அதானியின் ஊழலை மூடி மறைக்கும் பிரதமர் மோடி: ராகுல் காந்தி
தொழிலதிபர் அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதமர் நரேந்திர மோடி மூடி மறைப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சந்தித்த மோடி அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக உறவு, வரி விதிப்பு குறித்து விவாதித்தார்.
இதனைத் தொடர்ந்து, வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, “இந்தியா ஜனநாயக நாடு. நாங்கள் உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகப் பார்க்கிறோம். அனைத்து இந்தியர்களும் என்னுடையவர் என நான் நம்புகிறேன்” என்றார்.
இதையும் படிக்க | இந்தியாவுக்கு நிகரான அதிக வரியை அமெரிக்காவும் விதிக்கும்! டிரம்ப் எச்சரிக்கை
தொழிலதிபர் அதானியின் ஊழல் விவகாரம் குறித்து கேட்ட கேள்விக்கு, “இரு நாடுகளைச் சேர்ந்த இரு முக்கியத் தலைவர்கள் சந்திக்கும்போது இதுபோன்ற தனிப்பட்ட விவகாரங்களைப் பேசுவதில்லை” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராகுல் காந்தி விமர்சனம்
அவரின் இந்த பதிலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் தளப் பதிவில், “உள்நாட்டில் கேள்வி கேட்டால் அமைதியாகிவிடுவார். வெளிநாட்டில் கேள்வி கேட்டால் அது தனிப்பட்ட விஷயமாகிவிடும். அமெரிக்காவில் கூட பிரதமர் மோடி அதானியின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கிறார்.
பிரதமர் மோடிக்கு நண்பரின் பாக்கெட்டை நிரப்புவது ‘தேசத்தை கட்டியெழுப்புவது என்றால், ஊழல் செய்வதும் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதும் தனிப்பட்ட விஷயமாகிவிடுகிறது” என்று விமர்சித்துள்ளார்.