Vignesh Putur: `ஆட்டோ டிரைவரின் மகன் டு MI நட்சத்திரம்' -CSK வீரர்களுக்கு பயம் காட்டியவனின் கதை
ஐபிஎல் 2025ன் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி இன்று நடைபெற்றது.
மும்பை அணியின் தோல்வியைக் கடந்து, தோனியின் என்ட்ரியைத் தாண்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் இளம் வீரர் விக்னேஷ் புத்தூர்.
தான் வீசிய முதல் ஓவரிலேயே சென்னை அணியின் வெற்றிக்கு நாட்டப்பட்ட அடிக்கல் போல உறுதியாக நின்ற கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்டை அசைத்துப்பார்த்திருக்கிறார் விக்னேஷ்.

"மும்பை அணி நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது. எங்களின் Scouting குழு சீசன் இல்லாத 10 மாதங்களும் இப்படியான இளம் வீரர்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறது.எங்களின் திறன் தேடல் குழுவின் வெற்றிதான் விக்னேஷ் புத்தூர். போட்டி கடைசி வரை சென்றால் டெத்தில் அவருக்கு ஒரு ஓவரை கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவரின் ஒரு ஓவரை மீதம் வைத்திருந்தேன்." - என நெகிழ்ந்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.
தனது பந்துவீச்சில் சிவம் துபே, தீபக் ஹுடா என சிஎஸ்கேவின் நம்பிக்கை நாயகர்களை சிக்ஸர் ஆசைகாட்டி சிக்கலில் சிக்கவைத்தார்.
24 வயது இடது கை சுழற்பந்துவீச்சாளர், லீடிங் பேட்ஸ்மேன்களை வீழ்த்தியிருக்கிறார், ஃபீல்டிங்கிலும் கலக்கியிருக்கிறார், இந்திய அணிக்காக விளையாடும் திறம் கொடண்டவர், பார்த்தால் பக்கத்துவீட்டு பையன் போல இருக்கும் இந்த விக்னேஷ் புத்தூர் யார்?
ஆட்டோ டிரைவர் மகன் டு அசத்தலான பௌலர்
விக்னேஷ் புத்தூர்
முதல் மேட்சிலேயே சென்னை ரசிகர்களின் விரோதத்தை சம்பாதித்துக்கொண்ட விக்னேஷ், நம் பக்கத்து மாநிலத்துக்காரர்!
கேரளாவின் மலப்புரம் மாவடடம், பெரிந்தல்மன்னா என்ற பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரின் தந்தை சுனில் குமார் ஒரு ஆட்டோ ஓட்டுநர், தாய் பிந்து இல்லத்தரசி.
எளிய பின்னணியில் இருந்து வந்தாலும், சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீதிருந்த ஆர்வம் அவரைக் கைப்பிடித்தது கூட்டிச் சென்றுள்ளது.
Excited for what's coming!
— Mumbai Indians (@mipaltan) November 29, 2024
Welcome to the FALY, Vignesh Puthur#MumbaiMeriJaan#MumbaiIndians#TATAIPLAuctionpic.twitter.com/zoJ6yrZWiY
உள்ளூர் கிரிக்கெட் பயிற்சியாளர் விஜயன் என்பவரிடம் பயிற்சி பெற்ற விக்னேஷ், U-14, U-19, and U-23 போட்டிகளில் கேரள மாநிலத்துக்காக விளையாடியுள்ளார்.
30 லட்சத்துக்கு ஏலம் எடுத்த மும்பை இந்தியன்ஸ்
ஆரம்பத்தில் மீடியம் பேஸ், ஸ்பின் போட்டுவந்த விக்னேஷ் உள்ளூர் கிரிக்கெட் வீரர் ஒருவரின் ஆலோசனையைத் தொடர்ந்து லெக் ஸ்பின் போட தொடங்கியதாகக் கூறியிருக்கிறார்.
கேரளா கிர்கிக்கெட் லீக் தொடரில், ஆலப்பே ரிப்பிள்ஸ் அணிக்காக விளையாடியபோது கிரிக்கெட் வடடாரங்களில் இவரது திறமை கிசுகிசுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு பிரீமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார்.

படிப்படியாக வளர்ந்து ஐபிஎல்லில் அடிப்படை விலையான 30 லட்சத்துக்கு மும்பை அணியால் ஏலத்தில் எடுக்கப்படடார். முதல் போட்டியில் முதன்மை பௌலர் பும்ரா, ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், இவரது திறமைக்கான மேடையை சரியாக பயன்படுத்தி சர்ப்ரைஸ் செய்துள்ளார்.
இந்த ஐபிஎல்லில் ஜொலிக்கும் கேரளத்து நட்சத்திரங்களில் பிரகாசமானவராக இருக்கப்போகிறார் விக்னேஷ், இதற்கு சாட்சியாக, "எங்களின் திறன் தேடல் குழுவின் வெற்றிதான் விக்னேஷ் புதூர்." எனப் பெருமையாக பேசியுள்ளார் கேப்டன் சூர்ய குமார் யாதவ்! ஆட்டம் முடிந்ததும் விக்னேஷைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டியிருக்கிறார் தோனி