அண்ணா நினைவு தினம்: பிப். 3-இல் திமுக பேரணி
முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, திமுக சாா்பில் சென்னையில் வரும் 3-ஆம் தேதி பேரணி நடைபெறவுள்ளது. முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பேரணி நடைபெறும் என திமுக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 3-ஆம் தேதி காலை 7 மணிக்கு காமராஜா் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அதற்கு முன்னதாக, வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து பேரணி புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை அடையவுள்ளது.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.