The Hunt: 'ராஜீவுக்குப் பிறகு 'ஜெ'வை கொல்ல சதி... ஏன் இந்த வன்மம்?' - வன்னி அரசு
ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்தி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்கூணூரின் 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' வெப் சீரிஸ்.
புலனாய்வு பத்திரிகையாளர் அனிருத்யா மித்ரா எழுதிய 'Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீரீஸில் வரும் காட்சிகள் விடுதலைப் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு.
ஊடகங்கள் மூலம் நச்சுக்கருத்தைப் பகிரும் பாஜக அரசு!
வன்னி அரசு எழுதியுள்ள 'எச்சரிக்கை' பதிவில், ""விடுதலைப்புலிகள் இயக்கம் இப்போது அழிக்கப்பட்டு விட்டது”என மண்ணில் முத்தமிட்டு கடந்த ஆண்டு 2009 ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்தார் சிங்கள தேசத்தின் முன்னாள் சனாதிபதி ராஜபக்சே.
ஆனாலும் விடுதலைப்புலிகள் முன்னெடுத்த 'தமிழர் தாகம் தமிழீழ தாயகம்' எனும் முழக்கம் அடுத்தடுத்த தலைமுறைக்கு போய் சேர்ந்திடக் கூடாது என்பதற்காக இந்திய ஒன்றிய பாஜக அரசு பல்வேறு உத்திகளை கையாளுகிறது.
அதில் தற்போது ஊடகங்கள் மூலமாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான நச்சுக்கருத்தியலை பரப்பி வருகிறது. குறிப்பாக திரைத்துறையை விடுதலைப்புலிகளுக்கு எதிராக திருப்பியுள்ளது.

நடப்பாண்டான 2025 ஆம் ஆண்டே அந்த நச்சுக்கருத்தியலை தொடங்கியுள்ளது பாஜக கும்பல். கடந்த 2025 ஏப்ரல் 10 அன்று இந்தி நடிகர் சன்னி தியோல் நடித்த #JAAT திரைப்படம் முழுக்க விடுதலைப்புலிகளுக்கு எதிரான பரப்புரை செய்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதியாக இருந்த ஒருவன் இந்தியாவில் உள்ள ஆந்திராவுக்குள் ஊடுருவி கற்பழிப்பு, படுகொலைகள் என பயங்கரவாத செயல்களை செய்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது, அப்பாவி கிராம மக்களை அச்சுறுத்தி தினமும் பெண்களை அனுபவிப்பது போல தமது நஞ்சை கக்கியுள்ளது பாசிசக்கும்பல்." எனக் கூறியுள்ளார்.
விடுதலை ஆனவர்களையும் குற்றவாளிகளாக காட்டுவது இன வன்மம்!
"அதே போலத்தான் இப்போது Sony Liv ott தளத்தில் வந்துள்ள The hunt: the Rajiv Gandhi Assassination case எனும் வெப் தொடர் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் நஞ்சை கக்கியுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட எல்லோரும் விடுதலை ஆன பிறகும் அவர்களை குற்றவாளிகளாக காட்டுவது எத்தனை இன வன்மம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
பேரறிவாளன் பேட்டரி வாங்கிக்கொடுத்ததாகத்தான் குற்றச்சாட்டு. ஆனால் இந்த தொடரில் Bomb maker என்றே பேரறிவாளனை காட்சிப்படுத்துகிறார்கள்.
ஜெயின் கமிசனில் ராஜீவ் கொலை தொடர்பாக சந்திராசாமி போன்றோரின் தொடர்புகள் இருப்பதையும் சர்வதேச சதி இருப்பதையும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால், இந்த தொடர் முழுக்க ராஜீவை கொன்றது விடுதலைப்புலிகள் என்றே உறுதிப்படுத்துகிறது.
அதுமட்டுமல்லாது, ராஜீவ் படுகொலைக்கு பிறகு ஜெயலலிதாவை கொல்லப்போவதாக சிவராசன், பேபி அண்ணாவிடம் கதைப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது பச்சை அயோக்கியத்தனம். ஜெயின் கமிசனிலோ அல்லது சிபிஐ இயக்குனர் திரு. கார்த்திகேயன் விசாரணை அறிக்கையில் கூட ஜெயலலிதா பெயர் குறிப்பிடப்படவில்லை. அப்படி இருக்கும் போது எதற்காக இத்தனை வன்மத்தை கட்டமைக்க வேண்டும்?" என்றும் எழுதியுள்ளார்.
தமிழீழ விடுதலையை தீவிரமாக முன்னெடுப்போம்!
"புலனாய்வு பத்திரிகையாளர் அனிருத்யா மித்ரா எழுதிய 90 Days எனும் நூலை வைத்து இயக்கியிருக்கிறார் நாகேஷ் குக்கனூர்.
சிவராசன் எப்போது பார்த்தாலும் சிகரெட் குடிப்பது போல காட்டுவதன் மூலம் விடுதலைப்புலிகளை ஒழுக்கமின்மையோராக காட்டுவதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது.
#விடுதலைப்புலிகள் தேசிய இன விடுதலைக்காக போராடியவர்கள். அப்படிப்பட்ட உயரிய நோக்கத்துக்காக லட்சக்கணக்கில் தங்களை தியாகம் செய்தோரை இழிவு படுத்துவது இனப்பகையே அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
எத்தனை நச்சுக் கருத்தியல் மூலம் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்த முனைந்தாலும் தமிழீழ விடுதலை தாகத்தை தடுக்க முடியாது. விடுதலைப்புலிகள் ஆதரவையும் முடக்க முடியாது.
விடுதலைச்சிறுத்தைகள் தமிழீழ விடுதலையை இன்னும் தீவிரமாக முன்னெடுப்போம்! இப்படியான நச்சுக்கருத்தியலை புறக்கணிப்போம்!" என வலியுறுத்தியுள்ளார் வன்னி அரசு.