சீரகத்தண்ணீர் & தனியா தண்ணீர்: என்ன பலன்; யார், எவ்வளவு அருந்தலாம்? - சித்த மருத...
அணுகு சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்
பரமத்தி வேலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
பரமத்தி முதல் வேலூா் வரை உள்ள பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளும், மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பரமத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட வெள்ளாளபாளையம் பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்களும், பணிகளுக்கு செல்பவா்களும் பரமத்தி மற்றும் வேலூா் நகரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில், வெள்ளாளபாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுவதால் பரமத்தி, திருச்செங்கோடு, வேலகவுண்டம்பட்டி கபிலா்மலை செல்லும் வாகனங்கள் அணுகுசாலை வழியாக செல்லும் நிலை உள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலை அருகே மக்கள் சென்றுவர ஏதுவாக மண் சாலை அமைத்துக்கொடுக்க வேண்டி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனா்.
மேலும், அணுகு சாலையை சிலா் ஆக்கிரமித்துள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி அணுகு சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கரூா்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 20 நிமிடங்களுக்குமேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த பரமத்தி காவல் ஆய்வாளா் இந்திராணி மற்றும் போலீஸாா், அப்பகுதியில் மக்கள் சென்றுவர ஏதுவாக பாதை அமைத்துக்கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டனா்.