பணியிடமாறுதல் கலந்தாய்வு: 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு ச...
அணைக்கட்டு: `மகளிர் திட்ட அலுவலகத்திலேயே மகளிருக்கான கழிவறை சரியாக இல்லை...' - குமுறும் பெண்கள்!
வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு வட்டம், கெங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது மகளிர் திட்ட அலுவலகம். இந்த அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகள் நடைபெறுகின்றன. இதில் அணைக்கட்டு வட்டாரத்தில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்து கொள்கின்றனர். இந்த அலுவலகத்தில் கழிவறை இருந்தும் பயன்பாட்டில் இல்லாமல், தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பதாக அலுவலகத்திற்கு பயிற்சிக்கு வரும் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அருகிலேயே கெங்கநல்லூர் பகுதியில் மகளிர் திட்ட அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகள் தினம்தோறும் நடைபெறுகின்றன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/zkfhkmne/IMG20250208163229.jpg)
இந்த பயிற்சியில் தினமும் அணைக்கட்டு வட்டாரத்தை சுற்றியுள்ள 35 பெண்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த அலுவலகத்தில் சமீபத்தில் காலை உணவு திட்டம் குறித்தான பயிற்சியும் பெண்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதந்தோறும் நடத்தப்படும் கூட்டமும் இந்த அலுவலகத்தில் உள்ள பயிற்சி அறையில் வைத்து தான் நடத்துகின்றனர். இப்படி இந்த அலுவலகத்திற்கு அதிகமாக பெண்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு கழிவறை கட்டடம் இந்த அலுவலகத்தின் பின்புறம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கழிவறை பயன்பாட்டில் இல்லாமலும், தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பதாக அலுவலகத்திற்கு வந்து செல்லும் பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு கூட போதிய கழிவறை வசதி இல்லை. பெண்கள் கழிவறை இந்த நிலையில் இருக்க ஆண்கள் கழிவறை பயன்படுத்த முடியாதபடி புதர் மண்டி கிடக்கிறது.
இது குறித்து இந்த அலுவலகத்திற்கு பயிற்சிக்கு வந்து செல்லும் பெண்கள் கூறியதாவது, “மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் சுயதொழில் பயிற்சி என்பது ஒரு நாள் முழுவதும் நடக்கும். அப்படி ஒரு நாள் முழுவதும் பயிற்சி நடக்கும் போது நாங்கள் இயற்கை உபாதையை கழிக்க போதிய கழிவறை வசதி இந்த அலுவலகத்தில் இல்லை. பெண்கள் கழிவறையில் தண்ணீர் வசதி எதுவும் இல்லை. தண்ணீர் வருவதற்கான எந்த பைப் லைனும் இல்லை. ஒரு சில நேரத்தில் இந்த கழிவறை பயன்படுத்த முடியாதபடி பூட்டி வைத்து விடுகின்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/hmvv3cvz/IMG20250208163828.jpg)
இப்படி இருந்தால் நாங்கள் எப்படி இயற்கை உபாதையை கழிக்க முடியும். அணைக்கட்டு பகுதியில் இருந்து 3 கி.மீ தொலைவில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. இயற்கை உபாதை கழிக்க நாங்கள் அணைக்கட்டு பகுதிக்கு சென்று பொது கழிவறையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். பெண்களுக்கான அலுவலகம் ஆனால் பெண்களுக்கு சரியான கழிவறை வசதி இல்லை” என்று நம்மிடம் பேசினர்.
இது குறித்து அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டோம். இது குறித்து அவர் கூறியதாவது, “மகளிர் திட்ட அலுவலகத்தில் பெண்களுக்கான கழிவறை சரியாக இல்லை என்பது நீங்கள் சொல்லி தான் தெரியவருகிறது. அந்த அலுவலகத்தை தொடர்புகொண்டு பெண்களுக்கான கழிவறையை முறையாக சரி செய்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருகிறோம். ஆண்கள் கழிவறையினையும் சீரமைப்பு செய்து பயன்பாட்டில் கொண்டு வர முயற்சிகள் எடுக்கிறோம்” என்று கூறினார்.
அணைக்கட்டு வட்ட அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் மகளிருக்கான மகளிர் திட்ட அலுவலகத்திலேயே பெண்களுக்கான கழிவறை சரியான முறையில் இல்லாமல் இருப்பது, தண்ணீர் வசதி இல்லாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை உடனடியாக சீரமைப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அந்த பயிற்சிக்கு வரும் பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.