பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
இந்தியர்களுக்கு கை விலங்கு: "ட்ரம்ப் இந்தியாவுக்கு ஒத்துழைப்பை வழங்குவார்" - மௌனம் கலைத்த மோடி
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில், மிருகங்களைப் போல அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிய சம்பவம் இந்தியாவில் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
டொனால்டு ட்ரம்ப் கடந்த மாதம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டார். முறையான ஆவணங்கள் இல்லாத 15 லட்சம் பேர் அடங்கிய பட்டியல் முதல் கட்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் 205 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அண்மையில் ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் நடத்தப்பட்ட விதம் இந்தியர்களைக் கொதிப்படையச் செய்தது.
எந்தவித முறையான இருக்கை வசதியும் இல்லாத சி-17 ரக ராணுவ விமானத்தில் கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில், மிருகங்களைப் போல அவர்கள் உட்காரவைக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்காவில் டொனால்டு ட்ரம்ப் உடனான சந்திப்பில் இது குறித்துப் பேசியிருக்கும் பிரதமர் மோடி, "இந்தியாவின் இளைஞர்கள், ஏழை, எளிய மக்கள் குடியேற்றத்தில் ஏமாற்றப்படுகிறார்கள். பெரிய கனவுகளையும், வாக்குறுதிகளையும் நம்பி சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். பலர் ஏன் கொண்டு வரப்படுகிறார்கள் என்று தெரியாமல் கொண்டு வரப்படுகிறார்கள். பலர் மனித கடத்தல் முறை மூலம் கொண்டு வரப்படுகிறார்கள்.
இந்த மனிதக் கடத்தலை எதிர்த்துத்தான் எங்களின் பெரிய போராட்டம் இருக்கிறது. இந்த மனிதக் கடத்தல் அமைப்புகளுக்கு முடிவு கட்டுவதில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்குவார் என்று நாங்கள் நம்புகிறோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக இருந்து வருகின்றன. எல்லையின் மறுபக்கத்தில் உருவாகும் பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play