும் கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே மாகாண எல்லையில் அமைந்துள்ளது பிரசாத் தா முயென் தாம் கோவில்.
7-ம் ஜெயவர்மன் என்ற கெமர் மன்னன் எழுப்பிய இந்த கோவில் மணற்கற்களால் ஆனது. 1000 ஆண்டுகள் பழமையான இதில் சிவலிங்கம் மற்றும் நூலகமும் உள்ளது. இந்த வளாகத்தில் பயணிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் மகாயான பௌத்த மதத் தளமான பிரசாத் தா முயென் மற்றும் உள்ளூர் சமூகத்தினருக்கான மருத்துவமனை ஆலயமான பிரசாத் தா முயென் டோட் ஆகியவையும் உள்ளன.
மேலும் இதன் அருகில் உள்ள பிரேஹ் விஹார் கோவில்கள் நீண்டநாட்களாக தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே மோதலுக்கு காரணமாக இருந்துவருகின்றன. இரு நாடுகளும் இந்த கோவில்களுக்கு உரிமை கொண்டாடுகின்றன.
மே மாதம் நடந்த தாக்குதலும்... தாய்லாந்து அரசியல் சலசலப்பும்
கடந்த மே மாதம் நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா, கம்போடிய ஜனாதிபதி ஹுன் சென் உடன் தொலைபேசியில் உரையாடினார். அந்த உரையாடல் பொதுவெளியில் கசிந்தது. அதில் ஷினவத்ரா, தனது சொந்த நாட்டு ராணுவத்தின் நடவடிக்கையை இழிவாக பேசியதாக எதிர்ப்புகள் எழவே, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதன்பிறகு தாய்லாந்தில் பெரும் தேசியவாத பிரசாரங்கள் மேகொள்ளப்பட்டு ஷினவத்ராவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஆளும்கட்சியின் முக்கிய கூட்டாளி கூட்டணியிலிருந்து வெளியேறியது.
அடுத்தடுத்து இராணுவ சூழல் மாறியதனால் மாணவர்கள் மற்றும் மருத்துவ நோயாளிகள் தவிர அனைத்து பார்வையாளர்களும் எல்லையைக் கடப்பது தடைசெய்யப்பட்டது. தற்போது எல்லையில் மோதல் நடைபெறும் பகுதிகளில் உள்ள மக்கள் ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பதிலுக்கு கம்போடியா தாய்லாந்து திரைப்படங்கள், இணையதள இணைப்புகளைத் தடை செய்துள்ளது. எண்ணெய், எரிவாயு, காய்கறி, பழங்கள் இறக்குமதியையும் தடை செய்துள்ளது.
காலனியத்துவ வரைபடத்தால் வந்த மோதல்...
உலகப் புகழ்பெற்ற அங்கோர்வாட் கோவிலும் பிரேஹ் விஹார் கோவில்களும் கம்போடிய கெமர் பேரரசு தென்கிழக்கு ஆசியாவில் மிகப் பெரிய சக்தியாக இருந்தபோது (பொ.ஆ 9-ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை) கட்டப்பட்டன.
பொ.ஆ 6-ம் நூற்றாண்டு முதல் சீனாவில் இருந்து கம்போடிய பகுதிகளுக்கு குடியேறிய தாய் இனத்தவர்கள் சுகோதை ராச்சியத்தைத் தோற்றுவித்தனர். மேற்கு கம்போடிய பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றி வந்த சுகோதை ராச்சியம், பிரேஹ் விஹார் மற்றும் பிரசாத் தா முயென் தாம் கோவில்கள் இருக்கும் பகுதிகளைக் கைப்பற்றியது.
அப்போது முதல் சியாம் (தாய்லாந்து) மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்னைகள் இருந்துவருகிறது. கம்போடியா கெமர் பேரரசின் சரிவுக்குப் பிறகு வரலாற்றில் சியாம் மற்றும் வியட்நாம் நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.
18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கம்போடியா சியாம் மற்றும் வியட்நாமின் இடையே ஒரு துல்லியமற்ற அதிகாரத்தைப் பகிரும் நாடாக மாறியது.
1794-ல், சியாம் கம்போடிய மன்னர் எங்ஙை ஆதரவளித்து, பட்டாம்பாங் மற்றும் சீயெம் ரீப் மாகாணங்களை கைப்பற்றியது. 1830களில், வியட்நாம் கம்போடியாவை நேரடியாக ஆள முயன்றபோது, சியாமிய-வியட்நாமிய போர் (1831–1834) ஏற்பட்டது. இதில் வெற்றிபெற்று சியாமின் கை ஓங்கியது.
தென்கிழக்கு ஆசியாவில் காலனிய ஆட்சியின் கீழ் வராத நாடாக இருப்பது சியாம். 1863-ல், கம்போடிய மன்னர் நோரோடோம், சியாம் மற்றும் வியட்நாமின் ஆதிக்கத்திலிருந்து தப்பிக்க பிரான்சின் பாதுகாப்பை நாடினார். இதன் விளைவாக பிரான்ஸ் கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளின் மீதான கட்டுப்பாட்டை இழந்தது.
1907-ம் ஆண்டு பிரான்ஸ் உருவாக்கிய வரைபடங்கள் பிரேஹ் விஹார் கோவில்களை கம்போடியாவின் எல்லைக்குள் கொண்டுவந்தது. இந்த வரைபடத்தில் பிரசாத் தா முயென் தாம் கோவில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்கிறது தாய்லாந்து.
காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பல நாடுகளும் துல்லியமற்ற எல்லைகளால் அடிக்கடி சிக்கலுக்கு ஆளாகின்றன. ஆப்பிரிக்க நாடுகளுக்குள் எழும் எல்லை மோதல் இவற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை மீறும் தாய்லாந்து!
1953-ம் ஆண்டு கம்போடியா பிரான்ஸிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு பிரேஹ் விஹார் கோவில்கள் மீண்டும் மோதலுக்கு வழிவகுத்தன. 1962-ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் அந்தக் கோவில் கம்போடியாவுக்கு சொந்தமானது எனத் தீர்ப்பளித்தது. எனினும் அருகில் உள்ள 4.6 சதுர கிலோமீட்டர் பரப்பின் எல்லை தெளிவாக வரையறுக்கப்படாதது தாய்லாந்து மீண்டும் மோதலில் ஈடுபட வழிவகுத்தது.
2008-ம் ஆண்டு யுனெஸ்கோ பிரேஹ் விஹார் கோவிலை சர்வதேச பாரம்பரிய தளமாக அறிவித்தபோது இரு நாடுகளிலும் தேசியவாத உணர்வுகள் எழுந்தன. விளைவாக, இருவரும் கோவிலுக்கு உரிமை கோர 2008 முதல் 2011 வரை பல்வேறு துப்பாக்கிச்சூடுகள் நடைபெற்றன.
2011-ல் மீண்டும் கம்போடியாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது சர்வதேச நீதிமன்றம். ஆனாலும் எல்லைப் பிரச்சனை தீர்க்கப்படவில்லை.
தற்போது, மே மாதம் இரு நாட்டு ராணுவமும் மோதலில் ஈடுபட்டதன் தொடர்ச்சியாக ஜுலை 24-ல் மீண்டும் பிரேஹ் விஹார் கோவிலின் எல்லைப்பகுதியில் மோதல் நடைபெற்றுள்ளது.

தேசியவாதத்தை தூண்ட நடைபெறும் மோதலா?
கம்போடியாவில் அரசருக்கு பெரிய அளவில் செல்வாக்கோ, அதிகாரமோ கிடையாது. கிட்டத்தட்ட கம்போடிய மக்கள் கட்சி (CPP) ஒரே கட்சியாக ஆதிக்கம் செலுத்துகிறது. எதிர்க்கும் கட்சிகள் அதிகாரத்தால் ஒடுக்கப்பட்டு வருகின்றன.
நீண்டகாலமாக கம்போடியாவை ஆட்சி செய்துவந்த ஹுன் சென் பிரதமர் பதவியை கடந்த 2023-ம் ஆண்டு அவரது மகன் ஹுன் மானெட்டுக்கு விட்டுக்கொடுத்தார். ஆனாலும் தொடர்ந்து செனட் தலைவராக அவரே செல்வாக்கு செலுத்துகிறார்.
ஹுன் மானெட் அவரது தந்தையின் நிழலிலிருந்து ஆட்சி செய்யும் ஆளுமையற்ற பிரதமராக இருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தேசியவாத பிரச்சாரங்களை மேற்கொண்டு தனது மகனின் செல்வாக்கை உயர்த்த ஹுன் சென் முயற்சிக்கலாம் என தி கார்டியன் வலைத்தளத்தில் சர்வதேச நெருக்கடி குழுவின் மூத்த ஆய்வாளர் மாட் வீலர் தெரிவித்திருக்கிறார்.

பொருளாதார பிரச்னைகளிலுருந்து திசை திருப்பும் முயற்சி
வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இரண்டு நாடுகளும் அமெரிக்காவின் 36% வரிவிதிப்பை எதிர்கொள்வதால் மக்களை பொருளாதர பிரச்னைகளிலிருந்து திசைதிருப்பும் முயற்சியாகவும் இந்த மோதல் நீட்டிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
மோதலை நிறுத்த தடையாக இருக்கும் தாய்லாந்து அரசியல் சூழல்
மே மாதம் நடந்த தாக்குதல் மற்றும் தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டது, அங்கே அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக எல்லைப் பிரச்னைகளில் ஆளும்கட்சி தீவிரமாக செயல்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.
வெளியான ரெகார்டிங்கில் அவர் கம்போடியாவின் ஜனாதிபதியை 'அன்கிள்' என அழைப்பதுடன் 'உங்களுக்கு என்ன தேவையோ அதை நான் பார்த்துக்கொள்கிறேன்' என்றும் பேசியிருக்கிறார். பேடோங்டார்ன் ஷினவத்ரா முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகள் ஆவார். 38 வயதிலேயே பிரதமரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து அரசியலில் செல்வாக்கு மிக்க நபராக இருக்கும் ராணுவ தளபதி குறித்து ஷினவத்ரா இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. ஹுன் சென் ஷிவர்த்தனா குடும்பத்தின் குறிப்பாக அவரது தந்தையின் நீண்டகால நண்பர் என்பதால், அவர் நாட்டின் நலன்களை விட தனது தனிப்பட்ட தொடர்புகளையே முன்னிலைப்படுத்துவதாக விமர்சனங்களை எதிர்கொண்டார்.
தற்போது அவர்களது பியூ தாய் கட்சியின் செல்வாக்கு கடுமையாக சேதமடைந்துள்ளது. இராணுவம் சொல்வதற்கு தலையாட்டுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது எல்லைப் பிரச்னையில் விட்டுக்கொடுத்துப்போவது தாய்லாந்து அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
போரை முன்வந்து நிறுத்தும் தரப்பு நிச்சயம் உள்நாட்டில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் என்பதால் சுமூகமான பேச்சுவார்த்தை சுலபமானதாக இல்லை. இது ஒரு இந்து கோவில் மீதான எல்லை உரிமைக்காக நடத்தப்படும் மோதல் என்பதைத் தாண்டி, இரு வாரிசு அரசியல் தலைவர்கள் தங்கள் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யும் போராட்டமாகவே சர்வதேச தளத்தில் பார்க்கப்படுகிறது.

எப்படி தீர்வு காணப்படும்?
தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு (ஆசியான்) தலைவராக இருக்கும் மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிம், தாய்லாந்து மற்றும் கம்போடியாவை தாக்குதலிலிருந்து "பின்வாங்க" அழைப்பு விடுத்தார்.
ஆனால் இரண்டு நாடுகளிலும் ஆசியானின் பேச்சு எடுபட வாய்ப்பில்லை எனவும், இரு நாடுகளிலும் செல்வாக்கு செலுத்தும் சீனா மத்தியஸ்தம் செய்யவது மட்டுமே மோதலை முடிவுக்கு கொண்டுவரும் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சீனா தாய்லாந்தை விட கம்போடியாவுக்கு ஆதரவளிக்கக் கூடும் என்பதால் தாய்லாந்து முழுமனதோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வாய்ப்பில்லை. மேலும் தென் கிழக்கு ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் பரவுவதை அண்டை நாடுகள் விரும்பாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து தரப்பில், "மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவையில்லை" எனக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தம் செய்யும் விருப்பத்தையும் புறக்கணித்துள்ளனர்.
தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாசாய், பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன்பு சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். தாய்லாந்து அரசியலில் பியூ தாய் கட்சியின் மதிப்பைத் திரும்பப் பெறும் வரையில் இந்த போரை நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கம்போடியா பிரதமர் ஹன் மானெட், நெருக்கடியைப் பற்றி விவாதிக்க அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கோரியுள்ளார். அவர் தாய்லாந்தை கம்போடியா தூண்டவில்லை என்றும் அந்த நாடு தானாகவே ராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மோதலை இதுவரையில் இரண்டு நாடுகளும் போராக அறிவிக்கவில்லை. போரை இருவரும் விரும்பாத சூழலில் ஆசியான், ஐநா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா என ஏதேனும் ஒரு சக்தியின் முன் பேச்சுவார்த்தை நடைபெறக் கூடும். மோதல் முடிக்கப்பட்டாலும் நீண்டநாள் தொடரும் எல்லைப் பிரச்னை ஒட்டுமொத்தமாக தீர்க்கப்படுமா என்பது பெரும் கேள்விக்குறியே!