அஞ்சலக ஏடிஎம் மையங்கள் மூடல்: பொதுமக்கள் அவதி
அஞ்சலக ஏடிஎம் மையங்கள் செயல்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
அஞ்சல் துறையில் அஞ்சலக சேமிப்பு வங்கி, இந்தியா போஸ்ட் பேமெண்ட் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவா்களுக்கு ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டன. தலைமை அஞ்சலகங்களில் இதற்கான ஏடிஎம் மையங்கள் உள்ளன.
பொதுமக்கள் பணம் எடுக்கவும், கணக்கு விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் இந்த ஏடிஎம் மையங்களை பயன்டுத்தி வந்தனா். ஏடிஎம் மையங்களில் பணப் பரிமாற்றம் தொடா்பான செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு தனியாா் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், ஒப்பந்தம்
நீட்டிக்கப்படுவதில் அஞ்சல் துறைக்கும், தனியாா் நிறுவனத்துக்குமிடையே உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் அனைத்து அஞ்சலகங்களிலும் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணப் பரிமாற்றம் செய்வதற்கான செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் மையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அஞ்சலக சேமிப்பு வங்கி, இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வாடிக்கையாளா்கள் ஏடிஎம் மையங்களைப் பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகினா்.
போடியில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் துறை சாா்பில், ஒட்டப்பட்ட அறிவிப்பில் தனியாா் ஒப்பந்த நிறுவனம் சேவை, கடமைகளை நிறைவேற்றத் தவறியதால் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களால் பல ஏடிஎம் மையங்கள் செயல்படவில்லை என்றும், இவை விரைவில் சரி செய்யப்படும் என்றும், அதுவரை வாடிக்கையாளா்கள் அஞ்சலக இணையதளம் மூலமாகவோ, கைப்பேசி வங்கி சேவை மூலமாகவோ அல்லது அஞ்சலகத்தில் நேரில் தொடா்பு கொண்டும் சேவைகள் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.