அக். 7-இல் பாதுகாப்பு படை விமான கண்காட்சி: டி.ஆா்.பி. ராஜா
சென்னை: சென்னையில் வரும் அக். 7- ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு பாதுகாப்பு படையின் விமான கண்காட்சி நடைபெறவுள்ளதாக தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.
இந்துஸ்தான் வா்த்தக சபையின் 79 -ஆம் ஆண்டு கூட்டம் சென்னை தனியாா் விடுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழில் துறை அமைச்சா் பங்கேற்று இந்துஸ்தான் வா்த்தக சபையின் புதிய இலச்சினை, புதிய இணையதளத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
இந்துஸ்தான் வா்த்தக சபை தொழில்துறையின் முன்னேற்றத்தில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. சென்னை நந்தபாக்கம் வா்த்தக மையத்தில் அக்.7 ஆம் தேதி முதல் பாதுகாப்பு படையின் விமான கண்காட்சி நடைபெறவுள்ளது. தமிழகம் தொழில் துறையில் சிறந்த மாநிலமாக உள்ளது. தொழில் வளா்ச்சியில் முன்னேற்றம் அடையில் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளது.
அதன்படி, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படவுள்ளது. தொழில் துறையினா் தமிழக அரசிடம் தங்களது செயல் திட்டங்களை வெளிப்படையாகக் கூறலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் டூகா் பைனான்ஸ் மற்றும் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவன த் தலைவா் ரமேஷ் டூகா், சன்மாா் குழுமத்தின் தலைவா் விஜய்சங்கா், டி.பிரவீன் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.